இவர்களால் இந்தியாவுக்கு பெருமை!


இவர்களால் இந்தியாவுக்கு பெருமை!
x
தினத்தந்தி 14 Dec 2021 7:58 PM GMT (Updated: 14 Dec 2021 7:58 PM GMT)

“இந்தியன் என்று சொல்லடா.. இதயம் குளிர பெருமைகொள்ளடா..” என்ற வகையில், உள்நாட்டில் வாழும் இந்தியர்களும், வெளிநாட்டில் புகழ் வீசிக்கொண்டிருக்கும் இந்தியர்களும், நம் நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள்.

“இந்தியன் என்று சொல்லடா.. இதயம் குளிர பெருமைகொள்ளடா..” என்ற வகையில், உள்நாட்டில் வாழும் இந்தியர்களும், வெளிநாட்டில் புகழ் வீசிக்கொண்டிருக்கும் இந்தியர்களும், நம் நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். உலகிலேயே பெரிய செல்வந்தர்களில் ஒருவரான ஏலன் ரீவ் மஸ்க் கூறும்போது, “இந்திய திறமைசாலிகளால் அமெரிக்கா பெரும் பலன் அடைந்துவருகிறது” என்று குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி செவ்வாய் கிரகத்தில் நாசாவின் செயற்கைகோள் இறங்கியதை உலகுக்கு அறிவித்தவர், அங்கு முக்கிய பொறுப்பில் இருக்கும் விஞ்ஞானி சுவாதி மோகன். அந்த விழாவிலேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், “சுவாதி மோகன், துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ், எனக்கு உரை எழுதும் வினய் ரெட்டி ஆகியோர் இந்த நாட்டுக்கு பெருமை சேர்க்கிறீர்கள்” என்று பாராட்டினார். “இளம் தலைமுறை விஞ்ஞானி” என்ற நட்சத்திர பெருமையை சுவாதி மோகன் பெற்றுள்ளார்.

ஜோபைடன் பதவியேற்றவுடன் 55 அமெரிக்கவாழ் இந்தியர்களை தன் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் நியமித்து வரலாறு படைத்தார். இப்போது சர்வதேச நிதியம் என்று கூறப்படும் “இன்டர்நேஷனல் மானிடரி பண்ட்” என்ற அமைப்பின் முதல் துணை மேலாண்மை இயக்குனராக 2-வது இடத்தில் கீதா கோபிநாத் என்ற பெண் பொருளாதார நிபுணர் நியமிக்கப்பட்டு, இந்தியாவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதித்துள்ளார்.

ஏற்கனவே, தலைமைப் பொருளாதார நிபுணராக அங்கு பணியாற்றிய கீதா கோபிநாத், மிகச்சிறந்த பொருளாதார நிபுணர். அவர், “கொரோனா பாதிப்புக்கு முடிவு கொண்டு வருவது எப்படி?” என்று எழுதிய அறிக்கை, உலகில் தடுப்பூசி போடுவதற்கு ஒரு இலக்கை நிர்ணயிக்க மிகவும் உதவியாக இருந்தது. தடுப்பூசி தயாரிப்பாளர்களும் பல தடைகளை தாண்ட உதவியாக இருந்தது.

சர்வதேச நிதியம் என்பது, உலகிலுள்ள அனைத்து நாடுகளின் பங்களிப்பு நிதியை வைத்து பல்வேறு அரசு திட்டங்களுக்கு நிதியளிக்கும் ஒரு அமைப்பாகும். இதன் உதவி எல்லா நாடுகளுக்கும் மிகவும் தேவையான ஒன்று. கொரோனா பாதிப்பால் உலகமே அதிர்ந்து நிற்கும் நிலையில், சர்வதேச நிதியத்தின் பங்கு அளப்பரியதாக இருக்கிறது. கீதா கோபிநாத்தின் பெற்றோர் டி.வி.கோபிநாத்-விஜயலட்சுமி ஆகியோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். மறைந்த கம்யூனிஸ்டு தலைவர் ஏ.கே.கோபாலனின் உறவினர்கள்.

கீதா கோபிநாத்தின் தலைமையின்கீழ் சர்வதேச நிதியம் புது பொலிவுபெறும் என்று உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. கீதா கோபிநாத் மட்டுமல்லாமல், சமீபத்தில் டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற பராக் அகர்வால், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், தொடர்ந்து அதன் தலைமை நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ள சுந்தர்பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெள்ளா, அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாந்தனு நாராயண், ஐ.பி.எம். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அரவிந்த் கிருஷ்ணா, பாலோ அல்டோ நிறுவன தலைமை செயல் அதிகாரி நிகேஷ் அரோரா, விஎம் வேர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ரங்கராஜன் ரகுராம், பிளெக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ரேவதி அத்வைதி என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.

இதைத்தவிர, பெப்சிகோ தலைமை செயல் அதிகாரியாக 12 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய இந்திரா நூயி என்று மேலும் பலர் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள்தான். உலகில் புகழ்பெற்ற நிறுவனங்களில் எல்லாம் இந்தியர்கள் தலைமை செயல் அதிகாரிகளாக திறம்பட பணியாற்றி இந்தியாவின் புகழ் கொடியை மேலும் உயர்த்தி வருகிறார்கள். இந்தியாவிலுள்ள அனைத்து இளைய சமுதாயத்தினருக்கும் பெரிய ஊக்கமாகவும், உத்வேகம் அளிப்பவர்களாகவும் இருக்கின்றனர். இந்தியர்களின் ஆற்றல் எவருக்கும் சளைத்ததல்ல, இளைத்ததல்ல என்பதை இந்த புகழ்மிக்க நட்சத்திரங்கள் ஒளிவீசி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Next Story