அனைத்து மொழிகளிலும் சிவில் சர்வீசஸ் தேர்வுகள்!


அனைத்து மொழிகளிலும் சிவில் சர்வீசஸ் தேர்வுகள்!
x
தினத்தந்தி 15 Dec 2021 8:08 PM GMT (Updated: 2021-12-16T01:38:41+05:30)

அரசு பணிகளில் முதன்மையான பணிகளுக்கு செல்லவேண்டும் என்றால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., போன்ற அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.

அரசு பணிகளில் முதன்மையான பணிகளுக்கு செல்லவேண்டும் என்றால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., போன்ற அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும். தமிழ்நாட்டில் இருந்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே இருக்கிறது. இதற்கு ஒரு காரணம் பணியிடங்கள் எண்ணிக்கையும் குறைந்து கொண்டிருக்கிறது.

2014-ம் ஆண்டு 1,246 பணி இடங்கள் இருந்தன. தமிழ்நாட்டை சேர்ந்த 112 பேர் தேர்ச்சி பெற்றனர். 2020-ம் ஆண்டு 761 பணி இடங்களுக்கு தேர்வு நடந்தது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 38 பேர் மட்டுமே தேர்வாகினர். இவ்வளவுக்கும் சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்த விழிப்புணர்வு தமிழக இளைஞர்களிடம் அதிகமாக இருக்கிறது. இந்த தேர்வை பொறுத்தமட்டில் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என்ற 3 தேர்வுகளிலும் வெற்றி பெறவேண்டும்.

முதன்மை தேர்வையும், நேர்முக தேர்வையும் தமிழிலேயே எழுதவும், பதிலளிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் முதல்நிலை தேர்வு என்று கூறப்படும் ‘பிரிலிமினரி’ தேர்வு வினாத்தாள்களில் தமிழ் இடம் பெறாதது, நமது மாணவர்கள் பெரும்பாலானவர்களை முதல்நிலை தேர்வில் தோல்வியடைய வைத்துவிடுகிறது. இந்த முதல்நிலை தேர்வு என்பது கொள்குறி வகை (அப்ஜக்டிவ் டைப்) வினாக்கள் கொண்டது. இந்த வினாத்தாளில் கேள்விகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே உண்டு, தமிழில் கிடையாது. ஒவ்வொரு கேள்வியிலும் 4 தெரிவுகள் இருக்கும். அதில் ஒன்றை ‘டிக்’ செய்தால் போதும். ஆனால் தமிழில் கேள்வி இல்லாததால் நமது மாணவர்கள் இதைத்தாண்டி செல்ல முடியவில்லை. இந்த முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றால்தான் அடுத்து முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) என்ற விரிவாக எழுத கூறுகிற எழுத்து தேர்வு இருக்கும். இதில் ஆங்கில மொழித்தாள் ஒன்று கட்டாயம் ஆங்கிலத்தில்தான் எழுதியாக வேண்டும். பிற தேர்வுகளை தமிழிலும் எழுதலாம். ஆனால் வினாத்தாள்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டும்தான் இருக்கும். இதில் தேர்வு பெற்றால்தான் நேர்முக தேர்வுக்கு செல்ல முடியும். நேர்முக தேர்வை முதலிலேயே தேர்வர் படிவத்தில் தெரியப்படுத்தி இருந்தால் தமிழில் எதிர்கொள்ளலாம்.

ஆக எந்த தேர்விலும் கேள்விகள் தமிழில் இருக்காது. இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தியில் வினாத்தாள் இருப்பதால் எளிதில் புரிந்துகொண்டு பதிலளிக்க வசதியாக இருக்கிறது. அதேபோல் ஆங்கிலத்தில் புலமை கொண்டவர்களாலும் இந்த தேர்வை எளிதில் எழுத முடியும். இதனால்தான் சமீபத்தில் மக்களவையில் கவிஞர் கனிமொழி எம்.பி. பேசும்போது, “சிவில் சர்வீசஸ் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் தங்களது முதற்கட்ட தேர்வுகளின்போது, பிரதான தேர்வை போல தங்களது விருப்ப மொழியின் கீழ் எழுத முடியாத நிலை உள்ளது. இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் 26 சதவீதம் பேர் மட்டுமே, ஆனால் தேர்வு முடிவில் இவர்களில் 59 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவதை காண முடிகிறது. மத்திய பணியாளர் ஆணையம் ரெயில்வே, வங்கி தேர்வுகள் என அனைத்துமே இந்தியில்தான் உள்ளன. இது இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. எனவே சிவில் சர்வீசஸ் தேர்வு உள்பட மத்திய அரசின் அனைத்து போட்டி தேர்வுகளையும் அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள அனைத்து மொழிகளிலுமே நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

கனிமொழி எம்.பி.யின் இந்த கோரிக்கை தமிழக மக்கள் அனைவரின் கோரிக்கையாகவும் இருக்கிறது. பதில் தருவோருக்கு புரிகிற மொழியில் கேள்வி கேட்பதுதான் இயற்கை நியதி. எனவே சிவில் சர்வீசஸ் வினாத்தாள்களில் ஆங்கிலம், இந்தி மொழி மட்டும் அல்லாமல், அனைத்து பிராந்திய மொழிகளையும் இடம்பெற செய்வது என்பது மத்திய தேர்வாணையத்தின் தலையாய கடமையாகும்.

Next Story