கொரோனாவோடு ஒமைக்ரானும் கால் பதித்தது


கொரோனாவோடு ஒமைக்ரானும் கால் பதித்தது
x

1918-ம் ஆண்டு ‘ஸ்பானிஷ் புளூ’ என்ற தொற்று காய்ச்சல் உலகையே உலுக்கியது. இந்த கொடிய தொற்றை நூறாண்டுகளுக்கு மேல் ஆகியும், உலகம் இன்னும் மறந்துவிடவில்லை.

1918-ம் ஆண்டு ‘ஸ்பானிஷ் புளூ’ என்ற தொற்று காய்ச்சல் உலகையே உலுக்கியது. இந்த கொடிய தொற்றை நூறாண்டுகளுக்கு மேல் ஆகியும், உலகம் இன்னும் மறந்துவிடவில்லை. அதே நிலைதான், கடந்த 2 ஆண்டுகளாக உலகத்தையே புரட்டிபோட்டு கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு, எத்தனை நூற்றாண்டுகளானாலும் உலக வரலாற்றில் பேசப்படுவதாக இருக்கும். இந்தநிலையில், உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் என்ற தொற்று கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு, இப்போது 77 நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் ஏறத்தாழ 80 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவின் பரவலை தமிழகத்தில் வெகுவாக குறைத்து கொண்டிருக்கும்நேரத்தில், ‘தலைவலி போய் திருகுவலி வந்தது’ என்று சொல்வதுபோல ஒமைக்ரான் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்று எவ்வளவோ எச்சரிக்கையோடு இருந்தும், கடந்த 10-ந்தேதி நைஜீரியாவிலிருந்து தோகா வழியாக வந்த 47 வயது ஆண் ஒருவருக்கு சற்று மரபியல் மாற்றம் இருந்ததால் பெங்களூருவிலுள்ள மரபணு பகுப்பாய்வு மையத்துக்கு அவரது சளி, ரத்தமாதிரிகள் அனுப்பப்பட்டன. நேற்றுமுன்தினம் அவருக்கு ஒமைக்ரான் என்று பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டது. அவருடன் வந்த 6 பேருக்கும் இதுபோல மரபியல் மாற்றம் இருந்தது. சோதனையில் இப்போது அந்த 6 பேருக்கும் ஒமைக்ரான் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் விமானத்தில் வந்த ராமாபுரத்தை சேர்ந்த ஒருவரும், அவரது குடும்பத்தினர் 4 பேருக்கும் ஒமைக்ரான் அறிகுறி இருப்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் காங்கோவில் இருந்து வந்த ஒரு பெண்ணுக்கும் மரபியல் மாற்றம் இருந்ததால் அவருடைய சளி, ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, அவருக்கும் ஒமைக்ரான் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. ஆக 12 பேருக்கு இப்போது ஒமைக்ரான் அறிகுறி ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் இருந்து வந்தவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள். ஒமைக்ரான் தொற்றை பொருத்தமட்டில் 2 டோஸ் தடுப்பூசி போட்டாலும் வராது என்று சொல்லமுடியாது. ஆனால் வந்துவிட்டால், அதனால் பாதிப்பு அதிகமாக இருக்காது. மருத்துவமனையில் ஆக்சிஜன் தேவையோ, தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவையோ இருக்காது. அதற்காக ‘இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது, வரலாறு காணாத வகையில் இது பரவிக்கொண்டிருக்கிறது, அடுத்தடுத்த உருமாற்றங்களையும் இது கொடுக்கிறது’ என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆரம்பத்தில் கொரோனா குறித்து பயந்து கொண்டிருந்த மக்களில் பெரும்பாலானோர் முககவசம் அணிவதே இல்லை. சமூகஇடைவெளியா அது என்ன? என்று கேட்கும்நிலையுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஒமைக்ரான் வராமல் தடுப்பதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்? என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில், ‘மருத்துவமனைகளில் ஒமைக்ரானை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கவேண்டும். படுக்கைகள், மருந்துகள், மருத்துவப்பணியாளர்கள் போதியஅளவில் இருக்கவேண்டும். எல்லாவற்றையும் நன்றாக பராமரிக்கவேண்டும். தடுப்பூசிபோடும் வேகத்தை அதிகரிக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தற்போது பொதுஇடங்களில் முககவசம், சமூகஇடைவெளியும் கடைப்பிடிப்பது மிகக்குறைவாக இருக்கும்நிலையில், அனைத்து துறைகள், தன்னார்வலர்களோடு இணைந்து முககவசம் அணிவது கட்டாயம் என்பதை நடைமுறைப்படுத்தவேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

இதேபோல், உலக சுகாதார டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில், ‘ஒமைக்ரான் இதுவரை நாம் பார்த்த தொற்றுகளைவிட மிகவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. நான் தெளிவாகச்சொல்ல விரும்புகிறேன். தடுப்பூசியால் மட்டும் இந்த இடர்பாட்டிலிருந்து எந்த நாட்டையும் காப்பாற்றிவிடமுடியாது. முககவசம், சமூகஇடைவெளி, காற்றோட்டம், கைகளைகழுவுதல் இல்லாமல் தடுப்பூசியால் பலனில்லை. இவையெல்லாவற்றையும் செய்யுங்கள். தொடர்ந்து கடைப்பிடியுங்கள். தீவிரமாக பின்பற்றுங்கள்’ என்று கூறியுள்ளார். ‘’தாமதப்படுத்தப்பட்ட பாதுகாப்பு, மறுக்கப்பட்ட பாதுகாப்பு’’ என்ற வகையில் அனைவருக்கும் தடுப்பூசி போடவேண்டும். அதற்கு மேலாக முககவசம் அணியவேண்டும் என்ற மருத்துவநிபுணர்களின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் மக்களுக்கு மீண்டும் இதன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். முககவசம் அணியவேண்டும் என்று சொல்லிப்பார்க்கலாம், கேட்கவில்லையென்றால் நடவடிக்கையெடுத்து அணியவைக்கவேண்டும் என்பதே மருத்துவர்களின் கோரிக்கையாக இருக்கிறது

Next Story