சிறு விவசாயிகளுக்கு பயனளிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை !


சிறு விவசாயிகளுக்கு பயனளிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை !
x
தினத்தந்தி 17 Dec 2021 8:27 PM GMT (Updated: 2021-12-18T01:57:39+05:30)

நாட்டின் மொத்த மக்கள்தொகையில், 50 சதவீதத்துக்கும் மேலானவர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கிறார்கள்.

நாட்டின் மொத்த மக்கள்தொகையில், 50 சதவீதத்துக்கும் மேலானவர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கிறார்கள். ஆனால், விவசாயிகளின் வாழ்வு வளமாக இருக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை. நிலமே கதி என்று, விதைப்பது முதல் அறுவடை வரை பாடுபட்டு உழைத்தாலும், தற்போது நெல் சாகுபடி செய்த பலர், கனமழையால் பயிர்கள் எல்லாம் மூழ்கிய நிலையில் பெரும் நஷ்டத்தை சந்திப்பதுபோல, இயற்கை பேரிடர்களை தாண்டித்தான் மகசூலை பார்க்க வேண்டியிருக்கிறது.

“விலை இருந்தால் விளைச்சல் இல்லை. விளைச்சல் இருந்தால் விலை இல்லை” என்பதே அவர்கள் வாழ்க்கையாக இருக்கிறது. நஷ்டத்தையே சந்தித்துவரும் விவசாயிகளில் பலர் விவசாயத்தை விட்டுவிட்டு, நகர்ப்புறங்களுக்கு வேலைதேடி செல்லும்நிலை இருக்கிறது. விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைத்தால், விவசாயம் தழைக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களில் வேலை தேடி அலையும் இளைஞர்களும் கிராமப்புறத்திற்கு விவசாயத்தை மேற்கொள்ளலாம் என்ற உறுதிப்பாட்டோடு வரும் சூழ்நிலை ஏற்படும். விவசாயத்தில் அதிக முதலீடு செய்து உற்பத்தியை பெருக்க வழிசெய்யும்.

இதனால்தான், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று டெல்லி எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வந்த நிலையில், சமீபத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடிய முதல் நாளிலேயே, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்துவிட்டாலும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம்வேண்டும் என்பது உள்பட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து நடத்தி அரசாங்கம் வழங்கிய கடிதத்துக்கு பிறகு போராட்டங்களுக்கு முடிவு கண்டார்கள்.

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறவேண்டும் என்பதில், கோதுமை பயிரிடும் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநில விவசாயிகள்தான் தீவிரமாக இருந்தார்கள். தமிழ்நாடு உள்பட மற்ற மாநில விவசாயிகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தந்தார்களே தவிர, அவர்கள் பெருமளவில் அதில் ஈடுபடவில்லை. ஆனால், குறைந்தபட்ச ஆதாரவிலை, குறு விவசாயிகளுக்கும், பெருமளவில் பயனளிக்கும் என்பதால், இந்த கோரிக்கைக்கு விவசாயிகளிடையே பெரிய ஆதரவு இருக்கிறது.

குறைந்தபட்ச ஆதாரவிலை என்பது முதன்முதலில் 1965-66-ம் ஆண்டு கோதுமைக்காக நிர்ணயிக்கப்பட்டது. இப்போது 23 விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்பட்டாலும், அதற்கு சட்டப்பூர்வமான ஒரு உத்தரவாதம் இல்லாததால் நடைமுறையில் இல்லை. கோதுமை, நெல்லுக்கு அரசின் கொள்முதல் நிலையங்கள் இருப்பதுபோல, எல்லா பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையில் கொள்முதல் மேற்கொள்வதற்காக வசதிகள் இல்லை. இந்த சட்டப்பூர்வ உத்தரவாதம் இருந்தால், விவசாயிகளும் கோதுமை, நெல்லைத்தாண்டி மற்ற பயிர் வகைகளை சாகுபடிசெய்ய முன்வருவார்கள்.

இந்தியாவில் சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் போன்றவற்றை பெருமளவு வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்கிறோம். 2020 அக்டோபர் முதல் 2021 செப்டம்பர் வரையிலான எண்ணெய் ஆண்டில், சமையல் எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக மட்டும் ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் கோடி மத்திய அரசு செலவழித்திருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலையை ஏற்கனவே நடைமுறையிலுள்ள23 விளை பொருட்களுக்கு மட்டுமல்லாமல், மற்ற பொருட்களுக்கும் நிர்ணயித்து அதை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வகைசெய்யும் வகையில், சட்டம் நிறைவேற்றி, அதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினால் மட்டுமே விவசாயிகளுக்கும் பலன்கிடைக்கும். எல்லோருமே பரவலாக எல்லா பயிர்களையும் சாகுபடி செய்ய முன்வருவார்கள்.

பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில், “குறைந்தபட்ச ஆதாரவிலையை மிகவும் பயனுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் ஆக்க குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழுவில் மத்திய அரசு, மாநில அரசுகள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாய பொருளாதார நிபுணர்களின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள்” என்று அறிவித்தார். அதன்படி, ஒரு குழு அமைப்பதற்காக 5 பேர்களை பரிந்துரைக்கும்படி வேளாண் அமைச்சகம் விவசாய சங்கங்களிடம் கேட்டு, இப்போது 5 பெயர்களும் அனுப்பப்பட்டுள்ளது. உடனடியாக இந்தக்குழு குறைந்தபட்ச ஆதார விலைக்காக ஒரு சட்டம் பிறப்பிக்க பரிந்துரைக்கவேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் விவசாயிகளுக்கு நிச்சயம் தேவை.

Next Story