திருமண வயதை முடிவு செய்வது அரசாங்கமா?, குடும்பமா?


திருமண வயதை முடிவு செய்வது அரசாங்கமா?, குடும்பமா?
x
தினத்தந்தி 20 Dec 2021 7:53 PM GMT (Updated: 2021-12-21T01:23:32+05:30)

கடந்த வாரம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இப்போது ஆண்களுக்கு இருப்பதைப்போல, பெண்களின் திருமண வயதையும் 21 ஆக உயர்த்த முடிவெடுக்கப்பட்டது.

கடந்த வாரம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இப்போது ஆண்களுக்கு இருப்பதைப்போல, பெண்களின் திருமண வயதையும் 21 ஆக உயர்த்த முடிவெடுக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. பால்ய விவாகத்தை தடுக்கும் வகையில் 1929-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சாரதா சட்டத்தில் பெண்களின் திருமண வயது 15 என்று நிர்ணயிக்கப்பட்டது. 1978-ம் ஆண்டு இந்தச்சட்டம் திருத்தப்பட்டு, பெண்களின் திருமண வயது 18, ஆண்களின் திருமண வயது 21 என்று உறுதிசெய்யப்பட்டது.

அந்த வகையில்தான், இந்து திருமண சட்டத்திலும், இந்திய கிறிஸ்தவர்கள் திருமண சட்டத்திலும், மணமகளின் வயது 18, மணமகனின் வயது 21 என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கான ஷரியத் சட்டத்தில், “ஆணும், பெண்ணும் பருவமடைந்தவுடன் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால், ஆண் சம்பாதிக்கும் திறன்படைத்தவராக இருக்கவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு மதங்களுக்கு இடையேயான திருமண சட்டத்திலும் ஆண் வயது 21, பெண் வயது 18 என்றுதான் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், குழந்தை திருமண தடைச்சட்டமும் இதே வயது வரம்பைத்தான் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த ஆண்டு பட்ஜெட் உரையின்போது, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், “பிரசவகால இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில், பெண்கள் தாய்மையடையும் வயதை நிர்ணயிக்க ஒரு பணிக்குழு அமைக்கப்படும்” என்றார். அதன்படி, சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி தலைமையில் 10 பேர் கொண்ட குழு கடந்த ஆண்டு ஜூன் 6-ந்தேதி அமைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி தனது சுதந்திர தின உரையில், “பெண்களின் சரியான திருமண வயதை நிர்ணயிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்தவுடன், முறையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்தார்.

இந்தநிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயா ஜெட்லி குழு, தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், “பெண் குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்கூடங்களுக்கு சென்றுவரும் வகையில், கல்விக்கான அணுகுமுறை மேம்படுத்தப்படவேண்டும். பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள், சானிடரி நாப்கின்கள் வழங்கப்படவேண்டும். பாலியல் கல்வியுடன் பெண்களுக்கு தொழிற்பயிற்சி, வாழ்வாதார வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்” என்று கூறிவிட்டு, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தவும் பரிந்துரை செய்திருந்தது.

இப்போது மத்திய அமைச்சரவை, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த முடிவு செய்திருக்கும் நிலையில், குழுவின் தலைவர் ஜெயா ஜெட்லியே, “நான் சொன்ன மற்ற பரிந்துரைகளை நிறைவேற்றாமல், திருமண வயதை உயர்த்துவதில் நியாயம் இல்லை. நல்ல சாலைகளோ, போக்குவரத்து விளக்குகளோ அமைக்காமல், போக்குவரத்து விதிகளை உருவாக்குவது போன்றதுதான் இது” என்று தெரிவித்துள்ளார்.

பெண்ணின் திருமண வயதை நிர்ணயிக்கும் முதல் உரிமை அந்த பெண்ணுக்கும், அவரது குடும்பத்துக்கும்தான் இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமையும், நிறுவனங்களை தொடங்கும் உரிமையும் 18 வயது நிரம்பியவர்களுக்கு வழங்கப்படுகிறது.

வளர்ந்த நாடுகளில், குறிப்பாக இங்கிலாந்தில் பெண்களுக்கான திருமண வயது 18 ஆக இருக்கிறது. அமெரிக்காவில் ஆணும், பெண்ணும் 18 வயதில் திருமணம் செய்துகொள்ளலாம். அங்குள்ள மாசசூசெட்ஸ் மாநிலத்தில் பெற்றோரின் ஒப்புதலுடன் 14 வயது ஆணும், 12 வயது பெண்ணும், மிச்சிசிபி மாநிலத்தில் 17 வயது ஆணும், 15 வயது பெண்ணும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருக்கிறது.

ஆக, திருமணம் என்பதை முடிவுசெய்வது, பெற்றோரும், திருமணம் செய்துகொள்ளும் ஆணும், பெண்ணுமே தவிர, அரசு அதில் தலையிடக்கூடாது என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. எனவே, மத்திய அரசாங்கம் இதுகுறித்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்ய எடுத்திருக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும். அப்படியே தாக்கல் செய்தாலும் நாடாளுமன்ற ஆய்வுக்குழுவின் பரிசீலனைக்கு விடவேண்டும் என்பதுதான் சரியாக இருக்கும் என்பது கோரிக்கையாக இருக்கிறது.

Next Story