சாலை விபத்து இல்லாத தமிழ்நாடு!


சாலை விபத்து இல்லாத தமிழ்நாடு!
x
தினத்தந்தி 21 Dec 2021 7:59 PM GMT (Updated: 21 Dec 2021 7:59 PM GMT)

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நாட்டுக்காக எத்தனையோ நல்ல திட்டங்களை செயல்படுத்தியிருந்தாலும், குக்கிராமத்தில் உள்ள சாமானிய குடிமக்கள் கூட அவரை இன்னமும் நெஞ்சில் வைத்து, அவரது நினைவை போற்றுகிறார்கள் என்றால், அது அவர் செயல்படுத்திய தங்க நாற்கர சாலை திட்டம்தான்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நாட்டுக்காக எத்தனையோ நல்ல திட்டங்களை செயல்படுத்தியிருந்தாலும், குக்கிராமத்தில் உள்ள சாமானிய குடிமக்கள் கூட அவரை இன்னமும் நெஞ்சில் வைத்து, அவரது நினைவை போற்றுகிறார்கள் என்றால், அது அவர் செயல்படுத்திய தங்க நாற்கர சாலை திட்டம்தான். கன்னியாகுமரியையும், காஷ்மீரையும் சாலை வழியாக இணைக்கும் ஒரு அற்புதமான திட்டம்தான் தங்க நாற்கர சாலை திட்டம். இந்த திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டு, இன்றும் மக்கள் சாலை வழி பயணத்தை விரும்பி தேர்வு செய்வதற்கு பெரிதும் உதவுகிறது.

இதேபோல, தமிழ்நாட்டிலும் நெடுஞ்சாலைகளை சீரமைக்கவேண்டும். தங்க நாற்கர சாலைக்கு இணையாக தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளையும் சீரமைக்கவேண்டும் என்ற உயரிய நோக்கில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவும், சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பா.கணேசனும் மிக தீவிரமாக திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்கள். சாலை விபத்து இல்லாத தமிழகம் என்ற உன்னத நிலைக்கு தமிழகத்தை உயர்த்தவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ள ஆணையை செயல்படுத்தும் வகையில், அதையே ஒரு குறிக்கோளாக வைத்து சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனரகம் முனைப்பாக செயல்பட்டு வருகிறது.

“விஷன் ஜீரோ-சுவீடன்” அதாவது “விபத்து இல்லா சுவீடன்” என்ற கொள்கையை சாலை பாதுகாப்புக்காக அந்த நாட்டில் 1997-ம் ஆண்டு முதல் கடைப்பிடித்து வருகிறார்கள். அதே இலக்கை மனதில் வைத்து முதல்-அமைச்சரின் கனவை நனவாக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்கள் சாலைகளை சீரமைக்கவேண்டும் என்ற நோக்கில், 400 இளம் என்ஜினீயர்களுக்கு சாலை பாதுகாப்பு என்ஜினீயரிங் தொடர்பாக பயிற்சி அளிக்கும் ஒரு நல்ல திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. களப்பணியில் உள்ள ஒவ்வொரு 40 என்ஜினீயர்களுக்கும் 5 நாட்கள் பயிற்சி கொடுத்து, சாலை சந்திப்புகளை பாதுகாப்பாக வடிவமைப்பது, போக்குவரத்தை மேலாண்மை செய்வது, போக்குவரத்து வேகத்தை குறைப்பது, சாலை பாதுகாப்பு தணிக்கை செய்வது, விபத்து பகுதிகளை கண்டறிந்து மேம்படுத்துவது, எச்சரிக்கை கருவிகளை நிறுவுவது, நடை பயணிகள் பாதுகாப்பு என்ற அடிப்படையில் அவர்களுக்கு இந்திய தொழில்நுட்ப கழக மூத்த பேராசிரியர் வீரராகவன் பயிற்சி அளிக்கும் திட்டத்தை, தமிழக அரசு தொடங்கியுள்ளது. இது மிகவும் வரவேற்புக்குரியதாகும். இந்த பயிற்சிகளை பெறும் 400 என்ஜினீயர்களும் களத்தில் ஆய்வு செய்து தெரிவிக்கும் குறைகளை அரசும் உடனடியாக நிவர்த்தி செய்யவேண்டும்.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் 500 மீட்டருக்குள் குறிப்பிட்ட காலத்துக்குள் தொடர்ந்து 5 விபத்துகள் நடந்தால், அந்த இடங்களை கருப்பு இடங்கள் (பிளாக் ஸ்பாட்) என்று மத்திய-மாநில அரசுகள் வகைப்படுத்துகிறது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களை கண்டறிந்து, எதனால் அந்த கருப்பு இடத்தில் அடிக்கடி விபத்து நடக்கிறது? சாலைகள் சீரமைக்கப்படவேண்டுமா? அல்லது தேவையற்ற வளைவுகள் சீரமைக்கப்பட்டு, வளைவு இல்லாத சாலை அமைக்கவேண்டுமா? என்பதையெல்லாம் நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்கள் சீராய்ந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுகிறது.

இதன் தொடக்க விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, “விபத்து நடந்த பின் ஒருவரை காப்பாற்றுவது டாக்டரின் பணி. விபத்தே நடக்காமல் பாதையை செப்பனிடுவது ஒரு என்ஜினீயரின் பணி. அதுபோல இனி கருப்பு புள்ளி என்ற குறியீடு வருவதற்கு முன்னாலேயே எந்த இடத்திலும், தொடர்ந்து விபத்துகள் நடக்காத நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்கள் மேற்கொள்ளவேண்டும்” என்று அறிவுறுத்தியது, ஒவ்வொரு என்ஜினீயரும் மனதில்கொண்டு செயல்படவேண்டிய அடிப்படை பணியாகும். கடந்த 2020-ம் ஆண்டில் தமிழகத்தில் 45 ஆயிரத்து 489 விபத்துகள் ஏற்பட்டு, அதில் 8 ஆயிரத்து 60 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை 2022-ல் ஏற்படாத வகையில் நெடுஞ்சாலைத்துறை தீவிரமாக பணியாற்றவேண்டும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாகும்.

Next Story