அவசரமாக நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்ட திருத்த மசோதா!


அவசரமாக நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்ட திருத்த மசோதா!
x
தினத்தந்தி 22 Dec 2021 8:08 PM GMT (Updated: 2021-12-23T01:38:07+05:30)

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மக்களுக்காக மக்களால் மக்களே நடத்துகிற ஆட்சி முறை அமலில் இருக்கிறது.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மக்களுக்காக மக்களால் மக்களே நடத்துகிற ஆட்சி முறை அமலில் இருக்கிறது. நமது அரசியல் சட்டத்தின்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்தவித சாதி, மத, இன, பொருளாதார நிலை வேறுபாடு இல்லாமல் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய எந்தவொரு குடிமகனும், நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினரையோ, முதல்-அமைச்சரை முடிவு செய்யும் சட்டமன்ற உறுப்பினரையோ, உள்ளாட்சி பிரதிநிதிகளையோ தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருக்கிறது.

கடந்த வாரம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மந்திரி சபை கூட்டத்தில் தேர்தல் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை அன்று அவசர அவசரமாக இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, 2 மணி நேரத்தில் பலத்த அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. நேற்று முன்தினம் மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இந்த மசோதாவின் அடிப்படையில், வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்கும்போது, அவர்களின் ஆதார் எண்ணையும் கேட்டு இணைக்கும் உரிமை இருக்கிறது. ஏற்கனவே, வாக்காளர் பட்டியலில் இருப்பவர்களிடமும் ஆதார் எண்ணை கேட்க உரிமை உள்ளது. ஆனால், இது கட்டாயமல்ல, விருப்பத்தின் அடிப்படையில் தெரிவிக்கலாம். ஆதார் அட்டை இல்லாதவர்கள் அடையாளத்திற்கு வேறு தகுதியான ஆவணங்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ள ஓட்டு போடுவதை தடுக்கவும், ஒரே நபர் பல இடங்களில் ஓட்டு போடுவதை தடுப்பதற்குமே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

தற்போது, வாக்காளர் பட்டியல் திருத்தப்படும்போது, அந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி 18 வயது பூர்த்தியானவர்கள் எல்லாம் புதிய வாக்காளர்களாக இணைக்கப்படுகிறார்கள். ஜனவரி 2-ந்தேதி பிறந்தவர்களால் கூட அதில் சேர முடியாது. ஓராண்டு காலம் காத்திருந்துதான் வாக்காளர் பட்டியலில் சேர முடியும். இப்போது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 14-ல் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தின்படி, இனி ஆண்டுக்கு 4 முறை, அதாவது ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் 1-ந்தேதி நிலவரப்படி, 18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். இது மிகமிக வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

அடுத்து, தற்போது திருத்தப்பட்ட சட்டப்படி, ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் மனைவியரும், வீராங்கனைகளின் கணவர்களும் அவர்கள் சார்பில் ஓட்டுபோட முடியும். மேலும், தேர்தலுக்கு எந்த இடத்தையும் பயன்படுத்த இந்த சட்டம் வழிவகுக்கிறது.

ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதற்கு மக்களவையில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 2015-ம் ஆண்டு முதலே தேர்தல் ஆணையம் இந்த முயற்சிகளில் ஈடுபட்டுவந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையின் காரணமாகவே காலதாமதமாகி, 2019-ம் ஆண்டு ஆதார் சட்டம் திருத்தப்பட்ட பிறகு இப்போது வாக்காளர் பட்டியலில் இணைக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. இவ்வாறு இணைப்பதன் மூலம் மக்களின் அந்தரங்க உரிமை பாதிக்கப்படும் என்று சில கட்சிகள் கூறுகின்றன.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக இந்த மசோதா வரையறுக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவின் ரகசியத்தையும், வாக்களிப்பவர்களின் அடிப்படை உரிமையான அந்தரங்கத்தையும் இது பாதிக்கிறது. ஆதார் சட்டத்தையும் மீறுவதாக உள்ளது என்பதும் பல்வேறு எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாகும்.

எனவே, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை சேர்ப்பதற்காக வழங்கப்படுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது விவாதத்திற்கு உரியதாகும். இந்த சட்டத்தை கொண்டுவருவது நல்ல நோக்கத்திற்காக என்று மத்திய அரசாங்கம் கூறினாலும், விரிவான விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்னும் சிறப்புக்குரியதாக இருந்திருக்கும். எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லாமல் போயிருக்கும் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.

Next Story