மீண்டும் மஞ்சப்பையை கையில் எடுப்போம்!


மீண்டும் மஞ்சப்பையை கையில் எடுப்போம்!
x
தினத்தந்தி 24 Dec 2021 8:11 PM GMT (Updated: 24 Dec 2021 8:11 PM GMT)

உலகம் முழுவதுமே பிளாஸ்டிக் பயன்பாட்டினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பேராபத்தை தடுப்பதற்காக, ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் 14 வகையான பொருட்களை தடை செய்வது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதுமே பிளாஸ்டிக் பயன்பாட்டினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பேராபத்தை தடுப்பதற்காக, ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் 14 வகையான பொருட்களை தடை செய்வது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எல்லா பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்யவேண்டும் என்பதல்ல இதன் பொருள். ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் ஷீட்டுகள், பிளாஸ்டிக் தட்டுகள், தேநீர் மற்றும் தண்ணீர் பருகும் கப்புகள், தண்ணீர் பைகள், ஸ்டிராக்கள், கொடிகள், பைகள் உள்பட பல பொருட்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இத்தகைய பொருட்களைத்தான் மறுசுழற்சி செய்ய முடியாது.

தமிழ்நாட்டில் எந்தவொரு இடத்திற்கும் மோட்டார் வாகனங்களிலோ, ரெயிலிலோ சென்றால் வழிநெடுக மரங்களிலும், தரையிலும் பிளாஸ்டிக் பைகள் தேங்கியிருப்பதை பார்க்க முடிகிறது. ஆண்டுகள் பல ஆனாலும் இந்தக்காட்சி மறைவதில்லை. இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. கடலில் போய் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள், கடல்வாழ் உயிரினங்களின் உயிரை பறித்துவிடுகிறது. காடுகளில் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், யானை முதல் எல்லா மிருகங்களின் உயிரையும் காவுவாங்கிவிடுகிறது. தரையில் வீசி எறியப்படும் பிளாஸ்டிக்குகளால் மழைநீர் பூமிக்குள் செல்ல முடியாதநிலை ஏற்படுகிறது.

ஏனெனில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை மக்கள் 10 நிமிடங்கள் பயன்படுத்திவிட்டு அதை தூக்கி எறிந்தபிறகு, அது மக்கிப்போக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிறது. இதுவரை பல உத்தரவுகள், சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால், பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தபாடில்லை.

பிரதமர் நரேந்திரமோடிகூட, 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந்தேதி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின்போது, “பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து விடுதலைபெற மக்கள் அனைவரும் வீடு, வீட்டுக்கு வெளியே என அனைத்து இடங்களிலும் முழு வீச்சோடு ஈடுபடுவோம். சமூக வலைதளங்களில் இதுகுறித்து முழங்கிடுவோம்” என்று கூறியிருந்தார். மொத்தத்தில், சட்டத்தினாலோ, உத்தரவுகளாலோ தடுக்க முடியாத பிளாஸ்டிக் பயன்பாட்டை, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தடுத்துவிடலாம் என்ற உயரிய நோக்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். இது மிகவும் பாராட்டுக்குரியது.

பாமர மக்களுக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பெரும் கெடுதிகளை விளக்கும் வகையில், இந்த விழிப்புணர்வு இயக்கம் பரப்புரை மேற்கொள்ளவேண்டும். துணிப்பையை வெகுநாட்கள் பயன்படுத்த முடியும். பிளாஸ்டிக் பையை ஒருமுறைதான் பயன்படுத்த முடியும். துணிப்பையை துவைத்து, துவைத்து மீண்டும்.. மீண்டும்.. பயன்படுத்தலாம்.

“துணிப்பை என்பது வீசி எறிந்தால் உரமாவது, பிளாஸ்டிக் பை என்பது தூக்கி எறிந்தால் விஷமாவது” என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில், மஞ்சள் பை கையில் வைத்திருந்தால் ஒரு பெரிய கவுரவம் என்ற நிலை உருவாக்கப்படவேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்க நிகழ்ச்சியில் பேசியபோது, “மஞ்சள் பை கொண்டுவந்தால் வீட்டில் விசேஷமா?, பத்திரிகை கொண்டுவந்திருக்கிறீர்களா? என்று கேட்டகாலம் உண்டு” என்பதை குறிப்பிட்டார். மஞ்சள் பை என்றாலே மங்கலம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு நினைத்தார்கள். அந்தக்காலம் இப்போது திரும்பவந்துவிட்டது. சினிமாவிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் மஞ்சள் பை வைத்திருந்தாலே, ‘பட்டிக்காட்டான்’ என்று கிண்டல் செய்த நிலைமாறி, இனி மஞ்சள் பையை கையில் வைத்திருப்பவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பெருமைபடைத்தவர்கள் என்பதுபோன்ற ஒரு நிலையை உருவாக்கவேண்டும்.

பிளாஸ்டிக் பைகள்போல, சணல் பைகள், சிறிய அளவிலான ஓலைப்பெட்டிகள், பாரம்பரியமாக பயன்படுத்தும் வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டையும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும். வணிக வரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி கூறியதுபோல, “மீண்டும் மஞ்சப்பை எடுப்போம், மகிழ்மிகு உலகை மீட்போம், மகிழ்நிறை உலகை மலரவைக்க பிளாஸ்டிக்குக்கு விடை கொடுப்போம்” என்ற உறுதிப்பாட்டை ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளும் வகையில் இந்த விழிப்புணர்வு இயக்கம் செயல்படவேண்டும்.

Next Story