ஒரு பக்கம் விலைவாசி உயர்வு; மற்றொரு பக்கம் வேலையிழப்பு


ஒரு பக்கம் விலைவாசி உயர்வு; மற்றொரு பக்கம் வேலையிழப்பு
x

நாட்டின் பொருளாதாரம் சீராக இருக்கவேண்டுமென்றால், மக்களின் வாழ்வு எளிதாக இருக்கவேண்டுமென்றால், விலைவாசி கட்டுக்குள் இருக்கவேண்டும். அதை வாங்கும்சக்தி மக்களுக்கு இருக்கவேண்டும். வேலைவாய்ப்புகள் பெருகவேண்டும்.

ஒரு கடைக்கு பொருட்கள் வாங்கச்சென்றால், பையில் உள்ள பணத்தைக்கொண்டு அதை வாங்குவதற்கு ஏற்றவகையில் விலைவாசி இருக்கவேண்டுமே தவிர, கடையில் சொல்லும் விலையை கொடுத்து வாங்குவதற்கு பையிலும், கையிலும் பணம்இல்லாத நிலை இருக்கக்கூடாது. ஆனால் தற்போது அனைத்து பொருட்களின் விலையும் மக்களின் வாங்கும் சக்திக்கு அப்பாற்பட்டு உயர்ந்துவிட்டது. கடந்த பல நாட்களாகவே காய்கறி விலை கைக்கு எட்டாத தூரத்தில் சென்றுவிட்டது. அதேபோல் மளிகைப்பொருட்கள் விலையும் பட்ஜெட்டுக்கு மேல் அதிகமாகிவிட்டது. விவசாயிகளுக்கு உரம் விலையும் உயர்ந்துவிட்டது. இதனால் ஏற்கனவே கொரோனாவால் திக்குமுக்காடிப்போன மக்கள், இப்போது அடிக்கு மேல் அடியாக விலைவாசி உயர்வையும் தாங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

மாதந்தோறும் பண வீக்கம் என்று சொல்லப்படும் விலைவாசி உயர்வு கணக்கிடப்படுகிறது. அந்தவகையில் கடந்த நவம்பர் மாதம் விலைவாசி உயர்வு அக்டோபர் மாதத்தைவிட அதிகமாக இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் 4.48 சதவீதமாக இருந்த சில்லரை விலை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 4.91 சதவீதமாக எகிறிவிட்டது. நகர்ப்புறங்களில் இதைவிட அதிகமாக 5.54 சதவீதம் விலைவாசி உயர்ந்துவிட்டது. காய்கறி விலை அக்டோபர் மாதத்தைவிட 7.45 சதவீதம் அதிகரித்துள்ளது. இடு பொருட்கள் மற்றும் உற்பத்தி செலவும் உயர்ந்திருக்கிறது. உணவுப்பொருட்கள், பழங்கள், முட்டை, இறைச்சி, மீன் என்று எந்த பொருட்களை எடுத்தாலும் மக்களால் தாங்க முடியாத அளவு விலைவாசி உயர்ந்து இருப்பதை அரசு உடனடியாக கருத்தில்கொள்ளவேண்டும். இதற்கிடையில், தமிழக அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3 விலை குறைத்தது. மத்திய அரசாங்கத்தை பொறுத்தவரையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்ததனால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் லிட்டருக்கு ரூ.10-ம் குறைத்திருந்தாலும், கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவுகள் பெரிதும் குறைந்துவிடவில்லை. எனவே பெட்ரோல், டீசல் மீதான வரியை மேலும் குறைத்தால், ஓரளவுக்கு விலைவாசி உயர்வில் சற்று மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த மாதத்தில் சம்பளம் பெறும் வேலைவாய்ப்புகள் 68 லட்சம் குறைந்திருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் இருக்கிறது. வேலையிழப்பும், விலைவாசி உயர்வும்தான் அதிகரித்துள்ளது என்று பார்த்தால், சிறுசேமிப்பு கணக்கு எண்ணிக்கையும் கடந்த மாதத்தில் குறைந்திருக்கிறது. 2018-19-ல் 4 கோடியே 66 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டநிலையில், 2020-21-ல் 4 கோடியே 11 லட்சமாக குறைந்தது. இந்த நிதியாண்டை எடுத்தால், நவம்பர் மாதம் வரை 2 கோடியே 33 லட்சம் புதிய சிறுசேமிப்பு கணக்குகள்தான் தொடங்கப்பட்டுள்ளன. பொதுவாக சிறுசேமிப்பு வட்டியை நிர்ணயிக்க ரிசர்வ் வங்கி சில்லரை விற்பனை விலைவாசியைதான் ஒரு அளவுகோலாக பயன்படுத்தும். அந்தவகையில், இப்போது சில்லரை விற்பனை விலைவாசி 4.91 சதவீதமாக இருப்பதால் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியையும் அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சில்லரை விலைவாசி உயர்வு மட்டுமல்லாமல், மொத்த விற்பனை அடிப்படையிலான பணவீக்கம் 14.2 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அதன்படி பார்க்கும்போது கடந்த 30 ஆண்டுகளில் இதுதான் மிக அதிகமான விலைவாசி உயர்வாகும். ஆக மத்திய-மாநில அரசுகள் விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கும், வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கும், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கும் சிறப்பு முனைப்புகளை எடுக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், அடுத்த ஆண்டு பட்ஜெட்டுக்காக இப்போதே எல்லா தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த ஆலோசனையில் இந்த 3 இனங்களையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு அதன் பிரதிபலிப்பாக பட்ஜெட் இருக்கவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Next Story