நாவலருக்கு சிலை எடுத்த மு.க.ஸ்டாலின்!


நாவலருக்கு சிலை எடுத்த மு.க.ஸ்டாலின்!
x
தினத்தந்தி 27 Dec 2021 7:34 PM GMT (Updated: 27 Dec 2021 7:34 PM GMT)

“மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என்று அரசியல் நாகரிகத்துக்கு ஒரு நல்ல அர்த்தத்தை வழங்கியவர், மறைந்த பேரறிஞர் அண்ணா.

“மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என்று அரசியல் நாகரிகத்துக்கு ஒரு நல்ல அர்த்தத்தை வழங்கியவர், மறைந்த பேரறிஞர் அண்ணா. “அதைத்தான் நானும் பின்பற்றுகிறேன்” என்ற வகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அவரது உருவச் சிலையை திறந்துவைத்திருக்கிறார்.

நாவலர் நெடுஞ்செழியன் தன் அரசியல் வாழ்க்கையை, முதலில் திராவிடர் கழகத்தில் தொடங்கி, பிறகு 1949-ம் ஆண்டு தி.மு.க.வை அண்ணா தொடங்கிய நேரத்தில், தி.மு.க.வில் வலிமைமிகு தூண்களில் ஒருவராகவும் விளங்கினார். 1977-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்ட நாவலர் நெடுஞ்செழியன், 2000-ம் ஆண்டு ஜனவரி 12-ந்தேதி காலமானார். அந்த நேரம் அவர் அ.தி.மு.க. தலைவராகவே இயற்கை எய்தினார். ஆனால், அப்போது முதல்-அமைச்சராக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதி, உடனடியாக நேரில்சென்று அஞ்சலி செலுத்தி, மாற்று முகாமில் நாவலர் நெடுஞ்செழியன் இருந்தாலும், தன் கொள்கை சகோதரர் என்ற முறையில் அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தினார்.

கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின்போது, நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கத்திலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சிலை அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மிக குறுகிய காலத்தில் சொன்னதை நிறைவேற்றும் வகையில், நாவலருக்கு சிலை அமைத்து மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து மங்கா புகழ் சேர்த்துள்ளார்.

“நடமாடும் பல்கலைக்கழகம்” என்று போற்றப்படும் நாவலர் நெடுஞ்செழியனுக்கு, சென்னை பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சிலை அமைக்கப்பட்டது, அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

‘நாராயணசாமி’ என்ற தன் இயற்பெயரை, தமிழ் மீது கொண்ட தீராப்பற்றினால் ‘நெடுஞ்செழியன்’ என்று மாற்றிக்கொண்ட அவருக்கு நாவலர் என்று பட்டம் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா. நாவலர் நெடுஞ்செழியன் தன் பேச்சிலும், எழுத்திலும் தனக்கென தனி பாணியை அமைத்துக்கொண்டு, தமிழ் நெஞ்சங்களை வெகுவாக கவர்ந்தார். தலைசிறந்த பகுத்தறிவுவாதிகளில் ஒருவர்.

“எனக்கே பாடம் கற்றுத்தரும் அளவுக்கு தகுதிவாய்ந்தவர் நாவலர்” என்று தந்தை பெரியாராலும், 1956-ம் ஆண்டு திருச்சியில் நடந்த தி.மு.க.வின் 2-வது மாநில மாநாட்டுக்கு தலைமை வகித்த நாவலரை, “தம்பி வா.. தலைமையேற்க வா.. உன் ஆணைக்கு கட்டுப்பட்டு நடக்கிறோம்” என்று பேரறிஞர் அண்ணாவாலும், “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று நாவலர் முழங்கும்போது, நாடே முழங்குவதுபோல எதிரொலிக்கும். நாவலருடைய தமிழும், அதை எடுத்தாளுகின்ற அவருடைய திறனும், ஒரே நாளில் 20 அல்லது 30 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்ற உள்ள உறுதியும், உடல் வலிவும், தி.மு.க.வை கட்டிக்காத்த காரணங்களில் ஒன்று என்பதை யாராவது மறந்துவிடுவார்களானால், அவர்கள் நன்றி மறந்தவர்கள் ஆவார்கள்” என்று கலைஞர் கருணாநிதியாலும், “தனக்கென தனி பாணியை வகுத்துக்கொண்டு, பேச்சையும், எழுத்தையும் கையாளும் பெருந்தன்மையாளர் நாவலரின் எழுத்துக்களில் இதமான தென்றலை மட்டுமல்ல, எரிமலையின் வேகத்தையும் உணரலாம். அவர் பேச்சிலே புயலை மட்டுமல்ல, தமிழ் இலக்கியத்தின் பாங்கையும் உணரலாம்” என்று மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆராலும் புகழப்பட்டவர், நாவலர் நெடுஞ்செழியன்.

அத்தகைய நாவலர் மறைந்து ஏறத்தாழ 22 ஆண்டுகள் ஆகப்போகிற சூழ்நிலையில், அவரை உலகம் மறந்துவிட்டதோ? என்று ஏங்கிக்கொண்டிருந்த நேரத்தில், “நாங்கள் நாவலரை மறக்கவில்லை” என்று, நாவலர் நூற்றாண்டு நிறைவு விழாவை தமிழக அரசு சார்பில் கொண்டாடிய மு.க.ஸ்டாலினால் அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய அனைத்து நூல்களும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளது. காலப்பெட்டகம் போல நாவலர் நூற்றாண்டு நிறைவு மலரும் வெளியிடப்பட்டுள்ளது, மிகவும் போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியது. நாவலருக்கு புகழ் சேர்த்த மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்கூறும் நல்லுலகம் நன்றி தெரிவிக்கிறது.

Next Story