எல்லோருக்கும் தேவை பூஸ்டர் டோஸ்!


எல்லோருக்கும் தேவை பூஸ்டர் டோஸ்!
x
தினத்தந்தி 28 Dec 2021 7:41 PM GMT (Updated: 2021-12-29T01:11:41+05:30)

இந்தியாவில் கொரோனா காலடி எடுத்துவைத்து 2 ஆண்டுகள் ஆகிறது.

இந்தியாவில் கொரோனா காலடி எடுத்துவைத்து 2 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் கொரோனாவை ஒழிக்க முடியாமல் வெட்ட.. வெட்ட.. வளரும் விஷச்செடி போல கொரோனாவை ஒழிக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றுவிட்டது என்று நினைக்கும்போது, டெல்டா வைரசாக உருமாற்றம் அடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது, ஒமைக்ரான் வைரஸ் என்ற உருமாறிய தொற்று தன் கோர முகத்தை காட்ட தொடங்கிவிட்டது.

அறிகுறிகள் இல்லாத ஒமைக்ரான் தொற்று, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், தொற்று உள்ள ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் உள்பட 42 பேருக்கு வேகமாக பரவியிருக்கிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதை சமூக பரவல் என்கிறார்.

இந்தநிலையில், ஏற்கனவே இந்தியாவில் 2 டோஸ் போடும் பணி தீவிரம் அடைந்துள்ள நிலையில், தடுப்பூசி போட்டு 6 மாதமானவர்களுக்கு 3-வது டோஸ், அதாவது “பூஸ்டர் டோஸ்” போடவேண்டும் என்ற ஒரு கோரிக்கையும், பாதிப்பு அதிகமான நிலையில், 18 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடவேண்டும் என்ற கோரிக்கையும் மக்களிடையே பரவலாக எழுந்தது.

கடந்த 25-ந்தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று பிரதமர் நரேந்திரமோடி, வரவேற்கத்தக்க ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டார். “ஒமைக்ரானால் கடும் பாதிப்பு ஏற்படாது, உயிரிழப்புக்கு வாய்ப்பு இல்லை. ஆக்சிஜன் தேவைப்படும் நிலை ஏற்படாது என்று மருத்துவ ரீதியாக கூறப்படும் நிலையில், 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு ஜனவரி 3-ந்தேதி முதல் தடுப்பூசியும், முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதை கடந்த இணை நோய் உள்ளவர்களுக்கும் ஜனவரி 10-ந்தேதி முதல் “பூஸ்டர் டோஸ்” என்று கூறப்படும் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியும் போடப்படும்” என்று அறிவித்துள்ளார்.

சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பதிவு ஜனவரி 1-ந்தேதி தொடங்குகிறது. முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு 2-வது டோஸ் போட்டு 9 மாதங்கள், அல்லது 39 வாரங்கள் கடந்த பிறகுதான் முன்னெச்சரிக்கை டோஸ் போட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்படும். முன்னெச்சரிக்கை டோஸ் போட வேண்டியவர்களுக்கான தேதி பற்றிய தகவல் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் இலவசமாக அரசு மருத்துவமனையிலும், கட்டணம் செலுத்தி தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.

மொத்தம் 3 கோடி முன்களப்பணியாளர்களும், 3 கோடி பேர் 60 வயதை கடந்த இணை நோயாளிகளும் இருக்கிறார்கள் என்றும், முதல் டோஸ் போட தகுதியான நிலையில் நாடு முழுவதும் 6 முதல் 7 கோடி வரையிலான சிறார்களும் இருக்கிறார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 15 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் 33.20 லட்சம் பேரும், முன்களப்பணியாளர்கள் 9.78 லட்சம் பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1.04 கோடி பேரும் இருக்கிறார்கள். இளம் சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசிதான் போடப்படவேண்டும். ஆனால், கோவேக்சின் உற்பத்தியே மாதம் 5½ கோடி முதல் 6 கோடி வரைதான் இருக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் போட்டு, இளம் சிறார்களுக்கும் போடவேண்டும் என்றால், இந்த உற்பத்தி போதாது, உற்பத்தி அளவை கூட்டவேண்டும். மேலும், 1-ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்பட்ட நிலையில், 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி என்பது இப்போது தொடக்க கட்டமாக இருந்தாலும், விரைவில் அனைத்து வயது சிறார்களுக்கும் தடுப்பூசிபோட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்போது 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு போடப்படும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியை அடுத்தடுத்து விரைவில் 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் போடவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story