ஜவுளிக்கு சரக்கு சேவை வரியை உயர்த்த வேண்டாம்


ஜவுளிக்கு சரக்கு சேவை வரியை உயர்த்த வேண்டாம்
x
தினத்தந்தி 29 Dec 2021 9:22 PM GMT (Updated: 2021-12-30T02:52:35+05:30)

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் மக்கள் சுருண்டு போய் இருக்கும் நேரத்தில் இந்த பட்ஜெட் அவர்களை கைதூக்கிவிட வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு ஆகும். நிர்மலா சீதாராமன் ஒரு நல்ல நடைமுறையை பின்பற்றுகிறார். பட்ஜெட்டை தயார்செய்யும்போது அனைத்து தரப்பினையும் அழைத்து கோரிக்கைகள், ஆலோசனைகளை கேட்டு வருகிறார். அந்தவகையில் மாநில அரசுகளோடு இன்று அவர் ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் எல்லா மாநில அரசுகளும் ஜவுளிக்கு ஜனவரி 1-ந்தேதி முதல் சரக்கு சேவை வரியை உயர்த்தவேண்டும் என்று எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுக்கவேண்டும் என்பது இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வேண்டுகோளாக இருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 17-ந்தேதி சரக்கு சேவை வரி கவுன்சிலின் 45-வது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஜவுளி மற்றும் காலணிகளுக்கு சரக்கு சேவை வரியை உயர்த்துவதாக முடிவெடுக்கப்பட்டது. ஜவுளி பொருட்கள் என்றால் ரெடிமேட் ஆடைகள் உள்பட அனைத்து துணித்தொழில்களையும் உள்ளடக்கியது ஆகும். எடுத்துக்காட்டாக ரூ.1,000-க்கு குறைவான ரெடிமேட் ஆடைகளுக்கு 5 சதவீதமும், அதற்கு மேல் மதிப்புள்ள ஆடைகளுக்கு 12 சதவீதமும் சரக்கு சேவை வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. இதை பாகுபாடின்றி எல்லா உடைகளுக்கும் 12 சதவீதம் வரிவிதிக்கும் வகையில் ஜவுளி மற்றும் காலணிகளுக்கு கூடுதலாக 7 சதவீதம், அதாவது மொத்தத்தில் 12 சதவீதம் ஒன்றுபோல சரக்கு சேவை வரி உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்புகள் நாடு முழுவதும் இருந்து கிளம்பி இருக்கிறது.

ஜவுளி தொழில் என்பது தேசிய மற்றும் மாநில பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக முக்கிய பொருளாதார நடவடிக்கையாக இந்த தொழில் இருந்து வருகிறது. ஜவுளித்தொழில் என்றால் கைத்தறி, விசைத்தறி, நூற்புத்தொழில், பதனிடுதல், ரெடிமேட் ஆடை மற்றும் பனியன் தொழில் ஆகியவற்றை கொண்டதாகும். இந்த சரக்கு சேவை வரியை உயர்த்துவதால் லட்சக்கணக்கான சிறிய தொழிற்கூடங்கள் மூடப்பட்டு 15 லட்சம் பேர்களுக்கு மேல் வேலையிழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடக்கும் கூட்டத்தில் இதற்கான பரிந்துரையை செய்ய முடியுமேதவிர, முடிவுகளை சரக்கு சேவை வரி கவுன்சில் கூட்டத்தில்தான் எடுக்கமுடியும். இவ்வாறு அனைத்து ஜவுளி பொருட்களுக்கும், காலணிகளுக்கும் சரக்கு சேவை வரியை உயர்த்தினால் நிச்சயம் விலைவாசி உயரும். இதன்மூலம் பொதுமக்கள் வாங்கும் அளவு பெரும் வீழ்ச்சி அடையும். தொடர்ந்து உற்பத்தி பாதிக்கிற சூழ்நிலையில் இந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்கூடங்கள் ஒன்று மூடப்படும் நிலையை சந்திக்கும். இல்லையென்றால் முறைசாரா தொழிலுக்கு மாறும் நிலை உருவாகும்.

உள்நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டால் அதிக இறக்குமதியை நம்பவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இப்போதுள்ள விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம், பருத்தியின் விலை உயர்வு மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஏற்கனவே இருந்த சரக்கு சேவை வரி விகிதத்தையே தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த தொழிலில் பருத்தி விலை உயர்வால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில், இந்த சரக்கு சேவை வரி உயர்வு சம்மட்டி அடி போன்ற நிலைமையை ஏற்படுத்தும். இன்று மத்திய நிதி மந்திரியுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளும் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், நிதித்துறை முதன்மை செயலாளர் முருகானந்தமும் புதிய மாற்றங்கள் வேண்டாம், பழைய வரிவிதிப்பு முறையே தொடரட்டும் என வலியுறுத்த வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.


Next Story