ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இது நல்ல நடவடிக்கை!


ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இது நல்ல நடவடிக்கை!
x
தினத்தந்தி 2 Jan 2022 8:14 PM GMT (Updated: 2022-01-03T01:44:48+05:30)

கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், புத்தாண்டு பிறந்த தினம் முதல், நோய் தடுப்பு நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், புத்தாண்டு பிறந்த தினம் முதல், நோய் தடுப்பு நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது, அதிகரித்துவரும் ஒமைக்ரான் தொற்று டெல்டாவைவிட பல மடங்கு வேகமாக பரவக்கூடியது. ஆனால், குறைவான அளவிலேயே அறிகுறிகள் தெரிவதால், யாருக்கு தொற்று இருக்கிறது? என்பதை கண்டுபிடிப்பது கடினம். பரிசோதனை முடிவு வருவதற்குள் பரவுவதில் வேகம் எடுத்துவிடுகிறது.

ஆரம்பத்தில் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் மூலம்தான் ஒமைக்ரான் பரவுகிறது என்று கூறப்பட்டாலும், அவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்குகூட தற்போது வேகமாக பரவுகிறது. “இது சமூகப்பரவல், 3-வது அலையின் அடையாளமாக இருக்கிறது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் 4 முதல் 5 நாட்களில் குணமடைந்து விடுகிறார்கள்” என்று மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் ஒமைக்ரான் பரவலின் வேகம் அதிகமாக இருப்பதால், இதை தடுக்கும் வகையில் சில நல்ல கட்டுப்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, மழலையர் விளையாட்டு பள்ளிகள் (பிளே ஸ்கூல்), நர்சரி பள்ளிகள் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) செயல்பட அனுமதி இல்லை. அனைத்து பள்ளிக்கூடங்களிலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை வருகிற 10-ந்தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயிலில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிக்கலாம். பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஒரு பக்கம் அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மற்றொரு பக்கம் தடுப்பூசி போடுவதில் பொதுமக்களுக்கு, குறிப்பாக முதியோர்களுக்கு ஆர்வம் குறைந்துவருவது கவலையளிப்பதாக இருக்கிறது. கடந்த 1-ந்தேதி நிலவரப்படி, இந்தியாவில் சராசரியாக 90 சதவீதம் பேர் முதல் டோசும், 65 சதவீதம் பேர் 2 டோஸ்களும் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இந்த தேசிய சராசரியைவிட குறைவாக நேற்று நிலவரப்படி 86.95 சதவீதம் பேர் மட்டுமே முதல் டோசும், 60.71 சதவீதம் பேர் மட்டுமே 2 டோஸ்களும் போட்டிருக்கிறார்கள். 60 வயதை கடந்தவர்கள்தான் தடுப்பூசி போட அதிகம் யோசிக்கிறார்கள்.

தற்போது, கொரோனா வேகமாக பரவும் 8 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்று மத்திய அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் தினமும் சராசரியாக 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 3 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய வசதிகள் இருக்கிறது. மருத்துவமனைகளில் 1 லட்சத்து 15 ஆயிரம் படுக்கைகளும், கவனிப்பு மையங்களில் 50 ஆயிரம் படுக்கைகளும் தயாராக இருக்கிறது. இப்போதைய கொரோனா பரிசோதனையில் பாதிக்கு மேல் ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறது.

இன்று முதல் பள்ளிக்கூடங்களுக்கு சென்றே 15 வயது முதல் 18 வயது வரை உள்ள 33.2 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பான திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இது மிகமிக பாராட்டுக்குரியது. “60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10-ந்தேதி முதல் பூஸ்டர் டோஸ்போட எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனாவை தடுக்கும் வலிமையான வழிமுறை முககவசம் அணிவதுதான். இந்தப் பரவல் இன்னும் அதிகமாகிவிடக்கூடாது என்றால் அது மக்களின் ஒத்துழைப்பில்தான் இருக்கிறது. மக்கள் கவனமாக இருந்தால், கொரோனா, ஒமைக்ரான் என்று எந்த தொற்றையும் பரவாமல் தடுத்துவிட முடியும்” என்கிறார், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன். எனவே, அரசு நடவடிக்கையும், மக்களின் ஒத்துழைப்பும் இரு கை தட்டும் ஓசைபோல இருந்தால்தான் இந்த ஒமைக்ரான் பரவலை முளையிலேயே கிள்ளியெறிய முடியும்.

Next Story