பள்ளிக்கூடங்களில் ‘மாணவர் மனசு' பெட்டி!


பள்ளிக்கூடங்களில் ‘மாணவர் மனசு பெட்டி!
x
தினத்தந்தி 3 Jan 2022 7:56 PM GMT (Updated: 3 Jan 2022 7:56 PM GMT)

சமீபகாலமாக பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகள்மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் நிறைய வருகின்றன.

சமீபகாலமாக பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகள்மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் நிறைய வருகின்றன. நேரடியாக பாலியல் அத்துமீறல் ஆசிரியர்களால், பள்ளிக்கூட நிர்வாகிகளால், விளையாட்டு பயிற்சியாளர்களால் இழைக்கப்படுகிறது என்ற புகார்களும், இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார்கள், ஆபாசமாக பேசுகிறார்கள் என்ற புகார்களும் ஏராளமாக வருகிறது. இவ்வளவு ஆண்டுகளாக இல்லாதவகையில் இந்த ஆண்டுமட்டும் இவ்வளவு புகார்கள் வருகிறதென்றால் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து வெளியே சொல்லவேண்டும் என்ற துணிச்சல் நமது ‘இளம்பிஞ்சுகளுக்கு வந்துவிட்டதா? அல்லது இதுகுறித்து சரியான புரிதல் இல்லாமல், ஒருவர் சொன்னார் என்பதற்காக அதையே பின்பற்றி எல்லோரும் சொல்கிறார்களா? என்பது தெளிவாக புரியவில்லை. இருந்தாலும் எல்லா புகார்களையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது.

கடந்த 2019-ம்ஆண்டு ஒரு பாதிரியார் 12 வயது பெண்குழந்தையிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்றவகையில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மகிளாகோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருந்தது. அதனை எதிர்த்து அந்த பாதிரியார் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தபோது, தண்டனையை உறுதிசெய்த நீதிபதி, சில கருத்துகளையும் தெரிவித்திருந்தார். தங்கள் எதிர்காலபடிப்பு பாதிக்கப்பட்டுவிடுமே என்ற பயத்தில், மாணவிகள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஆசிரியர்கள், பள்ளிக்கூட நிர்வாகத்தின் மீது புகார் தெரிவிப்பதை தவிர்க்கிறார்கள். இதையொட்டி பள்ளிக்கூடங்களில் இதுகுறித்து ஒரு குழுஅமைக்க கோர்ட்டு பரிந்துரைத்திருந்தது. மேலும், மாணவர்கள் தங்கள் புகாரை தெரிவிப்பதற்கு ஒரு புகார்பெட்டி வைக்கவேண்டும் என்றும் கூறியிருந்தது.

இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை 31 ஆயிரத்து 214 அரசு இடைநிலைப்பள்ளிக்கூடங்களிலும், 6 ஆயிரத்து 177 மேல்நிலைப் பள்ளிக்கூடங்களிலும் புகார் பெட்டி வைப்பதற்காக ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் ரூ.1,000 நிதி ஒதுக்கியிருக்கிறது. இதுதவிர அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் 2 ஆசிரியர்கள், ஒரு பெற்றோர் ஆசிரியர்கழக உறுப்பினர், ஒரு ஆசிரியரல்லாத பணியாளர், ஒரு நிர்வாகப்பணியாளர், ஒரு வெளிஉறுப்பினர் (விருப்பப்பட்டால்) ஆகியோர் கொண்ட மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்படவேண்டும். அந்தக்குழு கூட்டம் மாதம் ஒருமுறை நடத்தப்படவேண்டும். மேலும், மாணவர்கள் தங்கள் புகார்களை பதிவுசெய்ய அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கான புகார்பெட்டி வைக்கப்படவேண்டும். அந்த பெட்டியில் ‘மாணவர் மனசு’ என்று எழுதப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியர்களின் அறைக்கு முன்பாக அனைத்து மாணவர்களும் பார்க்கக்கூடிய வகையில், அனைவரும் எளிதில் அணுகக்கூடிய வகையில் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவின்பேரில், செய்யப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதாக அமைந்துள்ளது.

15 நாட்களுக்கு ஒருமுறை புகார்பெட்டியை மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் திறந்து, அதில் இருக்கும் புகார்கள்மீது உடனடியாக தக்கநடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மேலும் அனைத்து பள்ளிகளிலும் அதாவது தொடக்கநிலை, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘பிளக்ஸ் போர்டு’ வைக்கப்பட வேண்டும். அந்த பிளக்ஸ் போர்டில் மாணவர்களின் பாதுகாப்புக்காக அவரவர் வயதுக்கேற்ப சில யோசனைகள் இடம்பெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் எல்லாம் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை மூலம் அனுப்பப்பட்டுள்ளது. எந்த ஒரு முயற்சியின் வெற்றியும் அதை செயல்படுத்துவதில்தான் இருக்கிறது என்ற வகையில், இந்த உத்தரவை அனைத்து பள்ளிக்கூடங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளிக்கூடங்களில் இது செயல்படுத்தப்படுகிறதா? என்பதை பள்ளிக்கல்வித்துறை உறுதிப்படுத்தவேண்டும். இந்த இரு முயற்சிகளாலும் எது பாலியல் துன்புறுத்தல்? என்பது பற்றிய விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படும். அப்படி ஏதாவது சம்பவம் நடந்தால், எந்தவகையில் புகார் தெரிவிக்கலாம் என்ற ஆலோசனையும் இதன் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, எல்லா புகார்களையும் உரியபரிசீலனைக்கு பிறகு மேல்நடவடிக்கை எடுப்பதற்கு இந்த திட்டம் மிக மிக வசதியானது.

Next Story