இது கசப்பான மருந்துதான்; ஆனால் பரவல் குறையவேண்டும்


இது கசப்பான மருந்துதான்; ஆனால் பரவல் குறையவேண்டும்
x
தினத்தந்தி 6 Jan 2022 8:03 PM GMT (Updated: 6 Jan 2022 8:03 PM GMT)

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. கடந்த மாதம் 27-ந்தேதி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 605 ஆகவும், சென்னை நகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 172 ஆகவும் இருந்தது.


தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. கடந்த மாதம் 27-ந்தேதி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 605 ஆகவும், சென்னை நகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 172 ஆகவும் இருந்தது. கடந்த 9 நாட்களில் அதாவது நேற்றுமுன்தினம் (ஜனவரி 5-ந்தேதி) நிலவரப்படி, தமிழ்நாட்டில் 4ஆயிரத்து 862 ஆகவும், சென்னை நகரில் 2ஆயிரத்து 481 ஆகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்தநிலையில், நேற்று ஒரேநாளில் இந்த பாதிப்பின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 983 ஆகவும், சென்னை நகரில் 3 ஆயிரத்து 759 ஆகவும் இருந்து சுனாமிவேகத்தில் நான் உயருகிறேன் என்பதை உரத்தகுரலில் கூறிவிட்டது. இந்த பரவல் இவ்வளவு அதிகமாக இருந்தாலும் இதில் ஒரு ஆறுதல் கொரோனா, டெல்டா பாதிப்பைப்போல பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், ஆக்சிஜன் தேவைப்படும் அளவுக்கு தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படும் நிலைமையும், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நிலைமையும் இல்லை. இதற்கு எடுத்துக்காட்டு நேற்றைய நிலவரப்படி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வளவு உயர்ந்தாலும், உயிரிழப்பு 11 ஆகத்தான் இருக்கிறது.

என்றாலும் தமிழக அரசு சும்மா இருந்துவிடவில்லை. இந்த பரவலின் வேகத்தை உடனடியாக குறைக்கவேண்டும் என்று நேற்றுமுதல் இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணி வரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் அனைத்து வணிகநிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதியில்லை என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் வருகிற 9-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையன்று முழுஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றையதினம் பொதுப்போக்குவரத்து, மெட்ரோரெயில் இயங்காது. அனைத்து பள்ளிக்கூடங்களிலும் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை நேரடிவகுப்புகள் நடத்த தடைவிதிக்கப்படுகிறது. பஸ்கள், புறநகர் ரெயில்களில் 50சதவீத பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்பது போன்ற பலகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் முக்கியமாக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் வருகிற 9-ந்தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசிசெலுத்தி, அதற்குண்டான சான்றிதழை தொடர்புடைய அலுவலகத்தில் தாக்கல்செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இது எல்லாம் ஒரு கசப்பான மாத்திரை. இந்த மாத்திரையிலேயே கொரோனாபரவல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு, இதற்கு மேலும் தேவையில்லாத ஊரடங்கு வரக்கூடாது என்று கருதினால், அது மக்கள் கையில்தான் இருக்கிறது. ஏனெனில் இன்னொரு ஊரடங்கு வந்தால் அதை நிச்சயமாக மக்களாலும், அரசாலும் தாங்கமுடியாது. ஏற்கனவே கடந்த 2 அலைகளின்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், அடைந்த வீழ்ச்சியிலிருந்தே இன்னும் மேலே ஏறிவரமுடியாத நிலையில், இன்னும் தீவிரமான ஊரடங்கென்றால் மீண்டும் எழமுடியாதஅளவு படுபாதாளத்துக்கு பொருளாதாரநிலை, மக்களின் வாழ்வாதாரம் சென்றுவிடும்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு எளியமுறை மக்களின் கையிலேயே இருக்கிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். இவையெல்லாவற்றுக்கும் மேலாக முககவசம் அணியவேண்டும். சமூகஇடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். அடிக்கடி கைகளையும் கழுவவேண்டும். அரசைபொறுத்தமட்டில், ஒரு பக்கம் ஒமைக்ரானை கட்டுப்படுத்தவேண்டும். மற்றொரு பக்கம் பொருளாதாரமும் சீர்குலைந்துவிடக்கூடாது என்ற இரட்டை கடமையில் இருக்கிறது. இதை நிறைவேற்றவேண்டுமென்றால், வீட்டுக்குள் இருக்கும் நேரத்தைதவிர, வெளியே எந்தஇடத்திலும், எந்தநேரத்திலும் மக்கள் முககவசம் அணியாமல் இருப்பதை பார்க்கமுடியாது, எல்லோரும் முககவசம் அணிந்தே நடமாடுகிறார்கள் என்ற நிலையை அரசும், உள்ளாட்சி அமைப்புகளும், முக்கியமாக காவல்துறையும் உறுதிப்படுத்தவேண்டும்.

சென்னைநகர போலீசார் ‘சிறப்பு முககவசம் அமல்படுத்தல் அணி’யை உருவாக்கியிருக்கிறது. இந்த அணி நேற்று 5-ந்தேதி மட்டும் முககவசம் அணியாத 5 ஆயிரத்து 328 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.10 லட்சத்து 65 ஆயிரத்து 600 அபராதம் விதித்துள்ளது. இதுபோன்ற நடைமுறைகளை மாநிலம் முழுவதும் கடைப்பிடிக்கவேண்டும். பொதுமக்களுக்கும் முககவசத்தை அணியும் சமுதாய கடமையிருக்கிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். எனவே இந்த ஒருவிஷயத்தை கடுமையான நடவடிக்கைகள்மூலம் அமல்படுத்திவிட்டால், இதற்கு மேல் ஊரடங்கு தேவைப்படாத ஒரு நிலையை ஏற்படுத்தமுடியும்.

Next Story