அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தப்போகும் 5 மாநில தேர்தல் முடிவுகள் !


அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தப்போகும் 5 மாநில தேர்தல் முடிவுகள் !
x
தினத்தந்தி 10 Jan 2022 8:06 PM GMT (Updated: 2022-01-11T01:36:45+05:30)

கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறதே, 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்குமா?, தள்ளிப்போகுமா? என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறதே, 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்குமா?, தள்ளிப்போகுமா? என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் மருத்துவ நிபுணர்களோடு ஆலோசனை நடத்திய பிறகு, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளோடு தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்து, கடந்த வாரம் சனிக்கிழமை அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது.

உத்தரபிரதேசத்தில் 403, பஞ்சாப்பில் 117, உத்தரகாண்டில் 70, மணிப்பூரில் 60, கோவாவில் 40 என மொத்தம் 690 தொகுதிகளுக்கு தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாகவும், மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடக்கிறது. பிப்ரவரி 10-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஒரு மாத காலம் பல்வேறு தேதிகளில் தேர்தல் முடிந்து மார்ச் 10-ந்தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட இருக்கிறது.

இந்த தேர்தலில் 8.5 கோடி பெண்கள் உள்பட 18.3 கோடி வாக்காளர்கள் ஓட்டுப்போட இருக்கிறார்கள். 5 மாநில சட்டசபை தேர்தல் பல சிறப்பம்சங்களை கொண்டதாக இருக்கிறது. வேட்பாளர்கள் தேர்தல் செலவு வரம்பு, உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் ரூ.40 லட்சமாகவும், சிறிய மாநிலங்களான மணிப்பூர், கோவாவில் ரூ.28 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அந்தந்த மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பல தாக்கங்களை ஏற்படுத்த இருக்கிறது.

உத்தரபிரதேசத்தை பொறுத்தமட்டில், 1985-க்கு பிறகு எந்தக்கட்சியும் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றதில்லை. தற்போது, யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு, அந்த வரலாற்றை முறியடிக்குமா?, அல்லது வரலாறு தொடருமா? என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவிடும். ஓராண்டுக்கு மேலாக டெல்லி எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டம் தாக்கத்தை ஏற்படுத்துமா?, உத்தரபிரதேசத்தில் நடந்த இன மோதல்கள் இதில் பாதிப்பை ஏற்படுத்துமா?, தங்கள் மாநில எல்லையை தாண்டி போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரசுக்கு வரவேற்பு எப்படி இருக்கும்?. பஞ்சாப்பில் கேப்டன் அமரிந்தர்சிங் மட்டுமல்லாமல், யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ், மாயாவதி, பிரியங்கா காந்தி என எல்லோருடைய அரசியல் எதிர்காலமும் இந்த தேர்தல் முடிவுகளை அடிப்படையாக வைத்துத்தான் இருக்கிறது.

மிக முக்கியமாக ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில், இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில், எம்.பி.க்கள், அனைத்து மாநில எம்.எல்.ஏ.க்கள் கொண்ட தேர்தல் குழுதான் ஓட்டுப்போடும். அதில் 690 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாமல், இந்த எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்போகும் 19 மாநிலங்களவை உறுப்பினர்களும் ஓட்டுப்போடும் நிலை வரும்.

இதுமட்டுமல்லாமல், இந்தத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து, தினசரி பத்திரிகைகள், டெலிவிஷன்களில் விளம்பரம் வெளியிடவேண்டும். அரசியல் கட்சிகளும் தங்களுக்கான இணையதளத்தின் முதல் பக்கத்தில், வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த தகவல்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், வேட்பாளரை தேர்வு செய்ததற்கான காரணங்களையும் தெரிவிக்கவேண்டும்.

மேலும், தேர்தல் கமிஷன் சார்பில், போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்க, “உங்கள் வேட்பாளரை தெரிந்துகொள்ளுங்கள்” என்ற பெயரில் ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, ஓட்டு போடப்போகும் பொதுமக்களுக்கும், தங்கள் வேட்பாளரை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கும். “கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் 15-ந்தேதி வரை தேர்தல் பிரசார ஊர்வலம், பாத யாத்திரை, வாகன பேரணிகள் எதுவும் நடத்தக்கூடாது. அதன்பிறகு, அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும்” என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதையெல்லாம் கூட்டிக்கழித்து பார்த்தால், இந்த 5 மாநில தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

Next Story