இல்லம் தேடி பூஸ்டர் டோஸ்!


இல்லம் தேடி பூஸ்டர் டோஸ்!
x
தினத்தந்தி 11 Jan 2022 7:40 PM GMT (Updated: 11 Jan 2022 7:40 PM GMT)

2 ஆண்டுகள் உருண்டோடியும் இன்னும் கொரோனா அரக்கனின் பிடியில் இருந்து உலகம் விடுபடவில்லை.

2 ஆண்டுகள் உருண்டோடியும் இன்னும் கொரோனா அரக்கனின் பிடியில் இருந்து உலகம் விடுபடவில்லை. இப்போது, 3-வது அலையில் டெல்டா வைரசுடன் ஒமைக்ரான் வைரசும் சேர்ந்து இருமுனை தாக்குதலாக, இரட்டை ஆபத்தாக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

3-வது அலையில், கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி 1,155 ஆக இருந்த கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 13 ஆயிரத்து 990 ஆக உயர்ந்தது. இன்னும் வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதில், ஒரு ஆறுதல் என்னவென்றால், முன்பு 2 அலைகளின்போதும் ஏற்பட்ட உயிரிழப்புகள், மருத்துவமனைகள் நிரம்பி வழிந்ததுபோன்ற நிலைமை இப்போது ஏற்படாது என்பதுதான். இப்போது வரும் கொரோனா பாதிப்பில் இருந்துவிடுபட, மக்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டால்போதும் என்ற அளவிலேயே நிலைமை இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தடுப்பூசி.. தடுப்பூசி.. தடுப்பூசி மட்டும்தான்.

நேற்று முன்தினம் கணக்குப்படி, தமிழ்நாட்டில் முதல் டோஸ் போட்டவர்கள் 87.29 சதவீதம், 2 டோஸ் போட்டவர்கள் 60.20 சதவீதம் ஆகும். கடந்த 3-ந்தேதி முதல் 15 வயது முதல் 18 வயது வரையுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. மொத்தம் 33 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு போட்டு முடிக்கவேண்டும். இதுபோல, 2 டோஸ் போட்டு 9 மாத காலமான, அதாவது 39 வாரங்களை கடந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணைநோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு “பூஸ்டர் டோஸ்” என்று கூறப்படும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியான 3-வது டோஸ் தடுப்பூசி போடப்படும் திட்டத்தை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் 5 லட்சத்து 65 ஆயிரத்து 218 சுகாதாரப் பணியாளர்கள், 9 லட்சத்து 78 ஆயிரத்து 23 முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ள 20 லட்சத்து 83 ஆயிரத்து 800 பேர்களுக்கு “பூஸ்டர் டோஸ்” போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் நாளில் 20,765 பேர்தான் “பூஸ்டர் டோஸ்” போட்டிருக்கிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு ஆர்வம் இல்லையா? அல்லது தடுப்பூசி போட போவதற்கு சிரமப்படுகிறார்களா? என்பது தெரியவில்லை.

ஏற்கனவே, “இல்லம் தேடி கல்வி”, “மக்களை தேடி மருத்துவம்” என்று மக்களை நேரடியாக தேடிச்சென்று எல்லா வசதிகளையும் செய்துவரும் தமிழக அரசு, தற்போது 15 வயது முதல் 18 வயது வரையுள்ள மாணவர்களுக்காக, “பள்ளிக்கூடம் தேடி தடுப்பூசி” என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்கள், தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசிபோட முடியவில்லை என்றால், மாநகராட்சி வெளியிட்டுள்ள 3 தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு, தங்கள் விவரங்களை பதிவு செய்தால், அவர்கள் இல்லங்களுக்கே சென்று “பூஸ்டர் டோஸ்” மட்டுமல்லாமல், முதல் டோஸ், 2-வது டோஸ் தடுப்பூசியும் போடப்படும் என்ற ஒரு நல்ல திட்டத்தை அறிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் வழிகாட்டிவிட்டார். இதையே மற்ற ஊராட்சி அமைப்புகளும் பின்பற்றி, 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு “இல்லம் தேடி தடுப்பூசி” போட்டால், விரைவில் இலக்கை அடைந்துவிட முடியும். நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் “பூஸ்டர் டோஸ்” தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வெளியிட்ட செய்தியில், “தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு, நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்” என்ற சூளுரையை அனைவரும் தாரக மந்திரமாகக் கொண்டு, தடுப்பூசி போடாதவர்களே தமிழ்நாட்டில் இல்லை என்ற உன்னதமான நிலையை உருவாக்க வேண்டும்.

Next Story