தலையங்கம்

மத்திய அரசாங்க திட்டங்கள் மக்களுக்கு தெரிய வேண்டும்! + "||" + People need to know about federal government programs!

மத்திய அரசாங்க திட்டங்கள் மக்களுக்கு தெரிய வேண்டும்!

மத்திய அரசாங்க திட்டங்கள் மக்களுக்கு தெரிய வேண்டும்!
விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள். அதனால்தான் அய்யன் திருவள்ளுவர், “உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து” என்று கூறியுள்ளார்.
விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள். அதனால்தான் அய்யன் திருவள்ளுவர், “உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து” என்று கூறியுள்ளார். இதற்கு விளக்க உரை எழுதியுள்ள கலைஞர் கருணாநிதி, “பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத்தொழில் இருப்பதால், அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


அப்படிப்பட்ட பெருமைமிக்க உழவுத் தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் வாழ்வில் வளம் சேர்ப்பதற்காக மத்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. விவசாயிகளுக்கு உதவும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், நாட்டிலுள்ள தகுதியுடைய அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக, அதாவது தலா ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தும் வகையில், “பி.எம். கிசான்” என்று கூறப்படும் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் உடனடியாக செயலுக்கு வந்தது.

2018 டிசம்பர் மாதம் முன்தேதியிட்டு வழங்கப்பட்ட இந்த திட்டத்தின் பயனாக இதுவரை 9 தவணைத்தொகைகள் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.18 ஆயிரம் விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. கடந்த 1-ந்தேதி புத்தாண்டு பரிசாக 10-வது தவணைத் தொகையான ரூ.20 ஆயிரத்து 946 கோடி, 10 கோடியே 9 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 36 லட்சத்து 68 ஆயிரத்து 729 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.738 கோடியே 99 லட்சத்து 2 ஆயிரம் நேரடியாக செலுத்தப்பட்டது. இதுபோல, புதுச்சேரியில் 10 ஆயிரத்து 142 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 3 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள 351 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான பங்கு மானியமாக ரூ.14 கோடிக்கும் மேற்பட்ட தொகையை பிரதமர் நரேந்திரமோடி விடுவித்தார். இந்த உதவித்தொகை மூலம் 1 லட்சத்து 24 ஆயிரம் விவசாயிகள் பயனடைகிறார்கள்.

தமிழ்நாட்டில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், பெண்களுக்கு சொந்தமானதாக அவர்களால் இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் 79 லட்சத்து 38 ஆயிரம் நில உடமைதாரர்கள் 53.73 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள விளை நிலங்களில் விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களில் 93 சதவீதம் பேர் குறு மற்றும் சிறு விவசாயிகளாக உள்ளனர். இவர்களுக்கெல்லாம் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் என்பது, ஏதாவது ஒரு செலவை சரிகட்ட நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால், இந்த திட்டத்தின்கீழ் விவசாய நிதியுதவியை மத்திய அரசாங்கம் வழங்குகிறது என்பதே ஏராளமானவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது.

“உழவன்” என்ற பெயரில் ஒரு செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த “உழவன்” செயலி மூலமாகவும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாகவும் நேரடியாக விண்ணப்பிக்கலாம். மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வளவோ திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினாலும், அதுகுறித்த விழிப்புணர்வும், அதற்கு விண்ணப்பிக்கும் முறையும் கிராமப்புறங்களிலுள்ள பாமர மக்களுக்கு தெரியாமல் இருக்கிறது.

ஒரு திட்டத்தின் வெற்றி என்பது, அதற்கு தகுதியுடைய அனைத்து மக்களும் பயன்பெறுவதில்தான் அடங்கியிருக்கிறது. அந்தவகையில், விவசாயிகள் பயனடையும் “பி.எம். கிசான்” திட்டம் என்றாலும் சரி, இதுபோன்ற மக்கள் பயனடையும் பல்வேறு திட்டங்கள் என்றாலும் சரி, மத்திய அரசாங்கம் கிராமப்புற, ஏழை-எளிய மக்களுக்கு தெரியும் வகையில், அதை விளம்பரப்படுத்தினால்தான் முடியும். இதை தங்களுக்கு பெருமை சேர்த்துக்கொள்ளும் சுயவிளம்பரம் என்று கருதமுடியாது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரமாகவே கருத முடியும்.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க. ஆட்சி பற்றி எடப்பாடி பழனிசாமி கூறும் குற்றச்சாட்டு அனைத்தும் பொய்யுரைகளின் கட்டுரை
தி.மு.க. ஆட்சி பற்றி எடப்பாடி பழனிசாமி கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யுரைகளின் கட்டுரை என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக பதிலளித்தார்.
2. மத்திய அரசின் திட்டங்களுக்கு போட்டோ ஒட்டுவதில் மாநில அரசு தீவிரம் காட்டுகிறது - அண்ணாமலை
மக்கள் பயன்பெறும் திட்டங்களில் 80 சதவீதம் மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் தான் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
3. கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டங்கள்: இன்று வெள்ளை அறிக்கை தாக்கல்
கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தொடர்பாக இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
4. முந்தைய அரசின் திட்டங்களுக்கு மறு பெயர் சூட்டுவதில் மோடி நிபுணர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
முந்தைய அரசின் திட்டங்களுக்கு மறு பெயர் சூட்டுவதில் பிரதமர் மோடி ஒரு நிபுணர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.