ஒரே நாளில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்!


ஒரே நாளில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்!
x
தினத்தந்தி 16 Jan 2022 7:02 PM GMT (Updated: 2022-01-17T00:32:55+05:30)

“கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்று மகாகவி பாரதியார் அன்று பாடியது, இன்று தமிழ்நாட்டில் நனவாகியுள்ளது.

“கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்று மகாகவி பாரதியார் அன்று பாடியது, இன்று தமிழ்நாட்டில் நனவாகியுள்ளது. இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளை கொண்ட மாநிலம் எதுவென்றால், அது தமிழ்நாடு என்று ஒவ்வொரு தமிழனும் நெஞ்சை நிமிர்த்தி பெருமையோடு கூற முடியும்.

தமிழ் மக்களுக்கு பொங்கல் பரிசாக, கடந்த 12-ந்தேதி விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திரமோடி, இந்திய பாரம்பரியம், செம்மொழிகள் ஆகியவற்றை மேம்படுத்தி பாதுகாக்கும் வகையில் சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் ரூ.24 கோடியில் கட்டப்பட்ட புதிய வளாகத்தையும் திறந்துவைத்தார்.

இந்த செம்மொழி தமிழாய்வு வளாகம் மறைந்த கலைஞர் கருணாநிதியின் கனவாகும். அவர்தான் இதை தொடங்குவதற்கு பெரும் ஆர்வத்தோடு நில ஒதுக்கீடு செய்தார். 11 மருத்துவக் கல்லூரிகளை பொருத்தமட்டில், 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போதே மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு ஆணையிடப்பட்டது என்று மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதத்தோடு கூறினார்.

அ.தி.மு.க. ஆட்சியின்போது, இந்த 11 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அப்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பட்டியலிட்டுள்ளனர். ஆக்கி விளையாட்டில் கோல் போடவேண்டும் என்ற இலக்கோடு இரு அணிகளிலும் தலா 11 வீரர்கள் மட்டை மூலம் பந்தை கடத்தி சென்று, இறுதியில் ஒருவர் குறிபார்த்து அடிக்கும் பந்துதான் கோல் வலைக்குள் புகும். அதுபோல, தி.மு.க.-அ.தி.மு.க. இரு ஆட்சிகளும் முயற்சி செய்தாலும், மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இறுதிவடிவம் பெற்று, இன்று செயலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் இப்போது புதிதாக தொடங்கப்பட்ட இந்த 11 மருத்துவக் கல்லூரிகளும், மத்திய-மாநில அரசுகளின் நிதிப்பங்கீடு அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் செலவான ரூ.4 ஆயிரம் கோடியில், மத்திய அரசின் பங்கு ரூ.2,145 கோடியாகும். எஞ்சிய தொகை தமிழக அரசால் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்லூரிகளால் கூடுதலாக 1,450 மருத்துவ இடங்கள் கிடைக்கும். அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் இந்த கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இதுவரை உத்தரபிரதேசத்தில்தான், சமீபத்தில் ஒரே நாளில் 9 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் இப்போது ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

“என்னுடைய சாதனையை நானே முறியடித்திருக்கிறேன்” என்று பிரதமர் மோடி இந்த விழாவில் கூறியது சிறப்புக்குரியது. இந்த நிகழ்ச்சியில், வழக்கம்போல தமிழுக்கு பிரதமர் பெருமை சேர்த்துள்ளார். “தைப்பிறந்தால்-வழிபிறக்கும்” என்று தமிழில்கூறி, மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திரமோடி, தமிழ்மொழி மற்றும் கலாசாரம் தம்மை எப்போதும் ஈர்ப்பதாகவும், ஐ.நா. சபையில் உலகில் மிகவும் தொன்மை வாய்ந்த மொழியான தமிழ் மொழியில் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, எனது வாழ்நாளில் ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகும் என்பது மட்டுமல்லாமல், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகளுக்காக ‘சுப்பிரமணிய பாரதி’ இருக்கை ஏற்படுத்திய கவுரவமும், தன் அரசுக்கு கிடைத்திருப்பதாக அவர் பெருமையோடு கூறினார்.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசாங்கம் உதவவேண்டும்” என்று கோரிக்கைவிடுத்துவிட்டு, ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை, தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் பிரதமரிடம் எடுத்துக்கூறி, தமிழக அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிறப்புமிகு இந்த விழாவில் பிரதமர், முதல்-அமைச்சர் ஆற்றிய உரைகள் போற்றுதலுக்கும், வரவேற்புக்கும் உரியது.

Next Story