பிறந்த ஊரில் சிலை அமைத்து பென்னிகுயிக்குக்கு பெருமை!


பிறந்த ஊரில் சிலை அமைத்து பென்னிகுயிக்குக்கு பெருமை!
x
தினத்தந்தி 17 Jan 2022 9:23 PM GMT (Updated: 17 Jan 2022 9:23 PM GMT)

தலைமுறைகள் பல கடந்தாலும் தமிழ் மக்கள், குறிப்பாக விவசாய பெருங்குடி மக்கள் நன்றி மறவாதவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுத்தான், இன்றும் தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பலருக்கு பென்னி என்றும், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பக்கிள், பக்கிள் துரை என்றும் பெயரிடப்படும் வழக்கம் இருப்பதை பார்க்க முடிகிறது.

தலைமுறைகள் பல கடந்தாலும் தமிழ் மக்கள், குறிப்பாக விவசாய பெருங்குடி மக்கள் நன்றி மறவாதவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுத்தான், இன்றும் தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பலருக்கு பென்னி என்றும், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பக்கிள், பக்கிள் துரை என்றும் பெயரிடப்படும் வழக்கம் இருப்பதை பார்க்க முடிகிறது.

யார் இந்த பென்னிகுயிக்?, யார் இந்த பக்கிள் துரை?. முல்லைப்பெரியாறு அணையை கட்டியவர்தான் பென்னிகுயிக். தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஸ்ரீவைகுண்டத்தில் அணையை கட்டியவர்தான், அப்போது திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருந்த பக்கிள். இதுபோல, கன்னியாகுமரி மாவட்ட மக்கள், கோதையாறு ஆற்றின் குறுக்கே 1897-1906-ம் ஆண்டில் பேச்சிப்பாறை அணையை கட்டிய ஆங்கிலேய என்ஜினீயர் ஹம்ப்ரே அலெக்சாண்டர் மின்ஜின் என்ற மூக்கன் துரையையும் மறக்கவில்லை.

19-ம் நூற்றாண்டில் வைகைப்படுகையில் வறட்சி, பஞ்சம் ஏற்படுவது வழக்கமாக இருந்தது. அதற்கு காரணம், பெரியாறு நதி, முல்லையாற்றுடன் இணைந்து மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக் கடலில் வீணாகப்போய் கலந்ததுதான். இதை வைகைப்படுகை நோக்கி திருப்பிவிடும் திட்டம் ஒன்றை தயாரித்த ஆங்கிலேய அரசாங்கம், அதை நிறைவேற்ற கர்னல் ஜான் பென்னிகுயிக்கை நியமித்தது. அவர் பெரியாற்றின் குறுக்கே ரூ.53 லட்சம் மதிப்பில் அணை கட்டும் திட்ட அறிக்கையை தயாரித்து 1882-ம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கத்திடம் வழங்கினார். 1887-ம் ஆண்டு அணை கட்டும் பணி பென்னிகுயிக்கிடமே வழங்கப்பட்டது. ஆனால், போதுமான நிதியை ஆங்கிலேய அரசாங்கம் ஒதுக்காததால், பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துகளை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு 1895-ம் ஆண்டு அணையை கட்டி முடித்தார்.

தற்போது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்த பெருமை பென்னிகுயிக்கையே சேரும். அவருடைய பிறந்தநாளான ஜனவரி 15-ந்தேதியன்று தேனி மாவட்ட மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறார்கள். பென்னிகுயிக்கின் நினைவை போற்றும் வகையில், மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி மதுரை தல்லாகுளம் பொதுப்பணித்துறை வளாகத்தில் 15-6-2000 அன்று அவருடைய திருவுருவ சிலையை திறந்துவைத்தார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 15-1-2013 அன்று பென்னிகுயிக் நினைவை போற்றும் வகையில், தேனி மாவட்டம் லோயர்கேம்பில் ரூ.1¼ கோடி மதிப்பில் மணிமண்டபத்தை திறந்துவைத்தார். மேலும், தேனியில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையத்துக்கும் அவர் பெயரை சூட்டினார்.

பென்னிகுயிக்கை தமிழக மக்கள் என்றும் மறக்கவில்லை. “அவர்கள் நெஞ்சம் மறப்பதில்லை, பென்னிகுயிக்கின் நினைவை இழப்பதில்லை” என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது சொந்த ஊரான லண்டன் - கேம்பர்ளி நகர மையப் பூங்காவில், தமிழக அரசின் சார்பில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என்ற நல்ல அறிவிப்பை கடந்த 15-ந்தேதி அவரது பிறந்தநாள் அன்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது தமிழ் மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.

“இந்த சிலை, அந்த ஊரின் மையப் பூங்காவில் அமைப்பதற்காக அனைத்து லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சி எடுக்கப்பட்டு, சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலையும் பெற்றுள்ளார்கள்” என்ற இனிய தகவலையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த சிலையை அமைத்து விரைவில் அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய கோரிக்கையாகவும் இருக்கிறது.

இதுபோல, பக்கிள் துரைக்கு ஸ்ரீவைகுண்டம் அணை பகுதியிலும், ஹம்ப்ரே அலெக்சாண்டர் மின்ஜினுக்கு பேச்சிப்பாறை அணை பகுதியிலும் மணிமண்டபம் அமைத்து, அவர்களுக்கும் அங்கு சிலை திறக்க வேண்டும் என்பது இந்த அணைகளால் பயன்பெறும் விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story