ஒமைக்ரானை எதிர்கொள்வோம்; அச்சப்பட வேண்டாம்!


ஒமைக்ரானை எதிர்கொள்வோம்; அச்சப்பட வேண்டாம்!
x
தினத்தந்தி 18 Jan 2022 7:46 PM GMT (Updated: 18 Jan 2022 7:46 PM GMT)

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் ஒட்டுமொத்த உலகமே பெரும்சவாலை சமாளித்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் ஒட்டுமொத்த உலகமே பெரும்சவாலை சமாளித்து வருகிறது. தமிழ்நாடு இதில் மிகத்தீவிரமாக தன் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. முதலில் கொரோனா என்றும், பிறகு உருமாறி ஆல்பா, பீட்டா, காமா என பாதிப்புகளை ஏற்படுத்தி, டெல்டா என்ற அசுரனாக உருவெடுத்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. முதல்அலை குறைந்த நேரத்தில், 2-வது அலை தலையெடுத்தது. 21-5-2021-ல் 2-வது அலையின் உச்சபட்சமாக 36 ஆயிரத்து 184 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டது. அப்போது அதிகபட்சமாக தினமும் 1,000 பேருக்குதான் கூடுதலாக, முந்தையநாளைவிட தொற்று அதிகரித்தது. இப்போது எங்கே 3-வது அலை உருவாகிவிட்டதோ? என்று எல்லோரும் அச்சப்படுகிற அளவுக்கு, சமீபத்தில் சில நாட்களில் கொரோனாவின் பரவல் முந்தைய நாளைவிட கூடுதலாக 3 ஆயிரம் பேருக்கு மேல் அதிகரித்து வந்தது. ஆனால், இப்போது பரவல் உயர்வு நிலையாக இருக்கிறது.

பொதுவாக, மருத்துவ நிபுணர்கள் தொற்று என்பது அலையாக உருவெடுத்துவிட்டது என்று சொல்வதற்கு, தொற்று எண்ணிக்கை, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆக்சிஜன் உதவி தேவைப்படும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆகிய 5 அடிப்படை காரணங்களை பதிவிடுவார்கள். ஒமைக்ரானை பொறுத்தமட்டில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும்தான் தினமும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 27-ந்தேதி தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 605 ஆக இருந்த நிலைமாறி, நேற்று இந்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 888 ஆக உயர்ந்துவிட்டது. ஒமைக்ரான் தொற்றும், டெல்டா தொற்றும் சேர்ந்து ருத்ரதாண்டவம் ஆடும் நிலையில், 2-வது அலையின் அதிகபட்சமான 36 ஆயிரத்து 184-ஐ விரைவில் தாண்டிவிடும் என்ற அச்சமும் இருக்கிறது.

டெல்டாவைவிட ஒமைக்ரான் பரவல் 3 மடங்குக்குமேல் வேகமாக இருந்தாலும், அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவு, நுரையீரல் பாதிப்பில்லை என்ற நிலைமை பெரும் ஆறுதலை அளித்துள்ளது. என்றாலும், உலக சுகாதார நிறுவனம் திரும்ப, திரும்ப அனைத்து நாடுகளையும், “ஒமைக்ரானை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தடுப்பூசி போடும் வேகத்தை அதிகப்படுத்துங்கள்” என்று எச்சரித்துக்கொண்டே இருக்கிறது. மருத்துவ நிபுணர்கள் இந்த பரவலை தடுக்கவேண்டுமென்றால், முதலாவதாக அனைவரும் முககவசம் அணியவேண்டும், சமூகஇடைவெளியை பின்பற்றவேண்டும், கைகளை அடிக்கடி “சானிடைசர்” அல்லது சோப்புபோட்டு கழுவவேண்டும், பெரும் கூட்டங்களை தவிர்க்கவேண்டும், இதோடு தடுப்பூசி போடுவதை இன்னும் அதிகமாக வேகப்படுத்தினால் நோயின் கொடூரத்தை நிச்சயமாக தடுக்கமுடியும் என்று எச்சரித்திருக்கிறது. இந்தநிலையில், மக்கள் இன்னும் ஆர்வமாக வந்து தடுப்பூசி போடவில்லையே என்ற பெரும்குறை நிலவுகிறது. முககவசம் அணிவதில் பெரும்பாலான மக்களுக்கு அக்கறையே இல்லை.

முககவசம் அணிவதை ஊக்கப்படுத்தும் வகையில், அதை அணியாதவர்களுக்கு இதுவரை ரூ.200 என்ற அபராதத்தை, இப்போது ரூ.500 ஆக உயர்த்தி கடந்த 12-ந்தேதி தமிழக அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது. மூக்கு மற்றும் வாய் இரண்டையும் மூடும்வகையில், முககவசம் அணியாதவர்களுக்கு எல்லாம் ரூ.500 அபராதம் என்று அறிவித்துள்ளது. முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் என்பது வெறும் ஏட்டளவில் இருக்கக்கூடாது. அதை கடுமையாக நிறைவேற்றவேண்டும். அபராதம் விதிக்கிற அதேநேரத்தில், அவர்கள் கையில் முககவசத்தை கொடுத்து அணியச்சொல்லவேண்டும். சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும், கோடை காலத்தில் குடிநீர் பந்தல் அமைப்பதுபோல, ஆங்காங்கு இதுபோல் பந்தல் அமைத்து முககவசம் அணியாதவர்களுக்கு முககவசம் வழங்கி, தமிழ்நாட்டில் முககவசம் அணியாதவர்களே இல்லை என்பதை நிலைநாட்டவேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி, எல்லோரும் முககவசம் அணிந்திருக்கிறார்கள் என்ற நிலைதான் இந்த கொரோனா பரவலின் வேகத்தை குறைக்கும். மொத்தத்தில் ஒமைக்ரானை தைரியமாக எதிர்கொள்வோம். அச்சப்படத் தேவையில்லை.

Next Story