ஜொலிக்கும் தமிழக கால்பந்து வீராங்கனைகள்!


ஜொலிக்கும் தமிழக கால்பந்து வீராங்கனைகள்!
x
தினத்தந்தி 19 Jan 2022 7:56 PM GMT (Updated: 2022-01-20T01:26:26+05:30)

உலகில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டு, கால்பந்து போட்டிதான்.

உலகில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டு, கால்பந்து போட்டிதான். ஆனால் 140 கோடி மக்கள்தொகையை கொண்ட இந்தியா கால்பந்து விளையாட்டில் இன்னும் பின்தங்கியிருப்பது மறுக்கமுடியாத உண்மை. 1930-ம் ஆண்டுமுதல் நடந்துவரும் உலககோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா ஒரு முறை கூட விளையாடியது இல்லை. 2-ம் உலகப்போருக்கு பிறகு, பிரேசிலில் 1950-ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை கால்பந்து போட்டியின்போது பல அணிகள் பங்கேற்க மறுத்தன. இதனால் இந்தியா தகுதிநிலையை எட்டியது. இந்திய வீரர்கள் அந்த சமயத்தில் காலணியின்றி வெறுங்காலுடன் விளையாடி பழகியிருந்தனர். அதற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் தடைவிதித்ததால், இந்தியா அந்த போட்டியிலிருந்து பின்வாங்கியது. அதன்பிறகு உலககோப்பை தகுதிசுற்றில் விளையாடுவதும், தொடக்க சுற்றுகளிலேயே வெளியேறுவதும் தொடர்கதையாகி வருகிறது.

ஒலிம்பிக்கில் 4 முறை கலந்துகொண்டுள்ள இந்தியா 1956-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் 4-வது இடத்தை பிடித்தது சிறந்த நிலையாகும். தெற்காசிய மண்டலத்தில் இந்தியா அசைக்கமுடியாத சக்தியாக விளங்குகிறது. இந்திய கால்பந்தை முன்னேற்றப்பாதைக்கு கொண்டுசெல்ல பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஐ.எஸ்.எல். கால்பந்து, இந்திய வீரர்கள், சர்வதேச வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பை பெற்று கொடுக்கிறது. இது நமது வீரர்கள் தங்களது திறமையை மேம்படுத்த உதவிகரமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி உலகளவிலான போட்டிகளை நடத்தவும் இந்திய கால்பந்து சம்மேளனம் தீவிரம் காட்டுகிறது. 2017-ம் ஆண்டில் முதல்முறையாக 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் உலககோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டில் பெண்களுக்கான ஜூனியர் உலககோப்பை கால்பந்து திருவிழா அக்டோபரில் இந்தியாவில் அரங்கேறுகிறது. பெண்கள் கால்பந்தில் இந்தியாவின் நிலைமை பெரிய அளவில் சொல்லும்படியில்லை. உலககோப்பை மற்றும் ஒலிம்பிக்கை நெருங்கியதுகூட கிடையாது. ஆனால் தெற்காசியாவில் இந்தியாதான் சாம்பியன்.

மும்பையில் இன்று தொடங்கும், 12 நாடுகள் பங்கேற்கும், ஆசியக்கோப்பை பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப்பை இந்தியா குறிவைத்துள்ளது. இதில் பெருமையான விஷயம் என்னவென்றால், இந்திய பெண்கள் அணிக்கு தேர்வாகியுள்ள 23 வீராங்கனைகளில் 5 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இந்திய அணியில் ஜொலிக்கும் தமிழக வீராங்கனைகளான இந்துமதி, சந்தியா, சவும்யா, கார்த்திகா, மாரியம்மாள் ஆகியோர் பயிற்சிமுகாமிலிருந்து இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர். இது சாதாரணமான விஷயமல்ல. இந்தியாவை பொறுத்தவரை, பெண்கள் கால்பந்தில் மணிப்பூர், ஒடிசாவின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் இந்த முறை தமிழகத்தின் பங்களிப்பு அதிகமாக உயர்ந்திருக்கிறது. இதில் கடலூரைச் சேர்ந்த 27 வயதான இந்துமதி கதிரேசன் தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார். இவர் சில போட்டிகளில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தியிருக்கிறார். 2018-ம் ஆண்டு தமிழகஅணி தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியபோது, அதில் நடுகளத்தின் முக்கியமான வீராங்கனையாக அதிக கோல்கள் அடித்த சிறப்பும் இவருக்கு உண்டு.

23 வயதான சவும்யா கோல்கீப்பராக விளையாடுகிறார். 22 வயதான கார்த்திகா நடுகள வீராங்கனையாகவும், 18 வயதான மாரியம்மாள், 23 வயதான சந்தியா ரங்கநாதன் ஆகியோர் முன்கள வீராங்கனையாகவும் விளையாடுகிறார்கள். சந்தியா ஆதரவற்றவராக இருந்தாலும், கால்பந்து மீது தணியாத ஆர்வம் கொண்டவர். 2021-22-ல் நடந்த தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் தமிழக அணியில் விளையாடி, 12 கோல்கள் போட்ட பெருமை பெற்றவர். சவும்யா, மாரியம்மாள், கார்த்திகா ஆகியோர் வேளாண்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள். எந்த ஒருதுறையிலும் பிரகாசிக்க பின்புலம் தேவையில்லை, அவர்கள் திறமையேபோதும் என்பதற்கு இந்த 5 வீராங்கனைகளுமே எடுத்துக்காட்டு. இவர்களைப்போல அனைத்து விளையாட்டுகளிலும் வெளியே தெரியாமல் உள்ள தமிழக வீரர்களின் திறமையை சரியாக அடையாளம்கண்டு அரசும், விளையாட்டு அமைப்புகளும் தொடர்ந்து ஊக்குவித்து கவுரவப்படுத்தினால், ஆண்டுக்கு பல வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய அணிகளுக்காக அறிமுகமாகி புகழ்சேர்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Next Story