அமெரிக்காவுக்கு மாம்பழம்-மாதுளை ஏற்றுமதி!


அமெரிக்காவுக்கு மாம்பழம்-மாதுளை ஏற்றுமதி!
x
தினத்தந்தி 20 Jan 2022 7:37 PM GMT (Updated: 2022-01-21T01:07:59+05:30)

நாட்டின் பொருளாதாரத்தில் அச்சாணியாக விளங்குவது வேளாண்மைதான்.

நாட்டின் பொருளாதாரத்தில் அச்சாணியாக விளங்குவது வேளாண்மைதான். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், 79 லட்சத்து 38 ஆயிரம் நில உடமைதாரர்களும், அவர்கள் நிலத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் எண்ணற்ற விவசாய தொழிலாளர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வேளாண் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைத்தால்தான் வாழ்வே இருக்கிறது. ஏதோ விளைநிலங்களில் பாடுபட்டோம், இயற்கை கருணை காட்டியது, மகசூல் கிடைத்தது என்று விளைபொருட்களை வந்த விலைக்கு விற்பதன்மூலம் இந்த தொழில் லாபகரமாக இருக்க முடியாது. விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவேண்டுமென்றால், அப்படியே விளைபொருட்களை விற்பதைவிட, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக விற்பதிலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும்தான் நல்ல லாபத்தை ஈட்டமுடியும். அந்தவகையில், தமிழ்நாட்டில் வெளிநாடுகளுக்கு வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதிக்கு எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தாலும், போதிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என்பது ஒரு குறையாக இருக்கிறது.

இந்தநிலையில், அமெரிக்கா தற்போது இந்தியாவிலிருந்து மாம்பழம், மாதுளை ஆகியவற்றை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. அதுபோல, இந்தியாவுக்கு அமெரிக்காவிலிருந்து செரி பழங்கள், ‘ஆல்பால்பா’ வைக்கோல் (இது பண்ணை விலங்குகளுக்கு உணவாகவும், ‘சாலட்’ தயாரிக்கும் கறிகாயாகவும் பயன்படுத்த உதவும் ஒரு வகை மணப்புல்) மற்றும் பன்றி இறைச்சி உணவுப்பொருட்களை இறக்குமதி செய்யவும் ஒப்புதல் கிடைத்துள்ளது. இருநாடுகளும் இதுகுறித்து தனித்தனியாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மாம்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான பயணங்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நேரத்தில் அமெரிக்க பரிசோதகர்கள் கதிர்வீச்சுத் தன்மை குறித்து ஆய்வுசெய்ய இந்தியாவுக்கு பயணம் செய்யமுடியாத காரணத்தினால்தான் 2020-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா கட்டுப்பாடு விதித்தது.

இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக கொள்கை அமைப்பின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இப்போது இந்தியாவிலிருந்து இந்த பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்யவும், அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2019-20-ம் நிதியாண்டில் ஏறத்தாழ ரூ.33 கோடி மதிப்பிலான 1,095 டன் மாம்பழம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த புதிய ஒப்பந்தபடி, முதல்கட்டமாக அல்போன்சா ரக மாம்பழம் மார்ச் மாதத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொடர்ந்து மாதுளை பழமும் ஏப்ரல் மாதத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இந்த அல்போன்சா ரக மாம்பழங்கள் தமிழ்நாட்டில் அதிகமாக விளைவதில்லை. மராட்டியம், உத்தரபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானாவில் அதிகம் விளைவதால், அந்த மாநிலங்களுக்குதான் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இனி எந்தெந்த வேளாண் விளைபொருட்களுக்கு, வெளிநாடுகளில் கிராக்கி இருக்கிறது என்பது தொடர்பான விழிப்புணர்வுகளை, நமது விவசாயிகளுக்கு ஏற்படுத்தி அந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை விரைவில் தொடங்கவேண்டும்.

ஏற்கனவே, இந்த ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் ஏற்றுமதி வர்த்தகத்துக்கான வேளாண் ஏற்றுமதி சேவை மையம் நிறுவுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த சேவை மையத்தில் விவசாயிகளுக்கு ஏற்றுமதி குறித்த விவரங்கள், விற்பனை வாய்ப்புகள், தரச்சான்றிதழ் பெறும் முறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்கிட இந்த சேவை மையம் உதவும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், தமிழக வேளாண்மைத்துறை வேளாண் ஏற்றுமதி சேவை மையம் மட்டுமல்லாது, ஏற்றுமதி செய்வதற்கு உதவும் வகையில், உணவு பதப்படுத்துதல் கிடங்குகளையும் அதிகளவில் தொடங்குவதற்கான முயற்சிகளை மிகவேகமாக செய்து வருவதாக வேளாண்மைத்துறை செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்திருப்பது, மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக அரசின் விளைபொருட்கள் உள்நாட்டு சந்தையில் மட்டுமல்லாது, வெளிநாட்டு சந்தைகளிலும் முக்கிய இடம்பெறும் மகிழ்ச்சிகரமான நாள் விரைவில் வரப்போகிறது என்பது வரவேற்கத்தக்கது. பெருமைக்குரியது.

Next Story