‘அட்வான்ஸ்' வருமான வரி கட்டுபவர்களுக்கு சலுகைகள்!


‘அட்வான்ஸ் வருமான வரி கட்டுபவர்களுக்கு சலுகைகள்!
x
தினத்தந்தி 21 Jan 2022 8:51 PM GMT (Updated: 21 Jan 2022 8:51 PM GMT)

எந்த ஒரு அரசாங்கம் என்றாலும் சரி, பொதுமக்களிடமோ, வர்த்தகம் செய்பவர்களிடமோ, நிறுவனங்களிடமோ இருந்து வரி வசூலிக்காமல் நிர்வாகத்தை நடத்தமுடியாது.

எந்த ஒரு அரசாங்கம் என்றாலும் சரி, பொதுமக்களிடமோ, வர்த்தகம் செய்பவர்களிடமோ, நிறுவனங்களிடமோ இருந்து வரி வசூலிக்காமல் நிர்வாகத்தை நடத்தமுடியாது. மக்களுக்கான நலத்திட்டங்களையும், நாட்டுக்கான வளர்ச்சித்திட்டங்களையும் நிறைவேற்றமுடியாது. வரி வசூல் என்பது இந்தியாவில் பண்டையகாலத்தில் இருந்தே மன்னர்களாலும் வசூலிக்கப்பட்டிருக்கிறது என்பதை சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் “அதிக ஆர்வத்தின் காரணமாய் உரியஅளவில் இல்லாமல், கூடுதலாக வரி வசூலித்தல் தவறு’’ என்று வருவாய் சேகரித்தல் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. “மக்களை தவிப்புக்குள்ளாக்கி வருவாயை இரட்டிப்பாக்கும் அதிகாரிகளுக்கு சிறுதண்டனை அளிக்கலாம்’’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மத்திய-மாநில அரசுகள் தங்கள் வருவாயை பெருக்க பல வகைகளில் வரிகளை வசூலித்தாலும், அவைகளெல்லாம் நேரடி வரிகள், மறைமுக வரிகள் என்ற 2 தலைப்பின் கீழ்தான் வருகிறது. நேரடி வரியில் முக்கியமாக தனிநபர் வருமான வரி, நிறுவன வரிதான் இடம்பெறுகிறது. வருமான வரியை பொறுத்தமட்டில் ஆண்டுவருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மேல் பெறுபவர்கள் வருமான வரி வளையத்துக்குள் வருவார்கள். அந்தவகையில் ஆண்டுதோறும் நேரடி வருவாய் கணக்கில் வருமான வரியாக மட்டும் ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் வசூலாகிறது. இந்த வரி வசூல் நிர்வாகத்தை கண்காணிக்க நாடு முழுவதும் 18 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில்வரும் சென்னை மண்டலத்தின்கீழ் தமிழ்நாடும், புதுச்சேரியும் அடங்கும். இந்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதியிலிருந்து கடந்த மாதம் 16-ந்தேதி வரையிலான நிலவரப்படி, நிகர வருமான வரிவசூல் ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. நிகரவசூல் என்றால் மொத்த வசூலிலிருந்து ரீபண்டில் கழித்துவரும் மீதத் தொகையாகும். வருகிற மார்ச் மாதம்வரை வசூலிக்கவேண்டிய இலக்கு என்பது ரூ.11 லட்சத்து 8 ஆயிரம் கோடிதான். இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், அதற்குள்ளேயே வருமானவரி வசூல் இலக்கை நெருங்கிவிட்டது. நாட்டின் மொத்த வருவாயில் 49.97 சதவீதம் இந்த நேரடி வரிவசூலில்தான் இருக்கிறது. நாட்டின் வருவாயிலேயே பாதி வருவாயை வழங்கும் வருமான வரி கட்டுபவர்களிடமிருந்து நோகாமல் வரி வசூலிக்க வேண்டுமேதவிர, கசக்கிப்பிழிந்து, அவர்களை துன்புறுத்தி வசூல்செய்யக்கூடாது என்பது மக்களிடையே பெரும் கோரிக்கையாக இருக்கிறது.

ஏற்கனவே, வருமான வரியை கட்டி மீதமுள்ள வருவாயை வைத்து எதிர்காலத்துக்காக சேமிப்பவர்களுக்கு கிடைக்கும் வட்டிக்கும் வருமான வரி போடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதுகுறித்து நீண்டகாலமாக முதியோரிடம் இருந்து கோரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்பட்டும், அரசு இன்னும் பாராமுகமாக இருப்பதை நாடாளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்தான் குரல் எழுப்பவேண்டும். இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நிதியாண்டிலும் மாதம் ரூ.10 ஆயிரத்துக்குமேல் வருமான வரி கட்டுபவர்கள், 4 தவணைகளில் ‘அட்வான்ஸ்’ வரி என்று முன்கூட்டியே கட்டவேண்டும் என்று விதி இருக்கிறது. இவ்வாறு ‘அட்வான்ஸ்’ வரி கட்டாதவர்களுக்கு அபராத வட்டி வசூலிக்கப்படுகிறது. ‘அட்வான்ஸ்’ வரி என்பது அந்த ஆண்டு முழுவதிலும் கிடைக்கும் உத்தேச வருமானத்தை வைத்து கட்டப்படுவது ஆகும். ஆனால் கொரோனா போன்ற நேரங்களில் முதல் 6 மாதம் வருவாய் கிடைத்திருந்தாலும், எஞ்சியுள்ள காலங்களுக்கு அதே உத்தேச வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை.

எனவே, உத்தேச வருமானத்தை கணக்கிட்டு அந்த வருவாய் வரவில்லை என்றால் வரியை முழுமையாக கட்டிய நிலையில் ‘ரீபண்டு’ கோரலாம். ஆனால், அவ்வாறு ‘ரீபண்டு’ கோரும்போது ‘அட்வான்ஸ்’ வரி கட்டியநாளிலிருந்து அந்த தொகைக்கு வட்டி கணக்கிடப்படுவது இல்லை. அடுத்த நிதியாண்டின் தொடக்கநாளை கணக்கிட்டுதான் வட்டி வழங்கப்படுகிறது. ‘அட்வான்ஸ்’ வரி கட்டுபவர்களுக்கு அரசு சலுகைகள் அளிக்கவேண்டும் என்று கோரிக்கையாக இருக்கும் நேரத்தில், கட்டியத்தொகைக்கு வட்டி வழங்கும்போது பின்தேதியிட்ட தேதிக்கு வழங்காமல், கட்டியநாளில் இருந்தே வழங்கவேண்டும் என்பதுதான் நியாயம். மொத்தத்தில் நாட்டின் பொருளாதாரத்தை தங்கள் தோளில் சுமந்துநிற்கும் வருமான வரி கட்டுபவர்களுக்கு பல ஊக்கச்சலுகைகளை அரசு அளிக்கவேண்டும் என்பதுதான் வருமான வரி கட்டும் தனிநபர்கள், நிறுவனங்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story