முரண்பாடு எதற்கு?; சுமுக முடிவு காணலாமே!


முரண்பாடு எதற்கு?; சுமுக முடிவு காணலாமே!
x
தினத்தந்தி 23 Jan 2022 10:34 PM GMT (Updated: 2022-01-24T04:04:11+05:30)

மாநில அரசு பணியில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அகில இந்திய பணிகளிலுள்ள அதிகாரிகளை மத்திய அரசாங்க பணிக்கு எடுத்துக்கொள்ளும் கூடுதல் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கும் வகையில், இதற்குரிய விதிகளில் திருத்தம் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நாடு முழுவதும் இப்போது பெரிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

மாநில அரசு பணியில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அகில இந்திய பணிகளிலுள்ள அதிகாரிகளை மத்திய அரசாங்க பணிக்கு எடுத்துக்கொள்ளும் கூடுதல் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கும் வகையில், இதற்குரிய விதிகளில் திருத்தம் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நாடு முழுவதும் இப்போது பெரிய சர்ச்சை கிளம்பியுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாறுதல்களை கைவிடவேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், “இரும்பு மனிதர்” என்று போற்றி புகழப்படும் சர்தார் வல்லபாய் படேல்தான், இந்திய ஆட்சிப் பணி என்று கூறப்படும் ஐ.ஏ.எஸ். மற்றும் இந்திய காவல் பணி என்று கூறப்படும் ஐ.பி.எஸ். போன்ற அகில இந்திய பணிகள் உருவாக்கப்படவேண்டும் என்ற ஆலோசனையை வழங்கி, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகள், மாநில அரசுப் பணியிலோ, மத்திய அரசு பணியிலோ இருக்கலாம் என்பதை எடுத்துக்கூறினார்.

அந்த வகையில், ஆண்டுதோறும் மத்திய தேர்வாணையக் குழு அகில இந்திய அளவில், 24 பணிகளை உள்ளடக்கிய குடிமைப்பணிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்துகிறது. முதல்நிலை, முதன்மை தேர்வுகள் என்று நடத்தி, இறுதியாக நேர்முகத்தேர்வு நடக்கிறது. ஆண்டுதோறும் எவ்வளவு காலி இடங்கள் இருக்கிறதோ, அந்த இடங்களுக்காக இந்த தேர்வுகள் நடக்கிறது. தேர்வு பெற்றவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களுக்கு பணி ஒதுக்கப்படுகிறது.

மாநில அரசுப் பணியில்கூட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அதிகாரிகள், மத்திய அரசாங்க பணிக்கு போவதற்கு விரும்பினால், அதற்கு சில நடைமுறைகள் இருக்கின்றன. இந்த மாற்றங்கள் எல்லாம் ஐ.ஏ.எஸ். பணி விதி 6-ன் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய அரசாங்க பணிகளுக்கு போகவிரும்பும் அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசு, மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பிவருகிறது. மத்திய அரசாங்கம் அந்த பட்டியலிலுள்ள அதிகாரிகளில் சிலரை தேர்ந்தெடுத்து நியமித்துக்கொள்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு பணிகளில், தமிழகத்திலிருந்து சென்ற அதிகாரிகள்தான் கோலோச்சிக் கொண்டிருந்தனர். ஆனால், இப்போது மிகக் குறைவான அளவிலேயே இருக்கிறார்கள்.

இப்போது, மத்திய அரசாங்க பணியிலும், தேவைக்கேற்ப ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இல்லை என்றநிலை இருக்கிறது. நிறைய பற்றாக்குறை இருக்கிறது. இதற்கு காரணம், சில மாநிலங்களிலிருந்து போதுமான அளவு அதிகாரிகள் மத்திய அரசு பணிகளுக்கு அனுப்பப்படுவது இல்லை என்ற குறையும் கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே எந்தவொரு குடிமைப்பணி அதிகாரியின் விருப்பத்துக்கு மாறாககூட மத்திய பணிக்கு அதிகாரிகளை மாற்றம் செய்யும் வகையில், இதற்கான விதியில் 4 திருத்தங்களை கொண்டுவந்து அமல்படுத்த மத்திய அரசாங்கம் முடிவு செய்து, இதுகுறித்து மாநில அரசுகள் நாளைக்குள் பதில் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டிருக்கிறது. இந்த 4 திருத்தங்களும் மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக இருக்கிறது.

மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே எந்தவொரு அதிகாரியையும் மத்திய அரசு பணிக்கு எடுத்துக்கொள்ளும் சர்வ அதிகாரத்தை மத்திய அரசாங்கத்துக்கு இந்த திருத்தங்கள் கொடுக்கிறது. எனவே, இந்த திருத்தங்களை கைவிடவேண்டும் என்கிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.அசோக் வரதன் ஷெட்டி. பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த திருத்தங்களை அதிரடியாக நிறைவேற்றுவதற்கு பதிலாக, மாநில அரசுகளோடு கலந்துபேசி ஒரு நல்ல முடிவை எடுக்கலாம். மத்திய அரசாங்க பணிக்கு செல்லவிரும்பும் அதிகாரிகளின் பட்டியலை மாநில அளவில் தயாரித்து, பழைய நடைமுறைப்படியே அவர்களை எடுத்துக்கொள்ளலாமேதவிர, மத்திய அரசாங்கமே முடிவு செய்வது சரியல்ல என்று ஒரு கருத்து நிலவுகிறது. மத்திய அரசு பணிக்கு போகவிரும்பும் அதிகாரிகளுக்கு எந்தத்தடையும் இருக்கக்கூடாது.

மாநிலங்களிலும் புதிய புதிய துறைகள், புதிய பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கத்தால், அதிகாரிகள் பற்றாக்குறை என்பதை கருத்தில்கொண்டு, எதிர்காலத்தில் அதிக அளவில் இந்த பணிகளுக்கான தேர்வை நடத்தவேண்டும்.

Next Story