கதவை தட்ட வேண்டாம்; திறந்தே இருக்கிறது!


கதவை தட்ட வேண்டாம்; திறந்தே இருக்கிறது!
x
தினத்தந்தி 24 Jan 2022 8:13 PM GMT (Updated: 24 Jan 2022 8:13 PM GMT)

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. தொடக்கம் முதலே தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு முனைப்பு காட்டிவருகிறது. “தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவரும் முதலீட்டாளர்கள், அதற்காக கதவை தட்ட வேண்டியதில்லை. எங்கள் கதவுகள் திறந்தே இருக்கும் வகையில்தான் தொழில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமைபட தெரிவித்துவருகிறார்.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர், ஒரு குழுவாக செயல்பட்டு, “தொழில் முனைவோர் நாடிவர வேண்டாம். உங்களை நாங்கள் தேடி வருகிறோம்” என்ற வகையில், அவர்களோடு தொடர்பு கொண்டு, தமிழக அரசு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வரும் தொழில் முனைவோருக்கு என்னென்ன சலுகைகளை வழங்கிவருகிறது? என்பதை விளக்கிக்கூறி, அவர்களை ஈர்க்கும் முயற்சியில் வெற்றிபெற்று வருகிறார்கள்.

அதனால்தான், 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம்வரை தொழில் முதலீடுகளை அதிகமாக ஈர்த்துள்ள மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த காலக்கட்டங்களில் 304 திட்டங்கள் மூலம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 902 கோடியை தமிழகம் மூலதனமாகப் பெற்றுள்ளது. இந்த வகையில், குஜராத் 2-வது இடத்திலும், தெலுங்கானா 3-வது இடத்திலும் இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய டாட்டா குழுமம், ஜெ.எஸ்.டபிள்யூ. ரினிவ், இந்துஸ்தான் யூனிலிவர், டி.வி.எஸ். மோட்டார், அதானி குழுமம், லார்சன் அண்டு டியூப்ரோ போன்ற பெரிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் 18 சதவீதம் உயர்ந்துள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பொருத்தமட்டில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையில் மட்டும் ரூ.8,364 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. எதிர்காலம் மின்சார வாகனங்களுக்கானதுதான் என்பதை தமிழக அரசு உணர்ந்த காரணத்தால்தான், திருவள்ளூர் மாவட்டம் மணலூரில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் மின்சார வாகன தொழில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

மின்சார வாகன உற்பத்தியிலும், மின்சார வாகனங்களுக்குத் தேவையான பேட்டரி உற்பத்தியிலும் புகழ்பெற்ற பல பெரிய நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. மொத்தம் ரூ.19,868 கோடிக்கான முதலீடுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மின்சார வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் தொழிலை தொடங்கவும் சில நிறுவனங்கள் முன்வந்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 300 ஏக்கர் நிலப்பரப்பில், நகர் திறன் பூங்கா அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளையும் தமிழக தொழில்துறை தொடங்கியுள்ளது.

உலகில் புகழ்பெற்ற செல்வந்தர்களில் ஒருவரான ஏலன் மஸ்க், தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று நடத்தும் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் 7 மாடல்களில் மின்சார கார்களை உற்பத்தி செய்வதற்கான ஒப்புதலை மத்திய அரசாங்கத்திடம் பெற்றிருக்கிறது. ஆனால், தங்களுக்கு இறக்குமதி வரியை குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகிறது. இந்தநிலையில், டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையை தங்கள் மாநிலத்தில் தொடங்க மராட்டியம், தெலுங்கானா, குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் முயற்சி செய்துவருகின்றன.

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணனும், எப்படியாவது இந்த தொழிற்சாலையை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்துவிடவேண்டும் என்று தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். “தமிழ்நாடுதான் இந்தியாவின் மின்சார வாகன தலைநகரம். உலகில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தைகளில், முதல் 9 இடங்களில் தமிழ்நாடும் ஒன்று. மின்சார வாகன முதலீடுகளில் 34 சதவீத முதலீடுகள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது” என்பதை எடுத்துச்சொல்லி அழைப்பு விடுத்து வருகிறார்கள். தொழில்துறையில் தமிழ்நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்பதை தொழில்துறையின் முயற்சிகள் உறுதிப்படுத்துகிறது.

Next Story