போலீசாரின் பணி சிறக்க புதிய காவல் ஆணையம்!


போலீசாரின் பணி சிறக்க புதிய காவல் ஆணையம்!
x
தினத்தந்தி 25 Jan 2022 7:41 PM GMT (Updated: 25 Jan 2022 7:41 PM GMT)

ஒரு மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதிலும், மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும், பாதுகாப்புக்கும் பெரும் பணியாற்றுவது போலீஸ் துறைதான்.

ஒரு மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதிலும், மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும், பாதுகாப்புக்கும் பெரும் பணியாற்றுவது போலீஸ் துறைதான். இரவில் மக்கள் நிம்மதியாக உறங்க வேண்டுமென்றால், போலீசார் விழிப்போடு பணியாற்றினால்தான் முடியும். அவர்கள் இரவு ரோந்தின்போது ஊதும் விசில், அவர்கள் வாகனங்களிலிருந்து எழுப்பப்படும் ஒலி, திருடர்களை பயமுறுத்தி ஓடச்செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், மக்களுக்கு அது தூக்கம் கெடுவதாக இருக்காது. நம்மை பாதுகாக்க போலீசார் ரோந்து செல்கிறார்கள் என்ற வகையில், அந்த விசிலும், ஒலியும் அவர்களுக்கு தாலாட்டு பாடுவதுபோல இருக்கும். நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கும்.

தமிழ்நாடு போலீஸ் என்பது குற்றங்களை தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டுமல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகவும் செயல்பட்டு வருகிறது. போலீஸ் பணி என்பது சாதாரண பணியல்ல. இரவு-பகல், மழை-வெயில், பனி-குளிர் என்று எந்த பருவநிலையிலும் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கவேண்டும். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளை மக்கள் குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். ஆனால், போலீசார் மட்டும் அந்த மகிழ்ச்சியை குடும்பத்தோடு பகிர்ந்துகொள்ள முடியாமல் பணியில் இருக்கவேண்டும்.

சமீபத்தில், பொங்கலையொட்டி, அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை இருந்தது. ஆனால், போலீஸ் நிலையங்கள் மட்டும் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கின. என்றாலும், போலீசார் மீதும் பல குறைகள் கூறப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தகப்பன்-மகன் இருவரும் பலத்த காயங்களோடு மரணமடைந்த சம்பவத்தை கூறலாம். இதுபோல, பல அத்துமீறல்களையும் சொல்ல முடியும்.

போலீஸ் துறையில் லஞ்சம் தலையெடுத்தால், அது மக்களை பெருமளவில் பாதிக்கும். ஒரு பக்கம் காவல் துறையின் பணியும் சிறக்கவேண்டும், மற்றொரு பக்கம் அவர்கள் நலனும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற நோக்கில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில், “மீண்டும் கழக அரசு அமைந்ததும் 4-வது முறையாக போலீஸ் ஆணையம் அமைக்கப்பட்டு, கால வரையறைக்குள் அதன் பரிந்துரைகள் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், கடந்த 13-9-2021 அன்று சட்டசபையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “காவலர்-பொதுமக்களிடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களுக்கு தேவையான திட்டங்களையும், புதிய பயிற்சி முறைகளையும் பரிந்துரைக்கும் நோக்கத்துடன் காவல் ஆணையம் ஒன்று மீண்டும் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.

தேர்தல் வாக்குறுதியை, சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சி.டி.செல்வம் தலைவராகவும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கா.அலாவுதீன், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கே.ராதாகிருஷ்ணன், மனநல மருத்துவர் சி.ராமசுப்பிரமணியம், முன்னாள் பேராசிரியர் நளினி ராவ் ஆகியோரை உறுப்பினர்களாகவும், காவல்துறை கூடுதல் இயக்குனர் (குற்றப்புலனாய்வு) மகேஷ்குமார் அகர்வாலை உறுப்பினர்-செயலாளராகவும் கொண்ட ஒரு காவல் ஆணையம் இப்போது நியமிக்கப்பட்டு, அதற்குரிய அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது 4-வது காவல் ஆணையம் ஆகும். இதற்கு முன்பு, மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தின்போது, 1969-ல் ஆர்.ஏ.கோபால்சாமி தலைமையில் ஒரு காவல் ஆணையமும், 1989-ல் டி.சபாநாயகம் தலைமையில் ஒரு காவல் ஆணையமும், 2006-ல் ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் ஒரு காவல் ஆணையமும் அமைக்கப்பட்டு, பல பரிந்துரைகள் பெறப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் முதல் காவல் ஆணையம் இதுதான். இந்த ஆணையம் போலீசார், பொதுமக்கள், குற்றங்கள் புலனாய்வு என பல கோணங்களில் தனது பரிந்துரைகளை அளித்து, காவல் துறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கவேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Next Story