தலையங்கம்

10 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ! + "||" + Urban local elections after 10 years!

10 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் !

10 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் !
தமிழ்நாடு முழுவதும் இன்று, 21 மாநகராட்சிகளில் உள்ள 1,374 வார்டுகளுக்கும், 138 நகராட்சிகளில் உள்ள 3,843 வார்டுகளுக்கும், 490 பேரூராட்சிகளில் உள்ள 7,621 வார்டுகளுக்கும் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
தமிழ்நாடு முழுவதும் இன்று, 21 மாநகராட்சிகளில் உள்ள 1,374 வார்டுகளுக்கும், 138 நகராட்சிகளில் உள்ள 3,843 வார்டுகளுக்கும், 490 பேரூராட்சிகளில் உள்ள 7,621 வார்டுகளுக்கும் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.


நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும், உள்ளூர் பிரச்சினைகளை தீர்க்க கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் பதவி என்பது மிகமிக முக்கியமானதாகும். தங்கள் தெருவில் சாலை பழுதடைந்திருக்கிறது, தண்ணீர் வரவில்லை, மின்சார விளக்கு எரியவில்லை, துப்புரவு பணிகள் சரியாக நடைபெறவில்லை, ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் சரியாக இல்லை என்பதுபோன்ற பல அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகாண அவர்களைத்தான் மக்கள் எளிதில் தொடர்புகொள்ள முடியும். மேலும், பெரும்பாலான நிதியுதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருந்தால்தான் மத்திய அரசிடமிருந்து தாராளமாக கிடைக்கும்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், கிராம பஞ்சாயத்துக்கள், பஞ்சாயத்து யூனியன்கள், மாவட்ட பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. அதில், சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், 9 மாவட்டங்களில் இந்த தேர்தல் நடக்காமல் இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த ஆண்டு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக இந்த தேர்தல் நடந்தது. கடைசியாக மாநகராட்சி, நகராட்சி தேர்தல்கள் 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17, 19-ந் தேதிகளில் நடந்தது. இவர்களின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முடிந்தது. அதன்பிறகு, மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், அதிகாரிகள் நிர்வாகத்திலேயே மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் இயங்கி வருகின்றன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு, 4 மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்துவிடவேண்டும் என்று பிறப்பித்த உத்தரவுக்கிணங்க, இப்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ந்தேதி நடக்கிறது. 22-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து, புதிய உறுப்பினர்கள் மார்ச் 2-ந்தேதி பதவி ஏற்கிறார்கள். மாநகராட்சி - நகராட்சி மன்ற உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவி இடங்களுக்கு நேரடி தேர்தல் கட்சி அடிப்படையிலேயே நடக்கிறது.

மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்தான் இந்த பதவிகளுக்கு ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பார்கள். அவ்வாறு மறைமுக தேர்தல் நடப்பதால் சில நன்மைகளும் இருக்கிறது, பாதிப்புகளும் இருக்கிறது. எப்படி என்றால், நேரடியாக மக்களே தேர்ந்தெடுத்தால், மேயரோ அல்லது நகரசபை-பேரூராட்சி தலைவர்கள் ஒரு கட்சியை சேர்ந்தவர்களாகவோ, கவுன்சிலர்கள் மாற்று கட்சியை சேர்ந்தவர்களாகவோ இருந்தால், மேயர் கொண்டுவர நினைக்கும் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது. மேயருக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும் இடையே முரண்பாடுதான் இருக்கும். நிர்வாகம் செம்மையாக இருக்க முடியாது.

ஆனால், நேரடி தேர்தல் நடந்தால், மக்களே தாங்கள் விரும்பும் தலைவரை ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்க முடியும். சென்னை மாநகராட்சியை பொறுத்தமட்டில், தி.மு.க. சார்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அ.தி.மு.க.வின் முதல் மற்றும் ஒரே மேயராக சைதை துரைசாமியும் நேரடியாக மக்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற உறுப்பினர்கள்தான் தலைவரையும், துணைத் தலைவரையும் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பார்கள் என்றாலும், இதுவும் மக்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த கட்சியின் கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற வகையில், நிச்சயம் வரவேற்புக்குரியது.

தேர்தலின்போது, அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் எடுக்கவேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்கலாம் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பதவிக்கான தேர்தல்
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பதவிக்கான முதல்கட்ட தேர்தல் 21-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
3. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 25 மாவட்டங்களில் 2-ம் கட்டமாக அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட கட்சியின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 25 மாவட்டங்களில் 2-ம் கட்டமாக அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் 11-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4. பாகிஸ்தானில் தேர்தல் எப்போது நடத்தலாம்..? - தேதிகளை பரிந்துரைக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு
பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணை தொடர்கிறது.
5. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேர்தல்
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கு உள்கட்சி தேர்தல் தேதியை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டனர்.