போர் நினைவிடத்தில் இணைக்கப்பட்ட அமர்ஜவான் ஜோதி


போர் நினைவிடத்தில் இணைக்கப்பட்ட அமர்ஜவான் ஜோதி
x
தினத்தந்தி 28 Jan 2022 7:44 PM GMT (Updated: 2022-01-29T01:14:10+05:30)

நாகாலாந்து மாநிலம் கொஹிமாவிலுள்ள போர் நினைவிடத்துக்கு செல்பவர்கள், உணர்ச்சி பொங்க, கண்ணீர் மல்காமல் திரும்ப முடியாது.

நாகாலாந்து மாநிலம் கொஹிமாவிலுள்ள போர் நினைவிடத்துக்கு செல்பவர்கள், உணர்ச்சி பொங்க, கண்ணீர் மல்காமல் திரும்ப முடியாது. அங்கு 2-ம் உலகப்போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான போர் வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில், ஆங்கிலத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. அதில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள் மனதை உருக்கும் வகையில் உள்ளது. “இங்கிருந்து நீங்கள் வீட்டுக்கு செல்லும்போது உங்கள் குடும்பத்தினரிடம் எங்களை பற்றி சொல்லுங்கள். உங்களுடைய நாளைய தினத்துக்காக எங்களுடைய இன்றைய தினத்தை கொடுத்துவிட்டோம்” என்று அந்த கல்வெட்டில் எழுதப்பட்டிருக்கும்.

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் உயிரிழந்த பல போர் வீரர்களின் நினைவை போற்றும் வகையில், அவர்களுடைய கல்லறைகள், நினைவு சின்னங்கள் இன்னும் இந்தியாவில் பல இடங்களில் இருப்பதை காணமுடிகிறது. அதுபோல, சுதந்திர இந்தியாவில் நமக்காக உயிரிழந்த போர் வீரர்களின் தியாகத்தையும் நெஞ்சில் சுமந்து போற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கிறது.

டெல்லியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1914-ம் ஆண்டு முதல் 1921-ம் ஆண்டுவரை நடந்த போர்களில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக 1931-ம் ஆண்டு அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்ட ‘இந்தியா கேட்’ நிறுவப்பட்டது. 1971-ம் ஆண்டு வங்காளதேச போரில் உயிரிழந்த போர் வீரர்களின் நினைவாக 1972-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி, ‘அமர்ஜவான் ஜோதி’ என்ற அணையா விளக்கை திறந்துவைத்தார். ஆனால், இந்த இடத்தில் வங்காளதேச போரில் உயிரிழந்த வீரர்களின் பெயர்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை. 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி இந்த இடத்திலிருந்து 400 மீட்டர் தூரத்தில் தேசிய போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவிடத்தில், சுதந்திர இந்தியாவில் உயிர் தியாகம் செய்த 25,942 இந்திய வீரர்களின் பெயர்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, அங்கும் ஜோதி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நினைவிடம் அமைக்கப்பட்ட பிறகு, மறைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்து நிகழ்ச்சிகளும் இந்த புதிய போர் நினைவிடத்தில்தான் நடந்துவருகிறது.

வங்காளதேச போரில் உயிரிழந்த வீரர்களின் பெயர்களும், இந்த புதிய போர் நினைவிடத்தில்தான் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே, அமர்ஜவான் ஜோதியை இந்த புதிய போர் நினைவிடத்திலுள்ள ஜோதியோடு இணைக்கும் வகையில், முழு ராணுவ மரியாதையோடு அங்கிருந்து அந்த ஜோதியை தீப்பந்தத்தில் எடுத்துக்கொண்டு செல்லப்பட்டு சமீபத்தில் ஏற்றப்பட்டது. இதற்கு பல விமர்சனங்கள் எழுந்தாலும், புதிய போர் நினைவிடத்தில்தான் நமக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் குடும்பத்தினரும், வாரிசுகளும் ஆண்டாண்டு காலமாக அந்தப்பெயர்களைப் படித்து மரியாதை செலுத்த வசதியாக இருக்கும்.

நாட்டு மக்களும் நமக்காக உயிர்நீத்த 25,942 இந்திய வீரர்களுக்கும் ஒரே இடத்தில் மரியாதை செலுத்துவதற்கு ஏதுவாக இருக்கும். அந்தவகையில், அரசின் இந்த நடவடிக்கை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்றே கூறலாம். இத்தகைய சூழ்நிலையில், “வங்கத்து சிங்கம்” என்று எல்லோராலும் போற்றப்படும், “கெஞ்சியும் கேட்டும் பெறும் யாசக பொருள் அல்ல விடுதலை. ரத்தம் சிந்தி போராடி பெறவேண்டிய உரிமையே விடுதலை” என்று போர் முழக்கமிட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போசின் சிலை இந்தியா கேட்டில் நிறுவப்படும் என்று அறிவித்த பிரதமர் நரேந்திரமோடி, தெலுங்கானா மாநிலத்திலுள்ள கருப்பு கிரானைட்டால் இந்த சிலை விரைவில் அமைக்கப்படும் என்று பிரகடனப்படுத்தினார்.

அந்த சிலை நிறுவப்படும் வரையில் இருப்பதற்காக கடந்த 23-ந்தேதி அந்த இடத்தில் நேதாஜியின் ஹோலோகிராம் சிலையை பிரதமர் திறந்துவைத்தார். இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு சிலை, அருகிலுள்ள தேசிய போர் நினைவிடத்தில் நாட்டுக்காக தங்கள் உயிரை நீத்த ராணுவ வீரர்களின் நினைவுகள் போற்றப்படுகிறது என்ற வகையில், பிரதமர் மோடியின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது.

Next Story