பள்ளிக்கூட மணி சத்தம் கேட்கப்போகிறது!


பள்ளிக்கூட மணி சத்தம் கேட்கப்போகிறது!
x
தினத்தந்தி 30 Jan 2022 8:01 PM GMT (Updated: 30 Jan 2022 8:01 PM GMT)

“கூட்டுப்புழு எதைத் தன் முடிவு என்று நினைக்கிறதோ, அதைத்தான் உலகம் வண்ணத்துப்பூச்சி என்று அழைக்கிறது” என்று கூறினார், லாவோ சூ என்ற பண்டைய கால சீன தத்துவ மேதை.

“கூட்டுப்புழு எதைத் தன் முடிவு என்று நினைக்கிறதோ, அதைத்தான் உலகம் வண்ணத்துப்பூச்சி என்று அழைக்கிறது” என்று கூறினார், லாவோ சூ என்ற பண்டைய கால சீன தத்துவ மேதை. அதுபோல, ஊரடங்கு முடிவுக்கு வரும்போதுதான் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கும். அதற்கு அச்சாரமாக, நாளை பிப்ரவரி 1-ந்தேதி முதல் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவு, மாணவ செல்வங்களை மட்டுமல்லாமல், பெற்றோர், ஏன் தமிழ் சமுதாயத்தையே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. பள்ளிக்கூட மணி சத்தத்தை கேட்க மாணவர்கள் இப்போதே ஆர்வமாக உள்ளனர்.

கொரோனா பரவத் தொடங்கிய நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந்தேதி முதல் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. “ஆன்லைன்” மூலமே மாணவர்கள் பாடம் கற்றுவந்த நிலையில், அந்த ஆண்டு பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே ஆண்டு இறுதித்தேர்வு நடத்தப்பட்டது. 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 2020-2021-ம் கல்வி ஆண்டிலும் கொரோனா நீடித்ததால், “ஆன்லைன்” மூலமே வகுப்புகள் தொடர்ந்தன. அந்த ஆண்டு எந்த வகுப்புக்கும் தேர்வு நடத்தப்படாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா பரவல் சற்று குறைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையும், நவம்பர் 1-ந்தேதியில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் மாணவர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால், வடகிழக்கு பருவ மழைக்காலம் என்பதால், பெரும்பாலான நாட்கள் பள்ளிகூடங்களுக்கு விடுமுறையே விடப்பட்டிருந்தது. இம்மாதம் தொடக்கத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரத்தில், கொரோனா அதிகரித்ததால், பள்ளிக்கூடங்கள் முழுமையாக மூடப்பட்டன.

என்னதான் “ஆன்லைன்” மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டாலும், மாணவர்களுக்கு பள்ளிக்கூட மணி சத்தம் கேட்டவுடன் ஏற்படுகிற ஒரு பரவசம், சீருடை அணிந்து கையில் புத்தக பையை தூக்கிக்கொண்டு செல்லும்போது ஏற்படும் மகிழ்ச்சி பெருக்கு, “ஆன்லைன்” வகுப்புகளில் கிடைப்பதில்லை. காலையில் எழுந்து குளித்து, ஆடை அணிந்து பள்ளிக்கூடங்களுக்கு செல்லவேண்டும் என்ற நேர நிர்ணயம் “ஆன்லைன்” வகுப்புகளில் கிடையாது. மேலும், முகம் முகமாக பார்த்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்போது, ஏதாவது ஒரு மாணவன் கவனக்குறைவாக இருந்தாலோ?, அல்லது புரியாமல் விழித்தாலோ? ஆசிரியர்களால் கண்டுபிடிக்க முடியும். அந்த மாணவன் மீது கூடுதல் கவனம் செலுத்த முடியும்.

எல்லா இடங்களிலும் “வை-பை” வசதி இல்லாதநிலை ஒரு பக்கம் இருந்தாலும், கிராமப்புறங்களிலுள்ள ஏழை-எளிய மாணவர்களுக்கு “ஸ்மார்ட் போன்” வசதி இல்லாத நிலையில், “ஆன்லைன்” வகுப்பில் கலந்துகொள்ள முடியாது. இதன் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாகவே கல்வியின் தரம், குறிப்பாக தொடக்க பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் மீதான கவனிப்பு குறைந்துவிட்டது.

பள்ளிக்கூட குழந்தைகளில், 70 சதவீதம் பேருக்கு மேல் கொரோனாவை எதிர்த்து நிற்கும் வல்லமை படைத்த “ஆன்டி பாடீஸ்” என்று கூறப்படும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், மருத்துவ நிபுணர்களும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இங்கிலாந்து, அமெரிக்காவில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் ஒன்றும் பெரிதாக அதிகரிக்கவில்லை. எனவே, அனைத்து மாணவர்களும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் வகுப்புகளில் உட்கார்ந்தால், பெரிதாக பாதிப்பு ஏற்பட்டுவிடாது. மாணவர்களின் உடல் வெப்பநிலையை அடிக்கடி பரிசோதிக்கும் ஏற்பாடுகளையும் அரசு செய்யவேண்டும். இப்போது 15 வயது முதல் தடுப்பூசி போடும் நடைமுறையை விரிவாக்கி, முதல் கட்டமாக 12 வயது முதல் தடுப்பூசியும், அடுத்த கட்டமாக குழந்தைகளுக்கு தடுப்பூசியும் போடுவது குறித்து மத்திய அரசாங்கம் பரிசீலிக்கவேண்டும்.

Next Story