நாடாளுமன்றத்தில் சூறாவளியை கிளப்பும் ‘பெகாசஸ்’ விவகாரம்!


நாடாளுமன்றத்தில் சூறாவளியை கிளப்பும் ‘பெகாசஸ்’ விவகாரம்!
x
தினத்தந்தி 1 Feb 2022 7:45 PM GMT (Updated: 1 Feb 2022 7:45 PM GMT)

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவை கூட்டுக்கூட்டத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவை கூட்டுக்கூட்டத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். ஜனாதிபதி தனது உரையை தொடங்கும் முன்பே, தி.மு.க. உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் ‘நீட்’ தேர்வு மசோதாவை தமிழக கவர்னர் தாமதப்படுத்துகிறார் என்று எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். கைகளில் பதாகைகளை ஏந்திக்கொண்டு தங்கள் எதிர்ப்பை காட்டிய அவர்கள், ஜனாதிபதி உரை தொடங்கியவுடன் ஓரிரு நிமிடங்கள் கோஷம் எழுப்பிவிட்டு அமர்ந்தனர். நாடாளுமன்றம் தொடங்கிய முதல் நாளில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியநிலை பா.ஜ.க. அரசுக்கு ஏற்பட்டது.

நேற்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. பிப்ரவரி 7-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி இதற்கு பதிலளிக்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி, இம்மாதம் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. 2-ம் பாதி மார்ச் 14-ந்தேதி முதல் ஏப்ரல் 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தொடர் முழுவதும் அனல் பறக்கும், சூறாவளி வீசும், புயல் அடிக்கும், பெரிய பரபரப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகளுக்கு கையில் இப்போது ‘பெகாசஸ்’ விவகாரம் கிடைத்துவிட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ‘தி வயர்’ என்று கூறப்படும் ‘ஆன்லைன்’ செய்தி நிறுவனம், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ. என்ற நிறுவனத்தின் ‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் இந்தியாவிலுள்ள மத்திய மந்திரி உள்பட அரசியல்வாதிகள், அதிகாரிகள், செய்தியாளர்கள் உள்பட 300 பேர்களின் ஸ்மார்ட் போன்களில் உள்ள தகவல்கள் திருடப்பட்டதாக கூறியது.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செல்போனும் அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால், அவர் இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்று மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், இதை முற்றிலுமாக மறுத்தார். இத்தகைய சூழ்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான ஒரு சிறப்பு குழுவை, கடந்த அக்டோபர் மாதம் 27-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நியமித்து, இதன் விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சில நாட்களுக்கு முன்பு, ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் ஒரு புலனாய்வு சிறப்பு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “மத்திய அரசாங்கம் 2017-ல் பிரதமர் நரேந்திரமோடி இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் செய்தபோது, அங்கு ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் செல்போன்களை ஒட்டுகேட்க ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் மற்றும் ஏவுகணைகள் வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் எதிர்க்கட்சி தலைவர்கள், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், செய்தியாளர்கள் போன்றவர்களின் செல்போன்களை ஒட்டுகேட்க பயன்படுத்தப்பட்டது. இது தேச துரோகம். பட்ஜெட் கூட்டத்தொடரில் இதை கிளப்புவோம்” என்று காங்கிரஸ் கட்சி கூறியிருக்கிறது.

இதற்கிடையில், “இப்படியொரு சம்பவமே நடக்கவில்லை” என்று நாடாளுமன்றத்திலேயே கூறிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரியை எதிர்த்து, பல உறுப்பினர்கள் அவை உரிமை மீறல் பிரச்சினைக்கான நோட்டீசை கொடுத்துள்ளனர். இந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான சிறப்பு குழு, தன் அறிக்கையை தாக்கல் செய்யும் வரை, நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், இந்த பிரச்சினையை கிளப்பி சுனாமி பேரலையை வீசச் செய்யும்.

தி.மு.க. எம்.பி.க்களை பொறுத்தமட்டில், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதா மீது, கவர்னர் நடவடிக்கை எடுக்காததையும் சேர்த்து, எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெற்று போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமே இருக்காது என்பதுதான் இப்போதைய யதார்த்த நிலையாகும்.

Next Story