எதிர்பார்த்தது இல்லை, எதிர்பாராதது இருக்கிறது !


எதிர்பார்த்தது இல்லை, எதிர்பாராதது இருக்கிறது !
x
தினத்தந்தி 2 Feb 2022 7:47 PM GMT (Updated: 2022-02-03T01:17:57+05:30)

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தனது 4-வது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தனது 4-வது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இது புதிய வரிகள் இல்லாத பட்ஜெட், காகிதம் இல்லாத பட்ஜெட் என்று பல பெருமைகளை நிர்மலா சீதாராமன் கொடுத்திருக்கிறார். தன்னுடைய உரையை தொடங்கும்போது, அடுத்த 25 ஆண்டுகளுக்கான நல்ல காலத்துக்குள் நாடு நுழைவதாக தெரிவித்தார். 14 துறைகளில் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தியோடு இணைந்த ஊக்கச்சலுகைகளின் மூலமாக 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதன்மூலம் ரூ.30 லட்சம் கோடிக்கான உற்பத்தி இருக்கும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

400 புதிய ‘வந்தே பாரத்’ ரெயில்கள் விடப்படும் என்று அறிவித்து இருக்கிறார். ஒன்று முதல் 12-ம் வகுப்புகளுக்காக 200 தொலைக்காட்சி அலைவரிசைகள் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. கோதுமை, நெல் கொள்முதலுக்காக கூடுதல் தொகை ஒதுக்கப்படுவதை அறிவித்த அவர், ‘கிசான் டிரோன்’ என்று கூறப்படும் “விவசாயிகள் ஆளில்லா குட்டி விமானங்கள்” மூலம் பயிர் மதிப்பீடு, நில பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குவது, பூச்சி மருந்து மற்றும் சத்து பொருட்களை தூவுதல் போன்றவை மேற்கொள்ளப்படும் என்று கூறி இருக்கிறார்.

கடந்த பட்ஜெட்டில் தமிழகத்தை பற்றி நிறைய குறிப்புகள் இருந்த நிலையில், இந்த ஆண்டு கோதாவரி-கிருஷ்ணா, கிருஷ்ணா-பெண்ணாறு, பெண்ணாறு-காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த திட்டத்தால் பயனடையும் மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட உடன் அதை நிறைவேற்ற மத்திய அரசாங்கம் உதவும் என்று அறிவித்து இருக்கிறார். இந்த திட்ட அறிக்கை இறுதி செய்வதாலேயே இந்த திட்டம் அமலுக்கு வந்ததாக கருதிவிடமுடியாது. மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து வேண்டுமென்றால், அதற்கு மத்திய அரசாங்கம் உடனடியாக முழு முயற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கிரிப்டோ கரன்சியை மத்திய அரசாங்கம் தடை செய்யுமா? என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் ரிசர்வ் வங்கியே மத்திய டிஜிட்டல் பணம் வெளியிடும் என்று அறிவித்து இருக்கிறது. கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை மூலம் வாங்கப்படும் சொத்துகளுக்கு 30 சதவீத வரியும், அதன் பரிவர்த்தனைக்கு ஒரு சதவீதம் வரிப்பிடித்தமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலதன செலவுகளுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு பல புதிய திட்டங்களை செயல்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் உதவும். மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளில் திருப்பிச்செலுத்துவதற்கு வசதியாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படி யாரும் எதிர்பார்க்காத பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும், எதிர்பார்த்த பல அறிவிப்புகள் இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. கொரோனா பாதிப்பால் வருமானம் இழந்து, தவிக்கும் நடுத்தர மக்கள் வருமான வரிச்சலுகை நிச்சயமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். அது இல்லை. விவசாயிகளை பொறுத்தமட்டில் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முயற்சிகளுக்கு உதவி செய்யும் வகையிலான திட்டங்களும் இல்லை. நுகர்வோர் செலவுகளை ஊக்குவிக்கும் சலுகைகளும் இல்லை.

விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கவேண்டிய இந்த நேரத்தில், இடுபொருட்களின் விலையை குறைக்கவேண்டிய நேரத்தில், உர மானியம், உணவு மானியம், பெட்ரோலுக்கான மானியம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுபோல 100 நாட்கள் வேலை திட்டத்துக்கு கடந்த ஆண்டு திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.98 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இப்போது அது ரூ.73 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும்.

தமிழ்நாட்டுக்காக குறிப்பிட்டு சொல்லும்படியாக எந்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. 5 மாநில சட்டசபை தேர்தல் வரப்போகும் நிலையில், சாமானிய மக்களுக்கு பலனளிக்கும் பல கவர்ச்சி திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் அதுவும் இல்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட்டில் எல்லாம் இருக்கிறது என்றும் சொல்லமுடியாது. ஒன்றுமே இல்லை என்றும் சொல்லமுடியாது.

Next Story