திருப்பி அனுப்பப்பட்ட ‘நீட்' மசோதா; தமிழக மக்கள் அதிர்ச்சி!


திருப்பி அனுப்பப்பட்ட ‘நீட் மசோதா; தமிழக மக்கள் அதிர்ச்சி!
x
தினத்தந்தி 4 Feb 2022 8:11 PM GMT (Updated: 2022-02-05T01:41:30+05:30)

“ஒரே நாடு; ஒரே தேர்வு” என்ற கொள்கை அடிப்படையில், 2016-ம் ஆண்டு, நாடு முழுவதிலுமுள்ள மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக ஒரு பொது நுழைவுத்தேர்வு என்ற அடிப்படையில், ‘நீட்’ தேர்வை மத்திய அரசாங்கம் கொண்டுவந்தது.

“ஒரே நாடு; ஒரே தேர்வு” என்ற கொள்கை அடிப்படையில், 2016-ம் ஆண்டு, நாடு முழுவதிலுமுள்ள மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக ஒரு பொது நுழைவுத்தேர்வு என்ற அடிப்படையில், ‘நீட்’ தேர்வை மத்திய அரசாங்கம் கொண்டுவந்தது.

ஆரம்ப கால முதலே, “நீட் தேர்வு வினாக்கள் சி.பி.எஸ்.இ. என்று கூறப்படும் மத்திய கல்வி திட்டத்தின்கீழ் தயாரிக்கப்படுபவை. மாநில கல்வித்திட்டத்தின் கீழ் படிக்கும் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களால், இந்தத் தேர்வில் வெற்றிபெற முடியாது” என்ற காரணத்தை சுட்டிக்காட்டிய தமிழக அரசும், அனைத்து அரசியல் கட்சிகளும், பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று வலியுறுத்தியது. முதல் ஆண்டு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்குபெற்ற தமிழ்நாட்டுக்கு, 2017-ல் இருந்து ‘நீட்’ தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால், ‘நீட்’ தேர்வு வந்தபிறகு, அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர், 4 பேர் என்றே ஒவ்வொரு ஆண்டும் தேர்வாகிவந்தனர். கடந்த ஆண்டு அ.தி.மு.க. அரசு, அரசுப் பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டுவந்ததன் காரணமாக 436 பேரும், இந்த ஆண்டு 544 பேரும் மருத்துவக் கல்லூரியில் இடங்களை பெற்றனர். தி.மு.க. தேர்தல் அறிக்கையில், “கழக ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ‘நீட்’ தேர்வை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்ற, ஜனாதிபதியின் ஒப்புதலைபெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது. அதை நிறைவேற்றும் வகையில், சட்ட ரீதியிலான வலுவை பெறுவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையை பெற்று, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந்தேதி ‘நீட்’ தேர்வை ரத்துசெய்ய தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, 18-ந்தேதி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அவர் அனுப்பிவைக்க தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னரிடம் நேரில் வலியுறுத்தியதுடன், புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் காணொலிக்காட்சி மூலமாக திறக்கப்பட்டபோதும், பிரதமரிடம் ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குவேண்டும் என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் கடந்த 2-ந்தேதி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திகூட, மத்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இவ்வளவு முயற்சிகளுக்கு பிறகும், நேற்று முன்தினம் கவர்னர் இந்த மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவிட்டார். அதில், “என்ன காரணத்துக்காக ‘நீட்’ தேர்விலிருந்து விலக்குவேண்டும் என்று தமிழகம் கோருகிறதோ, அதே காரணம், அதாவது கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலன்களுக்கு இந்த மசோதா எதிரானது” என்று கவர்னர் காரணம் கூறியிருப்பதுதான் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் தமிழக உறுப்பினர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். அடுத்தக்கட்டம் குறித்து ஆலோசனை நடத்த இன்று (சனிக்கிழமை) சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியிருக்கிறார். இந்தக்கூட்டத்தில் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகள் பிரதிபலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி மாநிலப் பட்டியலிலும் இல்லை. மத்திய பட்டியலிலும் இல்லை. பொதுப்பட்டியலில்தான் இருக்கிறது. எனவே, அரசியல் சட்டம் 254 (2) பிரிவில், இவ்வாறு பொதுப்பட்டியலில் இருக்கும் விஷயங்கள் குறித்து, மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில், நாடாளுமன்றத்தில் ஏற்கனவே அது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அம்சங்களுக்கு முரண்பாடு இருக்கிறது என்று கருதப்படும் நேரத்தில், அந்த மசோதா ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பப்படவேண்டும் என்று தெளிவாக இருக்கிறது.

எனவே, இன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், இந்த மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்ற ஒரு சிறப்பு கூட்டத்தைகூட்ட முடிவு எடுக்கப்படலாம். ஒருமனதாக மீண்டும் மசோதாவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்படலாம் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story