ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜருக்கு ஐதராபாத்தில் பிரமாண்ட சிலை!


ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜருக்கு ஐதராபாத்தில் பிரமாண்ட சிலை!
x
தினத்தந்தி 6 Feb 2022 7:49 PM GMT (Updated: 2022-02-07T01:19:23+05:30)

உலகில் மிகப்பெரிய சிலைகள் வரிசையில், ஐதராபாத் முச்சிந்தல் பகுதியிலுள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் ஆசிரமத்தில், 45 ஏக்கரில் அமைந்துள்ள 216 அடி உயரம் கொண்ட ராமானுஜர் சிலையும் சேர்ந்திருக்கிறது.

உலகில் மிகப்பெரிய சிலைகள் வரிசையில், ஐதராபாத் முச்சிந்தல் பகுதியிலுள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் ஆசிரமத்தில், 45 ஏக்கரில் அமைந்துள்ள 216 அடி உயரம் கொண்ட ராமானுஜர் சிலையும் சேர்ந்திருக்கிறது. இந்தச் சிலை தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் துத்தநாகம் என்ற 5 விதமான உலோகங்களின் கலவையான பஞ்சலோக சிலையாக நிறுவப்பட்டுள்ளது. “சமத்துவ சிலை” என்று அழைக்கப்படும் இந்தச் சிலை ரூ.1,000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட சிலையை பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் திறந்துவைத்து புகழாரம் சூட்டினார். “ராமானுஜரின் போதனைகளிலிருந்து மக்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் அடிக்கடி கூறுவது வழக்கம்” என விழாவில் அவர் குறிப்பிட்டார்.

ராமானுஜர் இந்த உலகில் 120 ஆண்டுகள் வாழ்ந்ததை கருத்தில்கொண்டு, 120 கிலோ தங்கத்தைக்கொண்டு சிலையின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. வெறும் சிலை மட்டும் இந்த வளாகத்தில் இல்லை. வைணவத்தின் 108 திவ்ய தேச கோவில்களின் மாதிரி கோவில்கள் அங்கு கட்டமைக்கப்பட்டுள்ளன. மேலும், நூலகம், ஆராய்ச்சி மையங்கள் என ஏராளமான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ராமானுஜரின் 1000-வது ஆண்டு பிறந்தநாளையொட்டி, 2014-ம் ஆண்டில் சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஐதராபாத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டதில், தமிழர்களுக்கு மிகப்பெரிய பெருமை. ஏனெனில், ராமானுஜர் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர். சிலை திறப்பு விழாவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த சீரிய தருணத்தில் ராமானுஜரின் சமத்துவக் குரல் நாடெங்கும் சிறப்போடும், எழுச்சியோடும் ஒலிக்கவேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். சிறந்த வைணவ ஆராய்ச்சியாளரான எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., ராமானுஜர் பற்றி எழுதிய 10 ஆய்வு நூல்களில், “ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும், வாக்கும்” என்ற நூலில், அவரது வாழ்க்கை வரலாறை விரிவாக தொகுத்துள்ளார்.

இந்தியாவுக்கு வழிகாட்டிய சான்றோர்களில் மிக முக்கியமானவர்கள் மூவர். அவர்கள் மூவரும் தென்னிந்தியாவில்தான் அவதரித்துள்ளனர். ஆதிசங்கரர் கேரளாவிலுள்ள காலடி என்ற ஊரிலும், ராமானுஜர் தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரிலும், மத்வாச்சாரியார் கர்நாடகாவிலும் பிறந்தவர்கள். ஆதிசங்கரருக்கும், மத்வாச்சாரியாருக்கும் இடையில் பாலமாக விளங்கி வைணவ நெறியை தொகுத்து உலகுக்கு அளித்த பெருமை ராமானுஜருக்கே உண்டு.

ராமானுஜர் பன்முகத்தன்மை கொண்டவர். சாதி, சமய வேறுபாடுகளை எதிர்த்து போராடியவர். என்றுமே சமதர்மமே சிறந்தது என்றவழியில் நின்றவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சாதிகள் இல்லை, எல்லோரும் ஒரே குலம் என்று சொல்லி, தாழ்த்தப்பட்ட குடும்பத்தினரை தன் வீட்டிற்கு அழைத்து விருந்தளித்தவர். காவிரி ஆற்றில் குளிக்கப் போகும்போது பிராமணரோடு தோள்மீது கைபோட்டு சென்ற மகான், திரும்பும்போது தாழ்த்தப்பட்டவரின் தோளில் கைபோட்டு கோவிலுக்குள் அழைத்து சென்றவர்.

இன்று பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்துக்கு மிகப்பெரிய முன்னோடியாக, விளங்கி அதை அளித்த பெருமை இவருக்கு உண்டு. தமிழ் வேதங்களாக திகழக்கூடிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தரணி எங்கும் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்த பெருமையும் இவருக்கு உண்டு. ஆதிதிராவிடர்களையும் உயர் குலத்தவராக மாற்றியவர். டெல்லியிலிருந்து ராமப்பிரியர் சிலையை எடுத்து வந்துகொண்டிருந்தபோது திருடர்கள் அதை கடத்திக்கொண்டு செல்ல முயற்சி செய்த நேரத்தில், தன்னை காப்பாற்றிய சேரி வாழ் மக்களை உயர்வாக நினைத்தவர். அவர்களுக்கு திருக்குலத்தார் என்று பட்டமளித்து, கோவிலுக்குள் அழைத்து சென்றவர் ராமானுஜர்.

சமத்துவம் மிக அதிகமாக தேவைப்படும் இந்த நாட்களில், சமத்துவத்தை போதித்து தானும் அதன்படி வாழ்ந்து காட்டிய அவருக்கு சிலை எடுத்தது சிறப்புக்குரியது. தமிழர்களுக்கு தனிப்பெருமை உண்டு. ராமானுஜரின் புகழ் தரணி எங்கும் ஓங்கி ஒலிக்கட்டும் என்ற வகையில், ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜருக்கு ஐதராபாத்தில் சிலை அமைத்தது பெருமையடையச் செய்கிறது, பூரிப்படையச் செய்கிறது.

Next Story