தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதா?


தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதா?
x
தினத்தந்தி 8 Feb 2022 7:42 PM GMT (Updated: 2022-02-09T01:12:37+05:30)

கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இயற்கை சீற்றங்கள் அச்சுறுத்துவது இல்லை.

கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இயற்கை சீற்றங்கள் அச்சுறுத்துவது இல்லை. ஆனால் எந்த நேரத்தில் இலங்கை கடற்படையினர் வருவார்களோ, நமது படகுகளை தாக்குவார்களோ, கைது செய்து இலங்கை சிறையில் அடைப்பார்களோ, படகுகளையும் கைப்பற்றி விடுவார்களோ, நமது வாழ்வாதாரம் பாதித்துவிடுமோ என்று மீனவர்கள் கடலில் மீன்பிடி வலையை வீசும்போது தொடங்கி, கடற்கரைக்கு திரும்பும் வரை அச்சத்துடன்தான் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். பல நேரங்களில் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று, மத்திய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளால், இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் படகுகளை மட்டும் திரும்ப கொடுப்பதில்லை என்ற கொள்கையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது. இலங்கையில் இருந்து விடுதலை செய்யப்படும் மீனவர்கள் தாய் தமிழகத்துக்கு வந்து, வாழ்வாதாரத்துக்கு படகுகள் இல்லாமல் தவிக்கும் நிலை இருந்து வருகிறது.

கடந்த மாதம் 25-ந்தேதி இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்று கைதான 43 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கையில் உள்ள ஊர்க்காவல்துறை கோர்ட்டு நிபந்தனையுடன் விடுதலை செய்ய உத்தரவிட்டதால், விடுதலை ஆகிறார்கள். அவர்களோடு சென்ற மற்றொரு சிறுவனும், தாய் தமிழ் நாட்டுக்கு திரும்ப உள்ளான். குடியரசுத்தினத்தன்று இந்த 56 பேர் விடுதலையானது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அவர்களுடைய 8 படகுகளும் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. இந்தநிலையில், ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை அரசினால் பறிமுதல் செய்யப்பட்ட படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1½ லட்சமும் வழங்க உத்தரவிட்டார். இதற்கிடையில், இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை நேற்று முன்தினம் முதல் 11-ந்தேதி வரை ஏலம் விடப்போவதாக, இலங்கையில் உள்ள பத்திரிகைகளில் அந்த நாட்டு அரசாங்கம் விளம்பரம் கொடுத்து இப்போது ஏலமும் தொடங்கிவிட்டது.

இந்த முயற்சிகளை தடுத்து நிறுத்தவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதியுள்ளார். மீண்டும் நேற்று மாலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்களையும், 79 படகுகளையும் விடுவிக்ககோரி பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே எழுதியுள்ள கடிதத்தில், இந்த படகுகள் தமிழக மீனவர்களுக்கு சொந்தமானது. ஆனால் இவ்வளவு நாளும் கவனிப்பாரற்று கிடந்த இந்த படகுகள், இனி கடலில் செல்வதற்கு தகுதியற்றதாகி, துருப்பிடித்துள்ளது. இதை பழைய இரும்பாக விற்கத்தான் முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது. தமிழக மீனவர்களின் விசை படகுகளை ஏலம்விடும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த, மத்திய அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 2018-ம் ஆண்டுக்கு முன்பு கைப்பற்றப்பட்ட மற்றும் பழுதுபார்க்க இயலாது என்று கருதப்படும் 125 தமிழக படகுகளை ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையுடன் அப்புறப்படுத்தும் முயற்சியை எடுக்க வேண்டும் என்றும், 2018-க்கு பின் கைப்பற்றப்பட்ட 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை முன்கூட்டியே விடுவிப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், மத்திய அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தார்.

தமிழக மீனவர்களை விடுதலை செய்வது போல, அவர்களிடம் இருந்து கைப்பற்றப்படும் படகுகளையும் அவ்வப்போது விடுவிக்கும் ஒரு கொள்கை முடிவை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதை மத்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும். படகுகள் இல்லாத வாழ்க்கை மீனவர்களுக்கு ஒரு வாழ்க்கையே அல்ல. எனவே அவர்களின் வாழ்வாதாரத்துக்கு படகுதான் முக்கியம் என்ற வகையில் மத்திய அரசாங்கம் இந்த விஷயத்தில் உடனடியாக உறுதிப்பாடான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story