‘நீட்’ மசோதாவில் அடுத்து என்ன?


‘நீட்’ மசோதாவில் அடுத்து என்ன?
x
தினத்தந்தி 10 Feb 2022 8:18 PM GMT (Updated: 2022-02-11T01:48:19+05:30)

‘நீட்’ மசோதாவில் அடுத்து என்ன? இந்த முறையாவது நமக்கு நல்ல பதில் கிடைக்குமா? என தமிழக மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் தமிழக எல்லையில் இருக்கும் நகரி தொகுதியின் எம்.எல்.ஏ. நடிகை ரோஜா, கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது அவர், தனது நகரி தொகுதியிலும், சித்தூர் மாவட்டத்திலும் உள்ள தமிழர்களின் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்காக ஒவ்வொரு வகுப்புக்கும் 1,000 தமிழ் பாடநூல்கள் என்றவகையில் 10 ஆயிரம் புத்தகங்கள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தான் நகரிக்கு வருவதற்குள் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தகவல் வந்தது குறித்து மகிழ்ச்சி அடைந்த ரோஜா, ‘‘மின்னல் வேகம் என்பார்கள். ஆனால் அதைவிட அதிகமான வேகத்தை இனி ‘ஸ்டாலின் வேகம்’ என்றே குறிப்பிடலாம்’’, என்று தெரிவித்தார்.

அந்தவகையில் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு பெறும் நடவடிக்கையிலும் முதல்-அமைச்சர், மின்னல் வேகத்தை விட அதிகமான மு.க.ஸ்டாலின் வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். தமிழக சட்டசபையில் கடந்தாண்டு செப்டம்பர் 13-ந்தேதி நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தேர்வு விலக்கு மசோதாவை 142 நாட்கள் கழித்து கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். முதல்-அமைச்சர் உடனடியாக சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தைக்கூட்டி விவாதித்துவிட்டு, சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு இந்த மசோதா ஒரு திருத்தமும் இல்லாமல் அப்படியே மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை வரலாற்றில் கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட ஒரு மசோதா திருத்தமேதுமின்றி மீண்டும் அப்படியே நிறைவேற்றப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கு உரிமை இருக்கிறது என்றும், இதே வழக்கில் நீதிபதி பானுமதி பிறப்பித்த உத்தரவில் மாணவர் சேர்க்கை தொடர்பான சட்டம் மாநில அரசின் வரம்புக்குள்தான் இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளது வலு சேர்ப்பதாக உள்ளது.

அரசியல் சட்டத்தின் 200-வது பிரிவின்கீழ் இனி கவர்னர், ஜனாதிபதிக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அனுப்பியாகவேண்டும். 201-வது பிரிவின்படி ஜனாதிபதி அதற்கு ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிறுத்தி வைத்திருக்கலாம். ஆனால் கவர்னர் எவ்வளவு நாளில் அதை ஜனாதிபதிக்கு அனுப்பவேண்டும் என்றோ, ஜனாதிபதி எவ்வளவு நாளில் தன் முடிவை தெரிவிக்கவேண்டும் என்றோ அரசியல் சட்டத்தில் எதுவும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17, 18-ந்தேதிகளில் சிம்லாவில் நடந்த அனைத்து மாநில சபாநாயகர்கள் கூட்டத்தில் தமிழக சபாநாயகர் மு.அப்பாவு, ‘‘சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவை கவர்னருக்கு அனுப்பும்போது, எத்தனை நாட்களில் அதை பரிசீலித்து முடிக்கவேண்டும் என்று காலக்கெடு இல்லை. எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஜனாதிபதிக்கு ஒரு மசோதா அனுப்பப்பட்டால் நிறுத்தி வைக்கப்பட்டது என்ற காரணத்தைக்கூறி காலக்கெடு இல்லாமல் அவரிடமே தங்கிவிடுகிறது. காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட வேண்டும். என்ன காரணத்துக்காக ஜனாதிபதியால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? என்ற காரணத்தை மாநிலங்களுக்கு அனுப்பினால், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவும் வசதியாக இருக்கும்’’, என்று ஆணித்தரமாக கூறினார்.

மணிப்பூர் சட்டமன்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, அரசியல் சட்டத்தில் காலக்கெடு இல்லை என்றாலும் 3 மாதங்கள் அதன் காலக்கெடு என நிர்ணயிக்கலாம் என்றும், சர்க்காரியா கமிஷன் 30 நாட்களாக நிர்ணயிக்கலாம் என்றும் கருத்துகளை தெரிவித்திருந்தது. எனவே மத்திய அரசும், மாநில அரசுகளும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை விதித்து பதில் அனுப்ப வேண்டும் என்ற வகையில் அரசியல் சட்டத்தை திருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது இப்போதைய கோரிக்கையாக இருக்கிறது.

Next Story