ஐகோர்ட்டு தீர்ப்பு சீமைக்கருவேல மரங்களை ஒழிக்கட்டும்!


ஐகோர்ட்டு தீர்ப்பு சீமைக்கருவேல மரங்களை ஒழிக்கட்டும்!
x
தினத்தந்தி 11 Feb 2022 6:17 PM GMT (Updated: 11 Feb 2022 6:17 PM GMT)

பொதுவாக, “மழை வளம் பெருக மரங்களை நடுவோம்” என்ற கோஷம் நாடு முழுவதும் இருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, “சீமைக்கருவேல மரங்களை வெட்டுவோம். சுற்றுச்சூழலை காப்போம். சீமைக்கருவேல மரங்களை வெட்டினால் மழை பெய்யும்” என்ற கோஷம், சுற்றுச்சூழல் ஆர்வலர்களாலும், சமூக ஆர்வலர்களாலும் எழுப்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் இப்போது எல்லா நீர்நிலைகளிலும், அரசு நிலங்கள், தனியார் நிலங்கள் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது சீமைக்கருவேல மரங்களாகும். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை பூர்வீகமாக கொண்ட இந்த மரங்கள் 1960-ம் ஆண்டுகளில் விறகு தேவைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுவாக, சீமைக்கருவேல மரம் வேளாண் நிலங்களையும், அனைத்து தாவரங்களையும் நாசப்படுத்தக்கூடியது. மிக ஆழமாக வேர்விடும் இந்த மரம், தன்னை சுற்றி 55 மீட்டர் அகலப்பரப்பில் தண்ணீர் எங்கு இருந்தாலும் உறிஞ்சிவிடும் தன்மை கொண்டது. நிலத்தடி நீர்மட்டத்துக்கு எமனாக இருக்கும் இந்த மரத்தின் நிழலில் வேறு எந்த தாவரங்களும் வளராது என்பது மட்டுமல்லாமல், இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே பயன்படாது. இந்த மரத்தில் ஆடு, மாடுகளை கட்டிவளர்த்தால், அவை மலடாகிவிடும் என்று இன்றும் கிராமப்புறங்களில் கூறுகிறார்கள்.

அதிக அளவு நிலத்தடி நீரையும், காற்றிலுள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சும் இந்த தாவரம், இயற்கைக்கு மிகவும் கேடு விளைவிக்க கூடியது என்று 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அறிவித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் அதை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. கேரளாவில் இந்த சீமைக்கருவேல மரத்தை ஒழிப்பதற்கு, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, ஒழித்தும்விட்டார்கள்.

தமிழ்நாட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் பட்டுராஜன், வக்கீல் மேகநாதன் உள்பட பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நீண்ட நெடுங்காலமாகவே சட்டப் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். 2015-ம் ஆண்டு முதல் இந்த மரங்களை ஒழிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தும், இதை ஒழிப்பதற்கான எந்த நடவடிக்கையும் வெற்றிபெறவில்லை. நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வும், ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி அமர்வும் இதற்கான உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. வைகோ, நேரடியாகவே ஐகோர்ட்டில் ஆஜராகி தனது வாதத்தை ஆணித்தரமாக எடுத்துவைத்தார்.

இறுதியாக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு, தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (நீரி) அறிக்கையும் பெறவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் ஒரு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில், இப்போது இறுதியாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட முழு அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதில், “2 வார காலத்துக்குள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சீமைக்கருவேல மரத்தை ஒழிப்பதற்கான ஒரு திட்டத்தை தமிழக அரசு வகுக்கவேண்டும். வெறுமனே இந்த மரத்தை வெட்டியவுடன் வெகு சீக்கிரத்தில் திரும்ப வளர்ந்துவிடும். இதனால், மனித உழைப்பும் வீணாகும். தேவையற்ற நிதிச் செலவும் ஏற்படும். எனவே, இதை வேரோடு அகற்றுவதற்கு திட்டம் வகுக்கவேண்டும். இந்தப்பணிகளை 100 நாள் வேலை திட்டத்தில் சேர்க்கலாம். மாவட்ட கலெக்டர்களும் இதை கண்காணிக்கவேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறது. நீண்ட நாட்களாக இழுத்துக்கொண்டிருந்த இந்த சீமைக்கருவேல மர ஒழிப்பு, இந்த உத்தரவினால் தமிழக அரசு நிறைவேற்றப்பட இருக்கும் திட்டத்தின் மூலம் முடிவு கட்டுவதற்கு ஏதுவாக இருக்கவேண்டும். சீமைக்கருவேல மரங்களை கேரளாவைப்போல் தமிழ்நாட்டிலும் ஒழித்த பெருமை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு கிடைக்கட்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story