துள்ளி வருகுது வேலைவாய்ப்புகள்… தயாராக வேண்டும் இளைஞர்கள்…


துள்ளி வருகுது வேலைவாய்ப்புகள்… தயாராக வேண்டும் இளைஞர்கள்…
x
தினத்தந்தி 13 Feb 2022 9:56 PM GMT (Updated: 13 Feb 2022 9:56 PM GMT)

கல்வி வளர்ச்சி பயனளிக்க வேண்டும் என்றால், படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தாக வேண்டும். அதைத்தான் முக்கிய நோக்கமாக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

தொழில் வளர்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும்போது எவ்வளவு முதலீட்டில் அந்த தொழில்கள் வருகின்றன? என்று பார்க்கும்போது, எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்புகள் அதனால் கிடைக்கும்? என்பதையும், முக்கியமாக கவனத்தில் கொள்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் ஏற்கனவே வேலையில் இருந்தவர்களே, வேலையிழக்கும் அபாயம் நேரிட்ட நேரத்தில் புதிய வேலைவாய்ப்பு என்பது எட்டாக்கனியாக இருந்தது.

இளைய சமுதாயத்திடம் வேலைவாய்ப்பு பற்றி ஒரு விரக்தியான உணர்வு தோன்றியநிலையில், இப்போது இருட்டில் நடந்து செல்வோருக்கு தூரத்தில் ஒளி தெரிவதுபோல மத்தியஅரசும், தமிழகஅரசும் வேலைவாய்ப்புகள் வழங்கப்போகும் பிரகாசமான எதிர்காலம் கண்ணுக்கு தெரிகிறது. மத்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் சார்பில், 2020-ம் ஆண்டு வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகளை கருத்தில் கொள்ளும்போது இந்த ஆண்டில் 2 லட்சத்து 74 ஆயிரம் கூடுதல் வேலைவாய்ப்புகள் வரப்போகிறது என்ற தகவல் ‘பட்ஜெட்’ தஸ்தாவேஜூகளில் இருந்து தெரிகிறது. ஆனால் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் ரெயில்வேயில் அந்த ஆண்டைவிட 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் குறைவாக கிடைக்கப்போகிறது.

அகில இந்திய ரெயில்வே ஊழியர்கள் சம்மேளனத்தலைவர் என்.கண்ணையா, ‘2 லட்சத்து 62 ஆயிரத்து 370 இடங்களும், ‘கெஜட்டட்’ பதவிகளில் 177 இடங்களும் காலியாக உள்ளன. அந்த இடங்களையெல்லாம் உடனடியாக ரெயில்வே நிர்வாகம் நிரப்பவேண்டும்’, என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். பல்வேறு ரெயில்வே ஊழியர் சங்கங்கள் காலியிடங்களை நிரப்புவதற்காக போராட்டங்களை நடத்திவருகின்றன.

தமிழக தேர்வாணையத்தை பொருத்தமட்டில் குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-3, குரூப்-4 பணியிடங்களுக்காக இந்தாண்டு 12,253 பதவிகளுக்கு தேர்வு நடத்துவதற்கான பணிகள் நடந்துவருகிறது. நாளை மட்டும் குரூப்-2, குரூப்-2ஏ பணிகளுக்காக 6 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அறிவிக்கை வெளியாக இருக்கிறது. இதுதவிர தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 9,494 ஆசிரியர்களை பணிக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது.

தமிழகஅரசு சமீபத்தில் அரசின் அனைத்து வேலை நியமனங்களும், அது பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும் சரி, தேர்வாணையம் மூலம் தான் எடுக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் மின்சார வாரியம், போக்குவரத்து கழகங்கள், ஆவின் உள்பட பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளும் நிறைய வரஇருக்கிறது. தமிழ்நாடு காவல்துறையில் ஏற்கனவே 1,000 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் இருக்கும் சூழ்நிலையில், இன்னும் 500 சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். 10 ஆயிரம் போலீஸ்காரர்கள் தேர்வுசெய்யப்பட இருக்கிறார்கள் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியிருப்பது, காக்கிச்சட்டை அணிந்து மிடுக்காக பணியாற்றவேண்டும் என்ற லட்சியத்தில் உள்ள இளைஞர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

தமிழக தொழில்துறை, சிறு தொழில்துறைகளின் முயற்சியால் நிறைய தனியார் நிறுவனங்களும், தொழில்களை தொடங்கப்போகும் நிலையில் அங்கும் வேலைவாய்ப்பு வருகிறது. மகாகவி பாரதியாரின் ‘ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பராசக்தி’ எனும் பாடலில் ‘துள்ளி வருகுது வேல்’ என்ற வரிகள் வரும். அதுபோல தமிழக இளைஞர்களுக்கு எதிர்கால வாழ்வை ஒளிமயமாக்க நிறைய வேலைவாய்ப்புகள் அடுத்தடுத்து துள்ளிவர காத்திருக்கிறது. இதில் போட்டி பலமாக இருக்கும் என்பதால், ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் பதவிக்கு என்ன தகுதிகள் வேண்டும்? என்பதை பார்த்து, அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். எழுத்துப்பூர்வத்தேர்வு என்றால் அதற்குரிய பாடங்களில் முழுமதிப்பெண் பெறும் வகையிலும், சீருடை பணியாளர் தேர்வு என்றால் உடல்தகுதியை பெறுவதற்கான பயிற்சிகளையும் உடனடியாக தொடங்கவேண்டும். மரங்களில் பழங்கள் பழுத்து தொங்குகின்றன. குதித்து பறிப்பதில் தான் திறமை இருக்கிறது.

Next Story