கேட்டது ரூ.6,230 கோடி; ஆனால் இன்னும் கிடைக்கவில்லை!


கேட்டது ரூ.6,230 கோடி; ஆனால் இன்னும் கிடைக்கவில்லை!
x
தினத்தந்தி 14 Feb 2022 8:14 PM GMT (Updated: 14 Feb 2022 8:14 PM GMT)

கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் நடைபோடும் நாடு, இந்தியா. மாநிலங்களை மாநில அரசுகளும், மத்தியில் மத்திய அரசாங்கமும் நிர்வாகம் செய்கிறது. இரு அரசாங்கத்தையும் நடத்துபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்தான்.

இந்தநிலையில், மக்களின் மகிழ்ச்சியிலும், துயரத்திலும் பங்குகொள்ள வேண்டிய பொறுப்பு இரு அரசுகளுக்கும் இருக்கிறது. ஏனெனில், மத்திய-மாநில அரசுகள், மக்களிடம் வரி வசூலித்துத்தான் தனது வருவாயை ஈட்டுகிறது. எனவே, மக்கள் பாதிக்கப்படும் நேரங்களில் எல்லாம் கைதூக்கிவிட வேண்டிய பொறுப்பு இரு அரசுகளுக்கும் இருக்கிறது. இயற்கை பேரழிவுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, மாநில பேரிடர் மேலாண்மை நிதி என்றும், மத்திய பேரிடர் மேலாண்மை நிதி என்றும் இருக்கிறது. இரு நிதியில் இருந்துமே மக்களுக்கு நிதியுதவி கிடைத்தாகவேண்டும்.

அந்தவகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த வரலாறுகாணாத மழையினால், இருமுறை மழை வெள்ளத்தினால் அடுத்தடுத்து சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய குழுவும் வந்து பார்வையிட்டது. மழையால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க ரூ.1,510.83 கோடியும், சாலைகள், பாலங்கள், பொதுக் கட்டிடங்களை நிரந்தரமாக சரிசெய்ய ரூ.4,719.62 கோடியும் ஆக மொத்தம் ரூ.6,230.45 கோடியை விரைவில் நிவாரணமாக வழங்க கோரி மத்திய அரசாங்கத்துக்கு தமிழக அரசின் சார்பில் கடந்த நவம்பர் 16, 25 மற்றும் டிசம்பர் 15 ஆகிய தேதிகளில் முழுமையான சேத விவரங்களுடன் கூடிய விரிவான அறிக்கைகள் அனுப்பப்பட்டன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். இந்தநிலையில், கடந்த மாதமே அசாம், குஜராத், கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது.

தொடர்ந்து, தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், இன்னும் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. தட்டி தட்டி பார்க்கிறது. கதவு திறந்தபாடில்லை. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மாவட்ட வாக்காளர்களுடன் காணொலி மூலம் நடத்திய பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “இதுவரை நாம் கேட்ட நிவாரண நிதி வரவில்லை. நாம் கேட்ட எந்த பேரிடர் நிவாரண நிதியையும் இதுவரை முழுதாக தரவில்லை” என்று மிகுந்த மனக்குறையுடன் பேசினார்.

தமிழக அரசை பொறுத்தமட்டில் கொரோனா நிவாரணத்துக்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து எல்லா தொகைகளையும் செலவழித்துவிட்டது. கடுமையான நிதி பற்றாக்குறையால் தமிழக அரசு தவிக்கிறது. எனவே, இந்த மழை வெள்ளத்துக்கு மத்திய அரசாங்கம்தான் உடனடியாக தாராளமாக நிதி ஒதுக்கவேண்டும். மேலும், இவ்வாறு மத்திய அரசாங்கம் குறைத்து நிதி ஒதுக்குவது இது முதல்முறை அல்ல. 2011-ல் ‘தானே’ புயல் பாதிப்புகளுக்கு தமிழக அரசு கோரியது ரூ.5,449 கோடி, கிடைத்தது ரூ.500 கோடி. 2015-ல் வெள்ள பாதிப்புகளுக்கு கேட்டது ரூ.25,912 கோடி, கிடைத்தது ரூ.1,727 கோடி. 2016-ல் ‘வார்தா’ புயலின்போது கேட்டது ரூ.22,573 கோடி, கிடைத்தது ரூ.266.17 கோடி. 2017-ல் ‘ஒக்கி’ புயலின்போது கேட்டது ரூ.5,255 கோடி, கிடைத்தது ரூ.133 கோடி. 2018-ல் ‘கஜா’ புயலின்போது கேட்டது ரூ.15 ஆயிரம் கோடி, கிடைத்தது ரூ.1,680 கோடி மட்டுமே. ஆக, கடந்த காலம்போல இல்லாமல் இந்த முறை மாநில அரசு கேட்கும் தொகையை முழுமையாக கொடுக்காவிட்டாலும், தமிழக அரசு மனநிறைவு கொள்ளும் வகையில் கணிசமான தொகையாவது மத்திய அரசாங்கம் கொடுக்கவேண்டும் என்பதுதான் மக்களுடைய கோரிக்கையாக இருக்கிறது. மத்திய அரசாங்கத்திடம் இந்த மழை-வெள்ள சேதத்துக்கு கூடுதல் நிதியைபெற தொடர்ந்து நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தத்தால் மத்திய அரசாங்கம் தங்கள் கஜானாவிலிருந்து இன்னும் தாராளமாக நிதி ஒதுக்கும்நிலை வரவேண்டும்.


Next Story