இன்று முதல் இயல்பு வாழ்க்கை!


இன்று முதல் இயல்பு வாழ்க்கை!
x
தினத்தந்தி 15 Feb 2022 7:52 PM GMT (Updated: 2022-02-16T01:22:14+05:30)

உலகிலுள்ள அனைத்து நாடுகளும், கொரோனா.. கொரோனா.. என்று கூறி, வாழ்க்கையே முடங்கிப்போன நிலையில், இப்போது சகஜ வாழ்க்கைக்கு திரும்பும் வகையில், புதிய கட்டத்துக்குள் நுழைந்திருக்கிறது, யதார்த்தத்தை காணும் முயற்சியை தொடங்கியுள்ளது.

“கொரோனா தொற்று இன்னும் முடியவில்லை. ஆனால், முற்றிலும் ஒரு புதிய கட்டத்துக்குள் நுழைந்திருக்கிறது” என்றார், சுவீடன் நாட்டு பிரதமரான மேக்டெலினா ஆன்டர்சன். அதுபோல, இங்கிலாந்து நாட்டு கதாசிரியரும், தத்துவவாதியுமான ஐரீஸ் முர்டோச் கூறும்போது, “வாழ்க்கையில் மிகப்பெரிய பணி என்பது யதார்த்தத்தை கண்டுபிடிப்பதுதான்” என்றார். 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடங்கி 2 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால், சில மாதங்கள் முழுமையான ஊரடங்கு அமலில் இருந்தநிலையில், தொழில்கள் எல்லாம் முடங்கிப்போய்விட்டன. வர்த்தகம் வீழ்ச்சியடைந்தது. வருமான இழப்பு, வேலையிழப்பு என்று எல்லா பாதிப்புகளையும் மக்கள் அடைந்தனர். இதை ஒரு கசப்பான காலம், இருண்ட காலம் என்றே சொல்லலாம். கொரோனா கொடிய நோய்தான் என்றாலும், அப்படியே பயந்து.. பயந்து.. வாழ்க்கையை நடத்தி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாதநிலை இருந்தால், தனிநபர் என்றாலும், அரசுகள் என்றாலும், வீழ்ந்து கிடக்கும் பள்ளத்திலிருந்து வெளியே வரவேமுடியாது.

1918-ம் ஆண்டு “ஸ்பானிஷ் புளு” என்று கூறப்படும் “இன்புளுயன்சா” தொற்று உலகையே நடுநடுங்க வைத்தது. அதிகபட்சம் 2 ஆண்டுகளுக்கு பிறகு, இயல்பு வாழ்க்கை தொடங்கியது. இப்போதும் புளூ காய்ச்சல் வரத்தான் செய்கிறது. தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதால், இதன் பாதிப்பு அதிகமாக இல்லை. உலகில் பல நாடுகள் கொரோனாவையொட்டி, விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகளை தளர்த்திவிட்டது. வளர்ச்சி பாதையை நோக்கி செல்லவேண்டும் என்றால், கட்டுப்பாட்டு வலையிலிருந்து வெளியே வந்தால்தான் முடியும்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பையொட்டி, தடுப்பூசி போடும்பணி தீவிரமாக நடந்துவருகிறது. மெகா முகாம்கள் மூலம் ஏராளமானவர்களுக்கு முதல் டோஸ், 2-வது டோஸ், பூஸ்டர் டோஸ் என தடுப்பூசிகள் போடப்படுகின்றன. நேற்று முன்தினம் கணக்குப்படி, 91.2 சதவீதம் பேர் முதல் டோசும், 71.41 சதவீதம் பேர் 2-வது டோசும் தடுப்பூசி போட்டுவிட்டார்கள். பூஸ்டர் டோஸ் போடும்பணியும் வேகமாக நடந்துவருகிறது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது. ஏறிய வேகத்தில் தொற்று இறங்குகிறது” என்று கூறினார். இப்போதெல்லாம் கொரோனாவால் பாதிப்புகள் இருந்தாலும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுபவர்கள் 4 சதவீதத்துக்கும் குறைவானவர்கள்தான். ஆக்சிஜன் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை மிகமிக குறைவு. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையும் பெரும்பாலானோருக்கு இல்லை. எனவே, இனியும் கட்டுப்பாடுகள் தேவையில்லை என்ற நல்லமுடிவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து, பல தளர்வுகளை அறிவித்துவிட்டார்.

இன்று முதல் அமலுக்கு வரும் இந்த தளர்வின்படி, எல்.கே.ஜி., யு.கே.ஜி. மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள் திறக்கப்படுகிறது. திருமணம், இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு தலா 200, 100 பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். துணிக்கடைகள், நகைக்கடைகள், ஓட்டல்கள், விடுதிகள் உள்பட அனைத்து கடைகளிலும் 100 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. தியேட்டர்களிலும் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.

ஆக, தமிழ்நாட்டில் இன்று முதல் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது என்றாலும், இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் மீண்டும் விதிக்கப்படக்கூடாது என்றால், அது மக்களின் கையில்தான் இருக்கிறது. கொரோனாவை தடுக்கும் உயிர்கவசமான முககவசத்தை இன்னும் ஓரிரு ஆண்டுகள் போட்டுக்கொள்ள வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் ஒருவருக்குக்கூட கொரோனா இல்லை என்ற நிலை, ஏற்படத் தொடங்கி சில மாதங்கள் வரை கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியமாகும். ஆக, இயல்பு வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்வது மக்களிடம்தான் இருக்கிறது.


Next Story