கிராமப்புறங்களில் வாழ்வளிக்கும் 100 நாள் வேலை திட்டம்!


கிராமப்புறங்களில் வாழ்வளிக்கும் 100 நாள் வேலை திட்டம்!
x
தினத்தந்தி 16 Feb 2022 7:06 PM GMT (Updated: 2022-02-17T00:36:48+05:30)

ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் பெயர் சொல்லும் வகையில், அவர்கள் நிறைவேற்றிய ஏதாவது திட்டம், ஆட்சி மாறினாலும் கைவிடமுடியாத அளவுக்கு பிரபலமாக இருக்கும். அந்தவகையில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கும், அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் பெயர் சொல்லும் திட்டமாக அமைந்தது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் என்று அழைக்கப்படும் 100 நாள் வேலை திட்டமாகும்.

ஒவ்வொரு நிதியாண்டிலும், ஊரகப்பகுதிகளில் திறன்சாரா உடல் உழைப்பை மேற்கொள்ள விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்டோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 100 நாட்களுக்கு குறையாமல் வேலைவாய்ப்பை அளிப்பதன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட தரமான மற்றும் நிலையான சொத்துகளை உருவாக்குவதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தப்பணிகளில் குறைந்தபட்சம் 33 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்று தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகாலத்தில் ரூ.100 தினக்கூலி வழங்கப்பட்டது. பின்பு ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு, இப்போது ரூ.256 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இருபயன்கள் இருக்கிறது. ஒன்று, வருமானமில்லாத குடும்பங்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பு வழங்குதல். மற்றொன்று, அந்தப்பகுதியில் பல மராமத்து பணிகள், புதிய பணிகள், நிலையான சொத்துகளை உருவாக்குதல் போன்ற பல திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் பல முறைகேடு புகார்கள் அவ்வப்போது கூறப்பட்டாலும், ஏழ்மை நிலையில் உள்ளவர்களை கைதூக்கிவிடும் திட்டம் என்று பெரிதும் போற்றப்படுகிறது.

கொரோனாவால் வேலைவாய்ப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நேரத்தில், 100 நாள் வேலை திட்டம்தான் வாழ்வளிக்கும் திட்டமாக கருதப்பட்டது. இந்தத்திட்டத்துக்கு மத்திய-மாநில அரசுகளால், 90:10 என்ற விகிதத்தில் செலவுகள் பகிரப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இந்த 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்துவதில் மிகப்பெரிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த 2020-21-ம் ஆண்டில் 100 நாள் வேலை திட்டத்தில் 30 கோடி மனித உழைப்பு நாட்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 33 கோடியே 40 லட்சம் மனித உழைப்பு நாட்கள் வழங்கப்பட்டு, தென்னிந்தியாவிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்த திட்டம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

மார்ச் மாதம் முதல் கிராமப்புறங்களில் மட்டுமல்லாது, முதற்கட்டமாக நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டு அமர்வு, சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை 100 நாள் வேலை திட்டம் மூலம் செயல்படுத்தவேண்டும் என்று யோசனையும் வழங்கியிருக்கிறது.

ஆனால், 100 நாள் வேலை திட்டத்துக்காக மத்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதுடன், சீமைக்கருவேல மரங்களை அகற்ற இந்த நிதியை பயன்படுத்த மறுப்பு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 2020-21-ம் ஆண்டில் கொரோனா நேரத்தில் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 527 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதலில் ரூ.73 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டாலும், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.97 ஆயிரத்து 34 கோடியே 70 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த 2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.72 ஆயிரத்து 34 கோடியே 64 லட்சம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத்தொகையில், ஏற்கனவே ஊதிய பாக்கியாக வழங்கவேண்டிய ரூ.18 ஆயிரத்து 350 கோடியை கழித்தால், மீதமுள்ள தொகையைக்கொண்டு வருகிற நிதியாண்டில் 100 நாள் வேலை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியாது. வேலைவாய்ப்பு கேட்கும் கிராமப்புற மக்கள் அனைவருக்கும் அதை வழங்கவும் முடியாது. எனவே, கூடுதல் நிதியை ஒதுக்கி, இந்தத்திட்டத்தை நகர்ப்புறங்களிலும் கொண்டுவர திட்டமிட்டுள்ள தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படும் நிதியை கணிசமாக உயர்த்தவேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில், மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் வியாழக்கிழமை பேசும்போது, “தேவை ஏற்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்” என்று கூறியது நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது.

Next Story