இது தமிழர்கள் பெருமைபெறும் காலம்!


இது தமிழர்கள் பெருமைபெறும் காலம்!
x
தினத்தந்தி 17 Feb 2022 8:06 PM GMT (Updated: 17 Feb 2022 8:06 PM GMT)

சரித்திர காலம் தொட்டே தமிழர்களுக்கு பல பெருமைகள் உண்டு. அறிவாற்றலிலும், வீரத்திலும், விவசாயத்திலும், வர்த்தகத்திலும் தமிழர்கள் ஈடு இணையற்றவர்களாகவே காலம்காலமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

தமிழர்கள் கூர்ந்த மதி உடையவர்கள். இந்தியாவின் தேச வரைபடமே, தெற்கே வரவர கூர்மையாகத்தான் இருக்கிறது. அது தமிழர்களின் கூரிய அறிவை காட்டுகிறது என்று நயமாக எண்ணிக்கொள்ளலாம். கல்வியும், வாய்ப்பும் மட்டும் முறையாக வழங்கப்பட்டால், தமிழர்கள் வையத்தலைமை கொள்வார்கள் என்பதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆனால், அது எப்போதுமே அரிய நிகழ்வாகவே இருந்திருக்கிறது.

தற்காலத்தில் நிலைமை தமிழர்களுக்கு அடுத்தடுத்து பெருமைகளை அள்ளிக்கொண்டு வரும் காலமாக மாறியிருக்கிறது. உலகத்தின் உச்ச நிறுவனங்களில் தமிழர்களே தலைமை ஏற்று தடம் பதிக்கிறார்கள். அமெரிக்க நாட்டின் துணை ஜனாதிபதியாக, தமிழ்நாட்டை வம்சாவளியாக கொண்ட கமலா ஹாரிஸ் முத்திரை பதித்துக்கொண்டிருக்கிறார். அமெரிக்க, ஐரோப்பிய, அரபு நாடுகளில் தொடங்கி, உலகில் பல நாடுகளில் உள்ள புகழ்வாய்ந்த நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்கு தலைமை ஏற்று வழிநடத்த தமிழர்களை தேடுகின்றன. அதற்கு காரணம், தமிழர்களின் பேரறிவும், அனுபவமும், விசுவாசமும் மற்றும் நம்பகத்தன்மையும் ஆகும்.

கடந்த சில நாட்களில், நாம் அனைவரும் பெருமைப்பட்டுக்கொள்ளும் வகையில், 3 தமிழர்களுக்கு முக்கிய பொறுப்புகள் தேடி வந்துள்ளன. மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவி என்பது, இந்தியாவின் பொருளாதாரத்தை வடிவமைக்கும் மிக முக்கிய பொறுப்பாகும். பொருளாதார ஆய்வு அறிக்கை, பட்ஜெட் உருவாக்கம் போன்றவற்றில் அவர்களின் பங்கு மகத்தானது.

ஏற்கனவே, ரகுராம்ராஜன், அரவிந்த் சுப்பிரமணியம், சமீபத்தில் ஓய்வு பெற்ற கிருஷ்ணமூர்த்தியை அடுத்து மதுரையை சேர்ந்த வி.அனந்த நாகேசுவரன் அந்த பொறுப்புக்கு வந்திருக்கிறார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தவர்தான் இவர். 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் பகுதி நேர உறுப்பினராக இருந்த அனந்த நாகேசுவரன், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தவர். நிறைய பொருளாதார நூல்களை எழுதியுள்ளார். பொருளாதாரம் குறித்து இவர் எழுதும் கட்டுரைகள் மிகவும் புகழ்பெற்றவையாகும்.

அடுத்து, சர்வதேச அளவில் புகழ்பெற்ற, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக பேராசிரியை சாந்தி ஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையை சேர்ந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலையில் தங்கப்பதக்கம் பெற்றவர். மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்பேரில், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த 5 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருக்கப்போகிறார்.

அடுத்து, கடந்த சனிக்கிழமை இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான டாடா நிறுவனத்தின் நிர்வாக தலைவராக, ஏற்கனவே தலைமை பொறுப்பில் இருந்த என்.சந்திரசேகரன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். டாடா நிறுவனம் ஏர் இந்தியா விமான கம்பெனியை சில மாதங்களுக்கு முன்பு வாங்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த சந்திரசேகரன், தன் ஆரம்பக்கல்வியை தமிழ் வழியில்தான் படித்துள்ளார். கோயம்புத்தூரில் பொறியியல் கல்வியையும், திருச்சி என்.ஐ.டி.யிலும் படித்தவர். தமிழ்வழி கல்வியில் படித்தாலும், உயர் பதவிக்கு செல்ல முடியும் என்பதற்கு இவரே எடுத்துக்காட்டு. இப்படி, கடந்த சில தினங்களில் மட்டும் 3 தமிழர்கள் பெருமைமிகு பதவிகளுக்கு வந்து, இந்தியாவுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருப்பதை பார்த்தால், “தமிழன் என்று சொல்லடா.. தலைநிமிர்ந்து நில்லடா..” என்று ஒவ்வொரு தமிழனும் நெஞ்சை நிமிர்த்தி பெருமைகொள்ளவும் வைக்கிறது. இவர்களை “ரோல் மாடல்” ஆக வைத்து மற்றவர்களும் பெருமைமிகு உயர் பதவிகளை அடைவதற்கான ஊக்க சக்தியாகவும் விளங்குகிறது.


Next Story