வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கைகள் !


வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கைகள் !
x
தினத்தந்தி 18 Feb 2022 7:26 PM GMT (Updated: 2022-02-19T00:56:49+05:30)

தேமதுர தமிழை வெளிநாடுகளில் பரவ வகைசெய்யும் முயற்சிகளில் தமிழக அரசின் பங்கு குறித்து, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கும் விழா’வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு தமிழ் பற்றாளர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது.

தமிழ்மொழிக்கு முத்தாய்ப்பான ஒரு சிகரம் என்னவென்றால், செம்மொழி தகுதி ஏற்பட்டதுதான். இலக்கிய செழுமையும், இலக்கண அறிவும்கொண்ட தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவிக்கவேண்டும் என்று தமிழறிஞர்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்துவந்தனர். அண்ணா, தன் ஆட்சியில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தினார். அதேபோல, கருணாநிதியும் தமிழ் வளர்ச்சிக்காக எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றினாலும், செம்மொழி அந்தஸ்தை பெற்றுத்தந்ததுதான் தமிழ்கூறும் நல்லுலகம், நேற்றல்ல இன்றல்ல, என்னென்றும் நன்றியோடு அவருக்கு புகழ் மாலை சூட்டும்.

தமிழ்மொழியை செம்மொழியாக்கவேண்டும் என்ற கருணாநிதியின் கோரிக்கையை நிறைவேற்ற, சோனியாகாந்தி துணை நின்றார். 2004-ம் ஆண்டு அக்டோபர் 14-ந்தேதி காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இருந்தபோது, தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் 2007-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி தொடங்கிவைக்கப்பட்டது. ஆரம்பத்தில் மைசூருவில் இருந்த இந்த மத்திய அரசாங்க நிறுவனம், 2008-ம் ஆண்டு மே மாதம் 19-ந்தேதி முதல் சென்னைக்கு மாற்றப்பட்டு, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ற பெயரில் இயங்குகிறது.

அந்த ஆண்டு ஜூலை 24-ந்தேதி கருணாநிதி தன் சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடியை வழங்கி, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கிய திறனாய்வு, மொழி பெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழி தமிழாய்வுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஒரு ஆய்வாளருக்கு, இந்தியாவிலேயே மிக உயரிய விருதான ரூ.10 லட்சம் பரிசு தொகையும், பாராட்டு இதழும், கலைஞரின் உருவம் பொறித்த நினைவுப்பரிசும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

2010-ம் ஆண்டு ஜூலை 23-ந்தேதி கோவையில் நடந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில், ஜனாதிபதியால் முதல் விருது பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பாப்போலாவுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இந்த விருதுகள் வழங்கப்படவில்லை. ஆட்சி மாறினாலும் இதுபோன்ற விருதுகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து வழங்கப்படவேண்டும் என்பது தமிழ் மக்களின் வேண்டுகோளாகும்.

கடந்த மாதம் நடந்த இந்த விருது வழங்கும் விழாவில், இதுவரை வழங்கப்படாத ஆண்டுகளுக்கு உரிய ஆய்வாளருக்கு ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்கிய மு.க.ஸ்டாலின், தமிழ்மொழியின் பெருமைகளை மிக விரிவாக எடுத்துக்கூறி புகழாரம் சூட்டினார். “செம்மொழியின் சிறப்புகளை உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளிலுள்ள 5 பல்கலைக்கழங்களில் செம்மொழி தமிழ் இருக்கை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்ற ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டார்.

இவ்வாறு தமிழ் இருக்கைகள் அமைப்பதன் மூலம் அந்த பல்கலைக்கழகங்களில் தமிழ் தொடர்பான படிப்புகள் தொடங்கவும், ஆய்வுகள் நடக்கவும், அந்த நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு வசதியும் மேற்கொள்ளப்படும் வகையில், அங்கும் தமிழ் பரவ வழிவகுக்கும் என்ற சூழ்நிலையில், பல தமிழறிஞர்கள் இதை வரவேற்கிறார்கள்.

வெளிநாடுகளிலும் தேமதுர தமிழோசை பரவுவதற்கு இத்தகைய நடவடிக்கைகள் பெரிதும் உதவும். முதல்-அமைச்சர் எடுத்த நடவடிக்கைபோல, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் இன்பத் தமிழ்மொழியின் இனிமையை பரப்ப, அவர்கள் வாழும் நாடுகளில் எல்லா முயற்சிகளையும் எடுக்கவேண்டும். அதற்கு தாய் தமிழ்நாடும் துணை நிற்கவேண்டும் என்பதே செம்மொழியான தமிழ்மொழியை போற்றி புகழும் தமிழர்களின் விருப்பமாக இருக்கிறது.


Next Story