உள்ளாட்சி, இனி உள்ளூராட்சி!


உள்ளாட்சி, இனி உள்ளூராட்சி!
x

2011-ம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பிறகு இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து இருக்கிறது.

2011-ம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பிறகு இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து இருக்கிறது. 8 அரசியல் கட்சிகளும், சுயேச்சைகளும் போட்டியிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் 12 ஆயிரத்து 601 உறுப்பினர்களுக்கான தேர்தல் ஒரேநாளில் நடந்தது. 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 83 லட்சத்து 36 ஆயிரத்து 333 ஆக இருந்தாலும் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது.

21 மாநகராட்சிகளில் மொத்த வாக்குப்பதிவு 52.22 சதவீதம்தான். இதில் அதிகபட்சமாக கரூர் மாநகராட்சியில் 75.84 சதவீத வாக்குகளும், குறைந்த வாக்குப்பதிவாக தலைநகரம் சென்னையில் 43.62 சதவீத வாக்குகளும் மக்களால் போடப்பட்டிருந்தன. 138 நகராட்சிகளில் மொத்த வாக்குப்பதிவு 68.22 சதவீதம். தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவாக 81.37 சதவீதமும், நீலகிரி மாவட்டத்தில் குறைந்த அளவாக 59.98 சதவீதமும் பதிவாகி இருந்தன. 489 பேரூராட்சிகளில் கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 86.43 சதவீதமும், குறைந்த அளவாக நீலகிரி மாவட்டத்தில் 66.29 சதவீதமும் பதிவாகியிருந்தன. இதுதவிர தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆக, தமிழ்நாட்டில் மொத்த வாக்குப்பதிவு 60.70 சதவீதமாகும்.

40 சதவீத மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றவில்லை. மாநகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் அதிக அளவு வாக்குப்பதிவு செய்த பெருமையை கரூர் மாவட்டம் பெற்றிருக்கிறது. பேரூராட்சி பகுதி மக்களுக்கு வாக்களிக்க இருந்த ஆர்வம் பெரும்பாலான நகர்ப்புற மக்களுக்கு, குறிப்பாக சென்னை நகர மக்களுக்கு இல்லை என்பது வருந்தத்தக்கது. படித்தவர்களைவிட படிக்காதவர்களே தங்களை யார் நிர்வாகம் செய்யவேண்டும்? என்று தேர்ந்தெடுப்பதில் அதிக முனைப்போடு இருந்திருக்கிறார்கள்.

இந்த தேர்தலில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் மகத்தான மாபெரும் வெற்றியைபெற்று மகுடம் சூடியுள்ளது. இதை இமாலய வெற்றி என்றே சொல்லலாம். அனைத்து மாநகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியுள்ளது. தி.மு.க.வின் 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் நற்சான்றிதழ் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது பலித்துவிட்டது. இவ்வளவுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பிரசாரத்துக்கு செல்லவில்லை. காணொலி மூலமாகவே மாவட்ட வாரியாக பிரசாரம் செய்தார். “வெற்றி விழாவுக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் வருவேன்” என்று மட்டும் கூறியிருந்தார். இந்த தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக கிடைத்த வெற்றிதான்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரையில், வெற்றி வாய்ப்பை இழந்ததோடு இது அதிர்ச்சிக்குரிய தோல்வியாகவும் அக்கட்சிக்கு அமைந்திருக்கிறது. ஆளுங்கட்சியாக இல்லையென்றாலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக மக்களுக்கு தொண்டாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று நிச்சயமாக எடுத்துக்கொள்ளலாம். பா.ஜ.க.வும், அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பிறகு புதுவேகம் கொண்டு செயல்படுகிறது என்றவகையில், இந்த தேர்தலில் தடம் பதித்துள்ளது. ஒரு சில இடங்களில் வெற்றியும், பல இடங்களில் 2, 3-வது இடங்களை பெற்றுள்ளது. தேர்தல் முடிந்துவிட்டது. இனி அனைவரும் மக்கள் சேவையில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அரசு மக்களுக்கு சேவை ஆற்றுவதுபோல, நகர்ப்புற உள்ளாட்சி என்பது அந்தப்பகுதி உள்ளூர் மக்களால், உள்ளூர் மக்களுக்காக பணியாற்றும் அமைப்புகள் என்றவகையில், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள். மக்களுக்கும் தங்கள் குறைகளுக்கு தீர்வுகாண தங்கள் அருகில் உள்ள தங்கள் உறுப்பினர்களை, தங்கள் பேரூராட்சி, நகரசபை தலைவர்களை அணுகலாம். மேயரை அணுகலாம் என்றவகையில், இனி ஜனநாயகம் தழைக்கும். ஏற்கனவே கிராமப்புற ஊராட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இருக்கும்நிலையில், இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் முடிந்துவிட்டது. இனி ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் “உள்ளாட்சி இனி உள்ளூராட்சி” என்ற பெருமை கொடிகட்டும்.

Next Story