9 மாத குழந்தைக்கும் ‘ஹெல்மெட்'!


9 மாத குழந்தைக்கும் ‘ஹெல்மெட்!
x
தினத்தந்தி 23 Feb 2022 7:57 PM GMT (Updated: 2022-02-24T01:27:43+05:30)

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் நிலை இருக்கிறது. உயிரிழப்புகளும் கவலைதரும் வகையில் உள்ளது.

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் நிலை இருக்கிறது. உயிரிழப்புகளும் கவலைதரும் வகையில் உள்ளது. கடந்த ஆண்டில் விபத்துகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட குறைந்தாலும், மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 713 என்பதாக இருக்கிறது. இதில், இருசக்கர வாகனங்களின் விபத்து மட்டும் 24 ஆயிரத்து 826 ஆகும். உயிரிழப்பை எடுத்துக்கொண்டாலும், 2021-ல் இருசக்கர வாகன விபத்துகளில் மட்டும் 6,223 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், ‘ஹெல்மெட்’ போடாதவர்கள் 2,414 பேர்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் இருசக்கர வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதை கருத்தில்கொண்டு, சாலை போக்குவரத்து அமைச்சகம், கடந்த ஆண்டு முதலே கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 2019-ல் திருத்தப்பட்ட மத்திய மோட்டார் வாகன சட்டத்தில், இருசக்கர வாகனத்தில், பின்னால் அமர்ந்து செல்லும் 4 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ‘ஹெல்மெட்’ அணியவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு காற்றிலே பறந்த கீதமாகத்தான் இருக்கிறதே ஒழிய, நடைமுறையில் இல்லை.

பல நீதிமன்ற தீர்ப்புகளில் ‘ஹெல்மெட்’ அணிவதை கட்டாயமாக்கும் வகையில், போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டாலும், அந்த உத்தரவு வந்த ஒருசில நாட்கள் மட்டுமே நடவடிக்கை இருக்கிறதே தவிர, அடுத்து அதைப்பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. தலைக்கவசம் (ஹெல்மெட்) என்பது உயிர்க்கவசம், அதை எல்லோரும் கண்டிப்பாக அணியவேண்டும் என்று உத்தரவு இருந்தாலும், பொதுமக்களின் அலட்சியத்தாலும், அதிகாரிகளின் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டதாலும் பெரும்பாலானோர் அணிவதில்லை.

இந்தநிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி முதல் இருசக்கர வாகனத்தில் செல்லும், 9 மாத கைக்குழந்தை முதல் 4 வயதுவரை உள்ள குழந்தைகளும் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணியவேண்டும். அதுமட்டுமல்லாமல், அந்த குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்பவர்களையும், குழந்தைகளையும் இணைக்கும் வகையில், ‘பெல்ட்’ அணிந்திருக்கவேண்டும். இந்த ‘பெல்ட்’ இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் தர நிர்ணயத்துக்கு ஏற்ப இருக்கவேண்டும். பாதுகாப்பு பட்டையான இந்த ‘பெல்ட்’ மூலம் குழந்தையை வாகன ஓட்டி, தன் உடலுடன் கட்டியிருப்பது கண்டிப்பாக அவசியமாகும். இந்த ‘பெல்ட்’ தேவைக்கு ஏற்ப பெரிதுபடுத்திக்கொள்ளும் வகையிலும் இருக்கவேண்டும்.

இந்த விதியை மீறுபவர்களுக்கு ரூ.1,000 அபராதமும், 3 மாதங்கள் ‘டிரைவிங் லைசென்ஸ்’ தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனம் 40 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது. இப்போது, மார்க்கெட்டில் குழந்தைகளுக்கு ஏற்ற வகையிலான ‘ஹெல்மெட்’ விற்பனைக்கு வரவில்லை என்பதை கருத்தில்கொண்டு, அதை உற்பத்தி செய்ய நிறுவனங்களுக்கும், வாகன ஓட்டிகள் வாங்குவதற்கும் கால அவகாசம்வேண்டும் என்பதை கருத்தில்கொண்டுதான், ஒரு ஆண்டு கழித்து அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

9 மாத குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு செல்வதே பெரும் சிரமம். வெயில், மழையில் இருந்து காப்பாற்ற தலையில் தொப்பி வைத்தாலே, குழந்தைகள் அதை ஏற்றுக்கொள்வதில்லை. தள்ளிவிட்டு விடுகிறார்கள். இந்தநிலையில், 9 மாத குழந்தைக்கு ‘ஹெல்மெட்’ போட முடியுமா?, அந்த எடையை குழந்தைகளால் தாங்க முடியுமா? என்றெல்லாம் விமர்சனங்கள் வருகிறது.

ஆனால், விபத்துகளில் இருந்து குழந்தையின் உயிரும் காப்பாற்றப்படவேண்டும். பெரும்பாலான விபத்துகளில் உயிரிழப்பவர்கள் அல்லது தலையில் காயம் அடைபவர்கள் ‘ஹெல்மெட்’ அணியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை. எனவே, ‘ஹெல்மெட்’ அணிவது கஷ்டம் என்றாலும், கண்டிப்பாக அணிந்துகொள்வதே நல்லது. குழந்தைகள் மட்டுமல்லாமல், அந்த குழந்தைகளை அழைத்து செல்லும் பெரியவர்களும் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணிந்திருந்தால், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் தலைக்காயத்தில் இருந்தும் தப்பிக்கலாம், உயிரிழப்பில் இருந்தும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற வகையில் இது வரவேற்கத்தக்க திட்டம்தான்.

Next Story