உக்ரைன் போர்! உலக நாடுகளை பாதிக்கும்!!


உக்ரைன் போர்! உலக நாடுகளை பாதிக்கும்!!
x
தினத்தந்தி 24 Feb 2022 7:38 PM GMT (Updated: 2022-02-25T01:08:17+05:30)

எது நடந்துவிடக்கூடாது என்று உலக நாடுகள் அஞ்சிக் கொண்டிருந்ததோ, அது நேற்று காலை முதல் நடக்கத் தொடங்கிவிட்டது.

எது நடந்துவிடக்கூடாது என்று உலக நாடுகள் அஞ்சிக் கொண்டிருந்ததோ, அது நேற்று காலை முதல் நடக்கத் தொடங்கிவிட்டது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடும் போர் தொடுத்துவிட்டது. கிழக்கு ஐரோப்பாவிலுள்ள நாடு உக்ரைன். பரப்பளவில் ரஷியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இதன் மக்கள்தொகை 4.41 கோடி. தலைநகரம் கீவ். 1991-ம் ஆண்டு சோவியத்யூனியன் சிதறுண்டபோது, அதில் ஒரு அங்கமாக இருந்த உக்ரைன், தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. இதன் கிழக்கிலும், வடகிழக்கிலும் ரஷிய நாட்டு எல்லை இருக்கிறது. வடக்கில் பெலாரஸ், மேற்கில் போலந்து, சுலோவாக்கியா, ஹங்கேரி போன்ற நாடுகளும், தெற்கே மால்டோவா, ருமேனியா நாடுகளும் உள்ளன.

உக்ரைன் நாட்டில் 30 சதவீதம் பேர் ரஷியமொழி பேசுபவர்கள் என்பதால், அங்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் இருந்துவிடக்கூடாது என்பதிலும், ஐரோப்பிய யூனியனிலுள்ள 27 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ‘நேட்டோ’ அமைப்பில் உக்ரைன் சேர்க்கப்படக்கூடாது என்பதிலும், ரஷியா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

ரஷிய ராணுவ உதவியுடன் உக்ரைனிலுள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள், லுகான்ஸ்க் மற்றும் டன்ஸ்ட்க் பிராந்திய பகுதிகளை கைப்பற்றிவிட்டனர். 2014-ம் ஆண்டில், உக்ரைனில் ஒரு அங்கமாக இருந்த கிரிமியா மீது படையெடுத்த ரஷியா, அதை தன்னோடு சேர்த்துக்கொண்டது. ‘நேட்டோ’ அமைப்பு விவகாரத்தில், கடந்த சில ஆண்டுகளாகவே ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே சுமுகமான சூழ்நிலை இல்லை.

கடந்த சில நாட்களாகவே உக்ரைன் எல்லையில் 1½ லட்சம் ரஷிய படைகள் குவிக்கப்பட்டிருந்தன. பெலாரசில் ரஷிய போர் ஒத்திகை பயிற்சியும் நடந்து கொண்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில், நேற்று அதிகாலை ரஷிய படைகள் தங்கள் வான்வழி தாக்குதலை தொடங்கின. இதை அறிவித்த புதின், “உக்ரைன் நாட்டு மக்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகள் ரஷிய நடவடிக்கையில் தலையிட முயற்சித்தால் அதற்கான விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்துள்ளார்.

மேலும், உக்ரைனை நேட்டோவுடன் இணைக்கக்கூடாது என்ற ரஷியாவின் கோரிக்கையை, அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் புறக்கணிக்கிறது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ள புதின், உக்ரைன் ராணுவத்தினர் தங்கள் ஆயுதங்களை கீழேபோட்டுவிட்டு, போர்க்களத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வான்வழி தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு, ‘பாராசூட்’ மூலம் ஆயிரக்கணக்கான வீரர்களை உக்ரைனுக்குள் இறக்கி, தரைவழி தாக்குதலையும் ரஷியா தொடங்கிவிட்டது. எந்தப்பக்கம் திரும்பினாலும் போரின் அவலம் தெரிகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்கள் உக்ரைனில் சிக்கித்தவிக்கிறார்கள். ஆனால், அங்கு தவித்துக் கொண்டிருக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியும், விமான நிலையங்கள் மூடப்பட்டதால் தடைபட்டுள்ளது. இதனால், இந்திய மக்கள் அவரவர் இருக்கும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருந்துகொள்ளும்படி, தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தப்போர் ஏற்பட்டு ஒரு சில நிமிடங்களிலேயே இந்திய பங்குச்சந்தை வெகுவாக சரிந்தது. தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,856 உயர்ந்தது. ரஷிய நாட்டின் பணமான ரூபிளின் மதிப்பு 9 சதவீதம் சரிந்துவிட்டது. கச்சா எண்ணெய் விலையும் ஒரு பீப்பாய்க்கு 100 டாலரை தாண்டிவிட்டது. இதனால், விலைவாசியும் உயரும் அபாயம் இருக்கிறது. நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இப்போதைக்கு இது உலகப்போராக மாற வாய்ப்பு குறைவு என்றாலும், அந்த நிலையும் வந்துவிடக்கூடாது என்பது எல்லோருடைய அச்சமாக இருக்கிறது. உடனடியாக உக்ரைன் போரை ஒரு முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. சபையும், உலக நாடுகளும் அனைத்து நடவடிக்கைகளையும் மின்னல் வேகத்தில் மேற்கொள்ளவேண்டும். அங்குள்ள இந்திய மாணவர்கள், இந்திய மக்களை எப்படியாவது மீட்டுக் கொண்டுவர மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story