உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள்!


உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
x
தினத்தந்தி 25 Feb 2022 8:05 PM GMT (Updated: 2022-02-26T01:35:48+05:30)

கடந்த 2 நாட்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்துள்ள போர் மிக உக்கிரமாக இருக்கிறது.

கடந்த 2 நாட்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்துள்ள போர் மிக உக்கிரமாக இருக்கிறது. தலைநகர் கீவ் அநேகமாக கைப்பற்றப்பட்ட நிலையில், இந்தப்போர் எந்த நேரத்திலும் முடிவுக்கு வந்துவிடும் என்பது ஆறுதலாக இருக்கிறது.

ரஷியா அருகில் இருக்கும் உக்ரைன் நாட்டில் மருத்துவக்கல்வி படிப்பதற்கான செலவு மிகமிக குறைவு. மேலும், இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டது என்பதால், இங்குள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் அங்கு மருத்துவம் படிக்க ஆர்வம் காட்டிவருகின்றனர். மேலும், ‘நீட்’ தேர்வு எழுத வேண்டிய தேவையுமில்லை. இந்தியாவிலிருந்து 20 ஆயிரம் மாணவர்களும், குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து ஏறத்தாழ 5 ஆயிரம் மாணவர்களும் உக்ரைன் நாட்டில் படித்து வருகிறார்கள். இதுதவிர, பல்வேறு பணிகள், வர்த்தகத்துக்காக புலம் பெயர்ந்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

உக்ரைனில் போர் மேகம் சூழ்ந்திருந்தபோதே, கடந்த ஒரு வார காலமாக மத்திய அரசாங்கமும், அங்குள்ள இந்திய தூதரகமும், இந்தியர்களை நாடு திரும்புமாறு கூறியபோதும், போர் வருமா? என்ற நிச்சயமற்ற நிலையில், யாரும் திரும்பி வராமல் இருந்துவிட்டார்கள். இப்போது, போர் மூண்ட நிலையில், எல்லோருமே பாதுகாப்பாக நாடு திரும்ப நினைக்கிறார்கள். உக்ரைன் அரசாங்கம், “யாருமே வீட்டைவிட்டு வெளியேறவேண்டாம். தேவையான உணவுப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். விளக்கை அணைத்துவிடுங்கள்” என்றெல்லாம் கூறுவது, தமிழக மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலர் தந்தி டி.வி.யோடு தொடர்புகொண்டு, “எங்கள் பெற்றோருக்கு நாங்கள் விடுக்கும் செய்தி, நாங்கள் நலமாக இருக்கிறோம். பயப்படாதீர்கள்” என்று கூறினாலும், அவர்கள் அனைவருமே, “நாங்கள் தமிழ்நாட்டுக்கு திரும்பவேண்டும். தூதரகத்துக்கு செய்தி அனுப்புகிறோம், பதில் இல்லை” என்கிறார்கள். பாதாள அறைகளிலும், சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் ஏராளமானவர்கள் தங்க வேண்டிய சூழ்நிலையில், உணவு இல்லாமல், தண்ணீர் இல்லாமல் தவிப்பதை எடுத்துச் சொல்கிறார்கள். இது அரசின் கவனத்தை ஈர்த்தும் வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மாணவர்களை மீட்டு கொண்டுவரும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை மாநில தொடர்பு அலுவலராக நியமித்துள்ளார். மாவட்டந்தோறும் தொடர்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு, அவர்களின் செல்போன் எண்கள், இ-மெயில் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு வரை 1,500 தமிழக மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் அரசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளனர். இந்த சூழ்நிலையில், தமிழக மாணவர்கள் நாடு திரும்புவதற்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இப்போது அங்குள்ள சிக்கல் என்னவென்றால், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை கடைசியாக அங்கு சென்ற இந்திய விமானமே, பெரும் இன்னலுக்கு இடையேதான் கீவ் நகரில் தரை இறங்கி, இந்தியர்களை மீட்டுக் கொண்டுவந்திருக்கிறது. சகஜமான விமானப் போக்குவரத்து தொடங்கிய பிறகுதான், தமிழக அரசின் கட்டண சலுகையை பயன்படுத்தி நமது மாணவர்கள் திரும்ப முடியும். அதேநேரத்தில், இன்னும் ஓரிரு நாட்களில் போர் முடிந்துவிட்டால், சகஜநிலை திரும்பிவிடும். எனவே, மாணவர்கள் திரும்பி வரவேண்டியநிலை ஏற்படுமா?. ஏனெனில் அடுத்த ஓரிரு மாதங்களில் இறுதித்தேர்வு எழுதவேண்டிய நிலையில், தமிழக மருத்துவ மாணவர்கள் உடனடியாக வந்துவிட்டு, சில நாட்களில் திரும்பிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு அவசியம் ஏற்படுமா? என்ற கருத்தும் நிலவுகிறது.

இந்தநிலையில், உக்ரைன் நாட்டின் தெற்கு எல்லை பகுதியிலுள்ள ருமேனியா மற்றும் ஹங்கேரி வழியாக விமானம் மூலம் இந்தியர்களை மீட்டு கொண்டுவர மத்திய அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் மகிழ்ச்சியளிக்கிறது. உக்ரைன் ராணுவம் போரை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷியா அறிவித்துள்ளது. மொத்தத்தில் எல்லோருமே, போர் எப்போது முடிவடையும்? என்பதைத்தான் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

Next Story