உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்கள் படும்பாடு!


உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்கள் படும்பாடு!
x
தினத்தந்தி 28 Feb 2022 8:01 PM GMT (Updated: 2022-03-01T01:31:28+05:30)

கடந்த வாரம் வியாழக்கிழமை அதிகாலையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படையினர் தங்கள் தாக்குதலை தொடர்ந்தனர்.

கடந்த வாரம் வியாழக்கிழமை அதிகாலையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படையினர் தங்கள் தாக்குதலை தொடர்ந்தனர். எங்கு பார்த்தாலும் ஏவுகணை வீச்சு, குண்டு மாரி பொழிதல், ராக்கெட் குண்டுகள் வீச்சு என்ற நிலையில், கிழக்கு உக்ரைன், கிரிமியா, பெலாரஸ் வழியாக தரைப்படைகளும் உக்ரைனுக்குள் ஊடுருவின. உக்ரைன் ராணுவமும் எதிர்தாக்குதலை மேற்கொண்டது.

குண்டு மழையிலிருந்து மக்கள் தப்பிக்க, கடும் குளிரையும் தாங்கிக்கொண்டு, மெட்ரோ சுரங்க ரெயில் நிலையங்களிலும், பதுங்கு குழிகளிலும், பாதாள அறைகளிலும் தஞ்சம் அடைந்தனர். உக்ரைனில் படிக்கும் 20 ஆயிரம் மாணவர்களும் இந்தியா திரும்ப அபயக்குரல் எழுப்பினர். உக்ரைனில் வான்வழி மூடப்பட்டதால், எல்லைப்புற நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து வழியாக மாணவர்களை மீட்டுக்கொண்டுவர, மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. ரஷியா தனது ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ரத்துசெய்ய வைத்துவிட்டது.

இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவுக்கு வருவதற்காக போலந்து எல்லைக்கு வரும் மாணவர்கள் மீது உக்ரைன் ராணுவம் அவமரியாதை செய்தது மட்டுமல்லாமல், தாக்குதலையும் மேற்கொள்கிறது. மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் கடும் குளிரில், குண்டு மழைகளுக்கு இடையே பல கிலோ மீட்டர் தூரம் நடந்து போலந்து எல்லைக்கு வரும் மாணவர்களிடம், இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தங்களுக்கு ஆதரவாக ஓட்டுபோடவில்லை என்ற கோபத்தில் தாக்குதலை மேற்கொள்கிறார்கள். காலில் விழுந்து கதறிய மாணவியை மிதித்து தள்ளியிருக்கிறார்கள். பல மாணவர்களை தரதரவென்று இழுத்து தள்ளியிருக்கிறார்கள். காலால் மிதித்து, உதைத்து இருக்கிறார்கள். அடிக்கக்கூட செய்திருக்கிறார்கள்.

“நள்ளிரவு 12 மணிக்கு எல்லையில் குளிரில் நின்றேன். காலை 10 மணிவரை போலந்து நாட்டுக்குள் என்னை போகவிடவில்லை” என்று ஒரு மாணவி தனக்கு நேரிட்ட சோக சம்பவத்தை கூறியிருக்கிறார். பல மாணவர்கள் எல்லையில் நடந்த சித்ரவதையை தாங்க முடியாமல், என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்ற முடிவுடன் தாங்கள் தங்கியிருந்த இடத்துக்கே மீண்டும் திரும்பி சென்றுவிட்டனர். இந்தியர்களை மீட்க மத்திய மந்திரிகள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்ட பிரதமர் மோடியின் மனிதாபிமானமிக்க நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது.

என்றாலும், உடனடியாக மத்திய அரசாங்கம் உக்ரைன் நாட்டுடனும், அங்குள்ள தூதரக அதிகாரிகளுடனும் பேசி, மாணவர்கள் எந்தவித துன்பத்துக்கும் ஆளாகாமல், எல்லைகளை கடந்து இந்தியா திரும்பிவர ஏற்பாடு செய்யவேண்டும். கார்கிவ் நகரத்திலிருந்து, போலந்து, ஹங்கேரி, ருமேனியா நாடுகளின் எல்லைக்கு வரவேண்டுமென்றால், 1,400, 1,600, 1,200 கிலோ மீட்டர் தாண்டித்தான் வரமுடியும். ஆனால், ரஷிய எல்லைப்பகுதியிலுள்ள பெல்கோராட் சர்வதேச விமான நிலையம் 100 கிலோ மீட்டர் தூரத்தில்தான் இருக்கிறது. எனவே, உக்ரைன் எல்லையை தாண்டி ரஷியாவுக்கு சென்று, அங்கிருந்து இந்தியா திரும்புவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்தால், கார்கிவ் நகரிலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் அங்கு சென்று இந்தியா திரும்ப முடியும் என்று, மாணவர்களை உக்ரைன் சென்று படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும் காண்டிராக்டர் ஒருவர் கூறுகிறார்.

எனவே, அதையும் மத்திய அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். மொத்தத்தில், இந்தியா திரும்ப விரும்பும் மாணவர்கள், எந்தவித இன்னலுமின்றி பாதுகாப்பாக திரும்புவதற்கு உரிய அளவில் விமானங்களை ஏற்பாடு செய்யவேண்டும். இந்திய ராணுவ விமானங்களையும், குறிப்பாக அதிகம் பேர் பயணம் செய்யும் வகையிலான விமானங்களையும் அனுப்பி, அடுத்த சில நாட்களுக்குள் இந்திய மாணவர்களை அழைத்துவரவேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

Next Story