வெளிநாட்டு மருத்துவ படிப்புக்கு ஏன் வந்தது மவுசு?


வெளிநாட்டு மருத்துவ படிப்புக்கு ஏன் வந்தது மவுசு?
x
தினத்தந்தி 1 March 2022 7:43 PM GMT (Updated: 2022-03-02T01:13:52+05:30)

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்ததினால், அங்கு மருத்துவம் படிக்கும் தமிழக மாணவர்கள் உள்பட இந்திய மாணவர்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்ததினால், அங்கு மருத்துவம் படிக்கும் தமிழக மாணவர்கள் உள்பட இந்திய மாணவர்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். உக்ரைனில் நிலவும் கடும் குளிருக்கு இடையே, பனிப்பொழிவுக்கு இடையே, குண்டு மழையில் இருந்து தப்பித்து, சொந்த ஊருக்கு எப்படியாவது திரும்பிவிடவேண்டும் என்று தவிக்கிறார்கள். உக்ரைனில் மருத்துவம் படிக்கும் 18 ஆயிரம் இந்திய மாணவர்களில், தமிழ்நாட்டை சேர்ந்த 5 ஆயிரம் பேரும் உள்ளனர். உக்ரைனில் மட்டுமல்ல, சீனா, ரஷியா, ஜார்ஜியா, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான் போன்ற பல நாடுகளில், தமிழக மாணவர்கள் மருத்துவம் படித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் இல்லாத மருத்துவக் கல்லூரிகளா?, ஏன் இவர்கள் எல்லாம் வெளிநாடு போய் படிக்கிறார்கள்? என்ற கேள்விக்கு விடைகாண வேண்டுமென்றால், இங்கு ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. கடந்த ஆண்டை கணக்கிட்டால், 1 லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் ‘நீட்’ தேர்வு எழுதியிருக்கிறார்கள். ஆனால், இருக்கும் இடங்களோ 7,825 தான். மீதமுள்ள மாணவர்கள் அனைவரும் எப்படியாவது மருத்துவம் படிக்கவேண்டும் என்ற தனியாத வேட்கையுடன், கடல் கடந்து எங்கு வேண்டுமானாலும் போய் படிக்கலாம் என்ற லட்சியத்தில் இருக்கிறார்கள்.

இதற்கு வசதியாக, வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான கட்டணம் மிகவும் குறைவாக இருக்கிறது. அங்கும் ஆங்கிலம்தான் பாடமொழி. அந்த மருத்துவப் படிப்புகளும் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டது. அங்கு 4½ ஆண்டுகள் படித்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு வந்து பணியாற்ற எப்.எம்.ஜி. என்று கூறப்படும் தேர்வை எழுதி தேர்வு பெற்றுவிட்டால், எம்.பி.பி.எஸ். பட்டத்தை பெற்றவர்களாக கருதப்படுவார்கள். இங்கேயும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது.

இந்தியாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதலில் இடம் கிடைக்கவேண்டும். இடம் கிடைத்தால், அதற்காகும் கட்டணத்தை கணக்கிட்டால், வெளிநாடுகளில் படிக்க செல்வது மிகமிக குறைந்த கட்டணமாக இருக்கிறது. இந்த ஆண்டு ஜார்ஜியா நாட்டில் மருத்துவம் படிப்பதற்கு இடம் கிடைத்த தூத்துக்குடி மாணவியின் பெற்றோர், அங்கு ஆகும் செலவு குறித்து கூறும்போது, “ கல்விக்கட்டணம் ஒரு ஆண்டுக்கு 5 ஆயிரம் டாலர்தான். இந்திய ரூபாய் மதிப்பில், ஏறத்தாழ 3 லட்சத்து 75 ஆயிரம் ஆகும். இதுதவிர, மாதம் உணவு மற்றும் விடுதிக் கட்டணமாக ஏறத்தாழ ரூ.20 ஆயிரம் ஆகிறது. பல நாடுகளிலுள்ள மருத்துவ கல்லூரிகளில் ‘நீட்’ தேர்வு தேவையில்லை என்றாலும், ஜார்ஜியாவில் ‘நீட்’ தேர்வை எழுதினால் மட்டும் போதும் என்பதே தகுதியாக இருக்கிறது” என்று கூறினர்.

இந்த நிலையில், இதுபோன்று வெளிநாடுகளில் படிக்க மாணவர்கள் செல்லும் நிலையை தவிர்க்க, பிரதமர் நரேந்திரமோடி ஒரு நல்ல ஆலோசனையை கூறியிருக்கிறார். “மாநிலங்களில் நிறைய மருத்துவ கல்லூரிகளை தனியார் தொடங்கவேண்டும். மாநில அரசுகள் அவர்களுக்கு உரிய நிலங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும். நமது குழந்தைகள் இந்தியாவிலேயே படிக்கட்டும். இப்போது, நமது குழந்தைகள் உலகின் சின்னஞ்சிறு நாடுகளுக்கு சென்று மருத்துவம் படிப்பதற்கு பதிலாக இங்கேயே படிக்கட்டும்” என்று பேசியிருக்கிறார். மருத்துவக் கல்வி படிப்பதற்கான இடங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென்றால், அரசும், தனியாரும் நிறைய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கவேண்டும். அதுமட்டுமல்லாமல், ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்பதற்கு இதுவும் ஒரு வலுவான காரணமாக இருக்கிறது.

மருத்துவ கல்விக்காகும் செலவை வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைப்பதற்கான வழிவகைகளையும் மத்திய-மாநில அரசுகள் காணவேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ கல்வி கட்டணம் குறைவாக இருக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு ஆகும் செலவுகளையும் குறைப்பதற்கும், அவர்களுக்கு ஊக்கச் சலுகைகள் வழங்குவதற்கும் மத்திய-மாநில அரசுகள் முன்வரவேண்டும்.

Next Story