ஒரே நாடு - ஒரே பத்திரப்பதிவு!


ஒரே நாடு - ஒரே பத்திரப்பதிவு!
x
தினத்தந்தி 2 March 2022 8:04 PM GMT (Updated: 2022-03-03T01:34:17+05:30)

தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் ஒரு முக்கியத்துறை பத்திரப்பதிவு துறையாகும்.

தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் ஒரு முக்கியத்துறை பத்திரப்பதிவு துறையாகும். டாஸ்மாக் மது விற்பனைக்கு அடுத்து, அதிக வருவாய் கிடைக்க வகைசெய்யும் இந்த துறையில், மாநிலம் முழுவதும் 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் இருக்கின்றன.

தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்ட ஒரு அறிக்கையில், பதிவுத்துறையில் கடந்த பிப்ரவரி மாதம் வரையில் 26 லட்சத்து 95 ஆயிரத்து 650 பத்திரப்பதிவுகள் மூலம் ரூ.12,096.36 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சாதனையை பதிவுத்துறை படைத்துள்ளது. இந்த நிதி ஆண்டு அதாவது, இந்த மாத இறுதிக்குள் இந்த வருவாய் ரூ.13 ஆயிரம் கோடியை எட்டும் என்று பெருமைப்பட தெரிவித்துள்ளார். இது ரியல் எஸ்டேட் துறை பெற்ற வளர்ச்சியை காட்டுகிறது. தமிழ்நாட்டில் முத்திரைத்தாள் கட்டணமாக 7 சதவீதமும், பதிவுக்கட்டணமாக 4 சதவீதமும் என 11 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்தநிலையில், இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், நாட்டில் எந்த இடத்திலும் சொத்துகள் மற்றும் பத்திரங்களை பதிவு செய்யும் வகையில், ‘ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு’ மென்பொருள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் தேசிய பொதுவான பத்திரப்பதிவு முறையோடு இணைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “ஏற்கனவே, ஜி.எஸ்.டி. என்று சொல்லி, முழுக்க.. முழுக்க.. தமிழகத்தின் நிதி ஆதாரங்கள் மத்திய அரசாங்கத்துக்கு போய்விடுகிறது. இப்போது லேட்டஸ்ட்டாக பத்திரப்பதிவு வருவாயையும், மாநிலங்களுக்கு கிடைக்காமல் செய்ய ‘ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு’ என்ற திட்டத்தை கொண்டுவர இருக்கிறார்கள். மாநில அரசிடம் விட்டுவைத்திருக்கும் வருவாய்களில் பத்திரப்பதிவு வருவாய் முக்கியமானதாகும். அதிலும் கை வைக்கிறார்கள் என்றால், மாநில அரசுகளின் நிதி உரிமையை முழுக்க.. முழுக்க.. இவர்களே விழுங்கி ஏப்பம்விட பார்க்கிறார்களா?, பறிக்க பார்க்கிறார்களா?, பிறகு மாநிலங்கள் தங்கள் அரசுகளை எப்படி நடத்துவது?, தங்கள் மக்களை எப்படி பாதுகாப்பது?” என்று கூறியுள்ளார்.

‘ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு’ திட்டத்தின் மூலம் நாட்டின் எந்த இடத்திலும், தமிழ்நாட்டிலுள்ள சொத்துகளை பதிவு செய்யமுடியும். எங்கிருந்து வேண்டுமானாலும் பத்திரப்பதிவு என்றால், தமிழ்நாட்டில் பதிவுசெய்ய முடியாத போலி ஆவணங்களை வேறு மாநிலங்களுக்கு சென்று எளிதாக பதிவு செய்துவிடும் நிலை ஏற்பட்டுவிடும் என்றும் கருதப்படுகிறது. ஆனால், மத்திய அரசாங்கம் கொண்டுவர நினைக்கும் தனித்துவ நிலப்பகுதி அடையாள எண் மூலமாக இப்போது தமிழக வருவாய்த்துறை, நில அளவைத்துறை, பதிவுத்துறையில் பயன்படுத்தப்படும் நடைமுறைகளின் தொடர்ச்சியை பெறமுடியாது. நமது கலாசாரப்படி, நிலங்களை வாரிசுகளுக்கு பிரிக்கும்போது, உட்பிரிவு செய்யப்படும் நிலையில், பெரும் கேள்விக்குறியாக மாறிவிடும். இப்போது, கணினிமயமாக்கப்பட்டுள்ள தரவுகளின் நிலை, பயனற்ற நிலைக்கு சென்றுவிடும்.

தமிழ்மொழியிலுள்ள சிறப்பு ழகரம் போன்ற தனித்துவமான ஒலி குறிப்புகளை, வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்டிருக்கும் மென்பொருளைக்கொண்டு மொழி பெயர்க்கும் பட்சத்தில், ஒலி குறிப்பு பிழைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தேசிய பொதுவான பத்திரப்பதிவு மென்பொருளில், தற்போது தமிழக அரசு பதிவுத்துறையில் பயன்படுத்தப்படும் பல அலகுகள் இல்லை. எனவே, தற்போது பதிவுத்துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் ‘ஸ்டார்’ மென்பொருள் தேசிய பொதுவான பத்திரப்பதிவு மென்பொருளைவிட பொதுமக்களுக்கு தேவையான அதிக வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட நிலையில் சேவைகளை வழங்குகிறது.

எனவே, மத்திய மென்பொருளுக்கு மாறும்போது, தமிழக மக்கள் தற்போது பயன்படுத்திவரும் சேவைகளை வழங்க முடியாதநிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசாங்கமும் ‘ஒரே நாடு - ஒரே பத்திரப்பதிவு’ முறையை செயல்படுத்தும் முன், தமிழக அரசு உள்பட அனைத்து மாநிலங்களுடன் சாதக, பாதகங்களை கலந்தாலோசித்து இது தேவையா?, இல்லையா? என்பதை முடிவெடுக்கவேண்டும்.

Next Story